வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிற்கான வானிலை முன்னறிவிப்பு..!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் தற்போது கிடைக்கும் மழை எதிர்வரும் 19.12.2023 செவ்வாய்க்கிழமை வரை தொடரும் வாய்ப்புள்ளது ( சில வேளைகளில் அதற்கு பின்னரும் தொடரும் வாய்ப்புள்ளது).

அத்தோடு இன்று வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் சற்று வேகமான காற்றும்( 30- 40 கி.மீ/ மணி) இடையிடையே வீசும் வாய்ப்புள்ளது. இன்று முதல் அடுத்த 72 மணித்தியாலங்களுக்கு சற்று குளிரான வானிலை நிலவக் கூடும்.



அதேவேளை தற்போதைய நிலையின் படி இந்த மாதம் முடிவடைவதற்கு இடையில்( 31.12.2023) மேலும் இரண்டு காற்றுச் சுழற்சிகள் உருவாகும் வாய்ப்புக்கள் உள்ளன. இது தற்போதைய நிலையின் படியே. இதில் மாற்றங்கள் ஏற்படலாம். ஆனால் ஆகக்குறைந்தது ஒரு காற்றுச் சுழற்சியாவது தோன்றும்.

 

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் நிலம் முழுவதும் நிரம்பிய நிலையில் உள்ளது. வடக்கு மாகாணத்தின் அனைத்து மேற்பரப்பு நீர்நிலைகளும் நிரம்பியுள்ளன. சகல குளங்களினதும் நீரேந்து பிரதேசங்களிலும் நிலம் நிரம்பியுள்ள நிலையில் 10 மி.மீ. மழை கிடைத்தாலும் அந்த நீர் அந்தக் குளங்களுக்கே வரும்.



எனவே குளங்களால் வெளியேற்றப்படும் மேலதிக உபரி நீரும் மழை நீரும் சேர்ந்து முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களின் சில பகுதிகளில் வெள்ள நிலைமையை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த சில நாட்களுக்கு தொடர்ந்தும் மழை கிடைக்கும் வாய்ப்புள்ளதனால் இந்த வெள்ள அனர்த்த பிரதேசங்களின் அளவு அதிகரிக்க கூடும்.



எனவே வெள்ள அனர்த்தம் ஏற்படக்கூடிய பகுதிகளில்( தாழ்நிலப் பகுதிகள், ஆற்றங்கரையோரங்களை அண்மித்த பகுதிகள், குளங்களின் நீரேந்து பிரதேசங்கள், குளங்களின் வான் பாயும் நீர் வெளியேறும் பகுதிகளுக்கு அண்மித்த பகுதிகள், வெள்ள வடிகால்களுக்கு அண்மித்த பகுதிகள்) உள்ள மக்கள் வெள்ள நிலைமைகளை எதிர்கொள்ளக் கூடிய வகையில் தயாராக இருப்பது அவசியம்.

தயாராக இருந்து வெள்ளம் வராவிட்டால் எமக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஆனால் நாம் அசட்டையாக இருந்தால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களை எதிர் கொள்வதற்கு சிரமப்படுவோம். எனவே விழிப்பாக இருப்பது சிறந்தது.
– நாகமுத்து பிரதீபராஜா