சிஐடி எனக் கூறி கைவரிசையை காட்டிய மூவர் வவுனியா பொலிசாரால் கைது..!

சிஐடி எனக் கூறி வவுனியா மற்றும் கிளிநொச்சி ஆகிய இடங்களில் திருட்டில் ஈடுபட்ட மூவர் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று (30) இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவத்தில் மகாறம்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த 23 மற்றும் 28 வயதுடைய இரு இளைஞர்களும், கிளிநொச்சியைச் சேர்ந்த 29 வயது இளைஞர் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் உள்ள பேருந்து தரிப்பிடப் பகுதியில் நேற்றைய தினம் (29) நின்ற மூன்று இளைஞர்கள் அவ் வீதியால் மோட்டர் சைக்கிளில் வந்த இளைஞன் ஒருவரை மறித்து தாம் சிஐடி எனக் கூறி, தம்மை தாண்டிக்குளம் குளக்கட்டு பகுதியில் இறக்கிவிடுமாறு கூறியுள்ளனர்.

இதனை நம்பிய குறித்த இளைஞன் அவர்களை ஏற்றிக் கொண்டு தாண்டிக்குளம் குளக்கட்டுப் பகுதியால் சென்ற போது குறித்த இளைஞனிடம் இருந்த கைத் தொலைபேசியை பறித்து கொண்டு மூன்று இளைஞர்களும் தப்பி சென்றுள்ளனர்.

இதனையடுத்து, குறித்த மூவரும் மடுகந்த பகுதிக்கு சென்று அங்கு வீதியால் சென்ற பெண் ஒருவரின் சங்கிலியை அறுத்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.குறித்த சம்பவங்கள் தொடர்பில் வவுனியா பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வழிகாட்டலில் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பாதிகாரி தலைமையில் பொலிஸ் குழுவினர் விரைந்து விசாரணைகளை ஆரம்பித்தனர்.

இதன் போது குறித்த மூன்று இளைஞர்களும் கைது செய்யப்பட்டதுடன், அவர்களிடம் இருந்து திருடப்பட்ட சங்கிலி மற்றும் கைத் தொலைபேசி என்பனவும் மீட்கப்பட்டன.அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணையின் போது வவுனியாவில் திருடப்பட்ட 2 மோட்டர் சைக்கிள்கள் மீட்கப்பட்டதுடன், கிளிநொச்சியில் திருடப்பட்ட மோட்டர் சைக்கிள் ஒன்றும், மடிக்கணினி ஒன்றும், கைத்தொலைபேசி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் திருடப்பட்ட பொருட்கள் கிளிநொச்சி பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளின் பின் திருடப்பட்ட பொருட்களையும் குறித்த மூவரையும் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.