யாழில் பரீட்சை முடிந்தவுடன் மாணவனும் மாணவியும் ஓட்டம்; நிர்வாணமாக்கி சித்திரவதை..!

யாழ், கோப்பாய் பகுதியில் உயர்தர பரீட்சை முடிந்ததும், மாணவியுடன் தலைமறைவான இளைஞனை கடத்தி சித்திரவதை செய்து, கொள்ளையடித்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த குற்றத்துடன் தொடர்புடைய சந்தேகசநபர்கள் பலர் தலைமறைவாகியுள்ள நிலையில், அவர்களையும் கைது செய்ய கோப்பாய் பொலிசார் விசாரணைகளை முடுக்கி விட்டுள்ளனர்.

கோப்பாய் பிரதேசத்திலுள்ள 21 வயதான மாணவனும், மாணவியும் காதல் வசப்பட்டிருந்தனர். தற்போது நடைபெற்று வரும் க.பொ.த உயர்தர பரீட்சையில் இருவரும் தோற்றியுள்ளனர்.நேற்று முன்தினம் (13) பரீட்சை முடிந்ததும், மாணவனும், மாணவியும் ஒன்றாக தலைமறைவாகி விட்டனர்.

இருவரும், முல்லைத்தீவில் உள்ள மாணவனின் உறவினர் வீடொன்றில் தங்கிருப்பதை அறிந்த மாணவியின் குடும்பத்தினர், சில அடியாட்களையும் அழைத்துக் கொண்டு இரண்டு வாகனங்களில் முல்லைத்தீவு சென்றனர்.

நேற்று, முல்லைத்தீவு சென்ற இந்த கும்பல், வீடொன்றில் தங்கியிருந்த மாணவனையும், மாணவியையும் பிடித்தனர். இருவரையும் தனித்தனியாக வாகனங்களில் ஏற்றி, யாழ்ப்பாணம் அழைத்து வந்தனர்.

மாணவியை வீட்டுக்கு அழைத்து சென்றனர். மாணவனை, இருபாலையிலுள்ள அடியாள் ஒருவரின் வீட்டுக்கு கொண்டு சென்றனர்.அங்கு மாணவனை அடித்து சித்திரவதை செய்தனர். மாணவியுடனான காதல் உறவை தொடரக்கூடாது என மிரட்டியுள்ளனர்.

அத்துடன், மாணவனின் ஆடைகளை களைந்து, நிர்வாணமாக வீடியோ படமும் எடுத்தனர்.

மாணவனிடமிருந்து 2 கையடக்க தொலைபேசிகளை பறித்ததுடன், அவரிடமிருந்து ஏரிஎம் அட்டையை பறித்து, அருகிலுள்ள மதுபானச்சாலையொன்றுக்கு சென்று, அந்த ஏரிஎம் அ்டையின் மூலம் 4500 க்கு மதுபானம் கொள்வனவு செய்து அருந்தியுள்ளனர்.

பின்னர், மாணவனை விடுதலை செய்தனர்.

மாணவன் இது தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார். தற்போது, யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.இந்த கடத்தலுடன் தொடர்புடைய மாணவியின் தந்தை, தாயின் சகோதரி, மாணவியின் சகோதரன் ஆகியோர் கோப்பாய் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய ஏனையவர்கள் தலைமறைவாகி விட்டனர். அவர்களையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2 வாகனங்களையும் பொலிசார் தேடி வருகின்றனர்.