தாறுமாறக செய்தி வெளியிடுகிறீர்கள்; தனிப்பட்ட தாக்குதல்கள் மேற்கொள்கிறீர்கள்..!

சமூகத்தை எப்போதும் ஒரு கொந்தளிப்பான நிலையில் வைத்திருக்க வேண்டும் என்ற மனப்பான்மையோடு மிகவும் கீழ்த்தரமான நிலையில் தற்போதுள்ள ஊடகவியலாளர்கள் செயற்படுகின்றார்கள் என யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவித்தார்.

ஊடக அமைச்சின் ஏற்பாட்டில் வடக்கு ஊடகவியலாளர்களுக்கான இரண்டு நாள் பயிற்சிப்பட்டறையின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

தற்போதுள்ள நெருக்கடி நிலையில் நாட்டினை எவ்வாறு முன்னோக்கிக் கொண்டு செல்லலாம் அல்லது எமது பிரதேசத்தில் உள்ள சவாலான விடயங்கள் உதாரணமாக டெங்கு மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கையிடலாம். ஆனால் தற்போதைய நிலையில் அவ்வாறான ஒன்றும் நடைபெறவில்லை.இருக்கிற பிரச்சினையை இன்னும் கொஞ்சம் கிளப்பிவிட்டால் செய்தி கொஞ்சம் பரபரப்பாக போகும். அந்த நிலையில் தான் தற்போது ஊடகவியலாளர்கள் செயற்படுகிறார்கள்.அந்த விடயம் மாற்றப்பட வேண்டும். முதுகில் புண் இருந்தால் தான் காடு நுழைய பயம் என்று கூறுவார்கள். என்னுடைய முதுகில் புண் இல்லை நான் எதற்குள்ளும் புகுந்து விடுவேன்.ஆனால் முதுகில் புண்ணை ஏற்படுத்துகின்ற வேலையை தற்பொழுது ஊடகவியலாளர்கள் செய்கின்றார்கள். மறைமுகமாக அச்சுறுத்துகின்றார்கள்.

ஊடகவியலாளர் தான் சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் அந்த பொறுப்பை சரியாக நீங்கள் செய்ய வேண்டும் உங்களுடைய நாக்கினாலும் பேனையாலும் சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய சக்தி காணப்படுகின்றது.எனவே இன்றைய பயிற்சி பட்டறையின் மூலம் மாற்றங்கள் ஏற்பட வேண்டும். யாழ்ப்பாண மாவட்டம் டெங்கில் முன்னணியில் உள்ளது.கடந்த இரண்டு மூன்று மாதங்களாக டெங்கு சம்பந்தமான விடயத்தினை நாங்கள் ஆராய்ந்து பார்த்தோம். டெங்கு தொடர்பில் ஊடகங்கள் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்று சமூகத்தில் எங்கெங்கே பிரச்சினை காணப்படுகின்றதோ அதனைத் தான் ஊடகங்கள் பார்க்க வேண்டும். ஆனால் யாழ்ப்பாணத்தில் ஊடகங்கள் அதனை பார்க்கவில்லை தனிப்பட்ட ரீதியாக தாக்குதல்களை மேற்கொள்கின்றார்கள். அது மாற்றப்பட வேண்டும்.

நான் சிறுவனாக இருந்த காலத்தில் பத்திரிகைகள் வாசித்து பலவிதமான விடயங்களை அறிந்து கொண்டேன் எனது தந்தையாரும் அதனை ஊக்கப்படுத்தினார்.ஆனால் தற்பொழுது எனது பிள்ளைகளுக்கு கூறும் விடயம் பத்திரிகைகளை வாசிக்காதீர்கள் ஏனென்றால் தனிப்பட்ட ரீதியாக தாக்குகின்றார்கள். நான் எனது பிள்ளைகளுக்கு இதனை கூறியிருக்கின்றேன்.

எனவே ஊடகவியலாளர்கள் இந்த விடயம் தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். நாட்டினை முன்னோக்கி கொண்டு செல்வதில் ஊடகவியலாளர்களுக்கும் அதிக பங்குண்டு. எனவே எதிர்காலத்தில் ஊடகவியலாளர்கள் அவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்றார்.