அரச அநீதிக்கு எதிராக வவுனியாவில் பாரிய எதிர்ப்புப் போராட்டம்..!

சிவராத்திரி தினத்தன்று சிவ பக்தர்கள் மீதும் பொலிஸார் நடத்திய வன்முறைகளை எதிர்த்தும், கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ள சிவபக்தர்களை விடுவிக்கக்கோரியும் பாரிய எதிர்ப்பு போராட்டம் ஒன்றை எதிர்வரும் 15 ஆம் திகதி வவுனியாவில் முன்னெடுக்கவுள்ளதாக வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய பரிபாலன சபை தலைவர், செல்லத்துரை சசிகுமார் அறிவித்துள்ளார்.



இது குறித்த அவர் அனுப்பியுள்ள ஊடக அறிக்கையில்,

வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் அருள் எல்லோர்க்கும் கிடைக்கட்டும்..!

எமது ஆலய வளாகத்தில், கடந்த 08 ஆம் திகதி அன்று சிவராத்திரி வழிபாடுகளில் ஈடுபட்டிருந்த எமது ஆலய பரிபாலன சபையின் நிர்வாகிகள் மீதும், சிவ பக்தர்கள் மீதும் பொலிஸார் நடத்திய வன்முறைகளை எதிர்த்தும், கைதுசெய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ள சிவபக்தர்களை விடுவிக்கக்கோரியும் பாரியளவிலான வெகுஜனப் போராட்டம் ஒன்றை நடத்தவுள்ளோம்.



எதிர்வரும் 15.ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு நெடுங்கேணி சந்தியில் ஆரம்பிக்கும் இந்தப் போராட்டமானது, வவுனியா வடக்கு பிரதேச செயலகம் வரைக்கும் பேரணியாகச் சென்று, இலங்கைக்கான ஐ.நா வதிவிடப் பிரதிநிதி மற்றும் இலங்கையிலுள்ள வெளிநாட்டுத் தூதரகங்களுக்கான மகஜர் கையளிக்கப்படும்.



மேலும் அரச அநீதிக்கு எதிரான இந்தப் போராட்டத்தில், அனைத்துத் தமிழ் மக்களையும், சமயம் சார்ந்த அமைப்புக்களையும், தமிழ் அரசியல்வாதிகளையும், தமிழ் உணர்வாளர்களையும், சிவில் சமூகத்தினரையும், பல்கலைக்கழக மாணவர்களையும், ஊடகங்களையும் கலந்து கொள்ளுமாறு தயவுடன் கேட்டுக் கொள்கின்றோம்- என்றுள்ளது.