இஸ்ரேல் மீது ஈரான் 200 இற்கும் மேற்பட்ட ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்..!

இஸ்ரேல் மீது ஈரான் 200 இற்கும் மேற்பட்ட ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களை நடத்தியுள்ளது. குறிப்பிட்ட இலக்குகளை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.

இதன்படி, மிகவும் சக்திவாய்ந்த தாக்குதலாக இந்த தாக்குதல் கருதப்படுகிறது. சிரியாவில் உள்ள ஈரானிய தூதரகம் மீது இஸ்ரேல் கடந்த 1ஆம் திகதி மேற்கொண்ட தாக்குதலில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.



காசா போர் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பரவுவதை தடுக்கும் இராஜதந்திர முயற்சிகளுக்கு மத்தியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதலுக்கு பதிலடிகொடுக்கப்படும் என ஈரான் முன்னதாக எச்சரிக்கை விடுத்திருந்தது.

இதன்படி, அடுத்த 48 மணித்தியாலங்களுக்குள் இஸ்ரேல் மீது வலுவான தாக்குதல் நடத்தப்படலாம் என அமெரிக்க புலனாய்வு அமைப்புகளை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.



இருப்பினும், குறித்த தாக்குதல்களை எதிர்கொள்ளும் வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தயாராக இருப்பதாக இஸ்ரேல் தெரிவித்திருந்தது.

அத்துடன், ஈரானிய படைகள் தமது வான் எல்லைக்குள் பிரவேசிப்பதனை இஸ்ரேல் தடுத்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

எவ்வாறாயினும், இஸ்ரேலின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள இராணுவத் தளம் சிறிதளவு சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.



இதனிடையே, பல நாடுகள் மத்திய கிழக்கு வான்வெளிக்குள் தங்கள் விமானங்கள் நுழைவதை நிறுத்தி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளன.

மேலும், இஸ்ரேல் விடுத்துள்ள வேண்டுகோளுக்கு இணங்க ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையின் விசேட கூட்டம் இன்று (14) பிற்பகல் நடைபெறவுள்ளது.