தமிழரின் விடிவு காலம் நினைவேந்தலில் பிரகாசமாக மிளிர்கின்றது – சி.வி.விக்னேஸ்வரன்

தமிழரின் விடிவு காலம் இவ்வருட நினைவேந்தல் தீபச் சுடரின் மத்தியில் பிரகாசமாக ஒளிர்வதை நான் காண்கின்றேன் என யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

15 ஆவது ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இன்று முள்ளிவாய்க்கால் நினைவு தினம். எமது கட்சி இளைஞர்கள் முள்ளிவாய்க்கால் சென்றுள்ளார்கள்.இங்கிருக்கும் நாம், 2009ம் ஆண்டில் முள்ளிவாய்க்காலில் மரணிக்கப்பட்ட எமது உறவுகள் ஞாபகார்த்தமாய் தீபம் ஏற்றி பிரார்த்தனையில் ஈடுபட்டோம்.

இராமாயணம், மகாபாரதம் போன்ற காவியங்களில் தர்மவழி நின்றவர்கள் 14 வருடங்கள் அடங்கிப் போனார்கள். 15ம் ஆண்டில் அவர்கள் எழுச்சி பெற்றதைப் பார்க்கின்றோம்.

அதே போல இன்று எமது தமிழ் உறவினர்களிடையே உணர்வு பூர்வமான எழுச்சியை வட கிழக்கு மாகாணங்களிலும், கொழும்பிலும் இன்னும் சில இடங்களிலும் பார்க்கக் கூடியதாக இருக்கின்றது.

எமது புலம் பெயர் உறவுகள் நாட்டுக்கு நாடு நின்று இன்றைய தினம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை மனதில் நிறுத்தி இந்நாளை ஒரு கருநாளாக கருதி நிற்கின்றனர்.

14 வருட எமது வனவாச காலம் முடிவுக்கு வந்துள்ளது. இவ்வருட நினைவேந்தல் வாரமும் அதிபர் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்தும் கால கட்டமும் இணைந்து வந்துள்ளன.எம் சார்பில் உலகில் பல நாடுகள் குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளன. எமது அரசியல் கட்சிகள் ஒன்று சேர்ந்து பொது வேட்பாளரை ஆதரிக்க முன் வந்துள்ளன.

அரசாங்கம் கூட நினைவேந்தலைத் தடைசெய்யக்கூடாது என்ற முடிவுக்கு வந்துள்ளது. இனஅழிப்பு பற்றிய எமது ஆங்கில நூல் இக்கால கட்டத்திலேயே வெளிவந்துள்ளது.

தமிழரின் விடிவு காலம் இவ்வருட நினைவேந்தல் தீபச் சுடரின் மத்தியில் பிரகாசமாக ஒளிர்வதை நான் காண்கின்றேன் எம் மக்கள் இனியும் வாழாதிருக்கக் கூடாது.வட கிழக்கு தமிழ் பேசும் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எமது பொது அபிலாசைகளை வெளிக் கொண்டுவரும் விதத்தில் இனியேனும் நடந்து கொள்வோமாக.

இவ் வருடம் உள்நாட்டு, வெளிநாட்டு தமிழ் உறவுகளின் வாழ்வில் ஒரு முக்கியமான வருடமாகப் பரிணமிக்கட்டும், அன்று உயிர் நீத்த உறவுகளை எம் மனதில் இந்நேரத்தில் நிலை நிறுத்துவோமாக என தெரிவிக்கப்பட்டுள்ளது.