எந்தவொரு நிலையிலும் 13ஐ முழுமையாக நடைமுறைப்படுத்தக் கூடாது – பௌத்த பீடங்கள் கூட்டாகக் கோரிக்கை

நாட்டின் இறையான்மைக்கும், சுயாதீனத்தன்மைக்கும், தேசிய பாதுகாப்பிற்கும் பாரதூரமான அச்சுறுத்தலாக அமையும் அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் முழுமையாக நடைமுறைப்படுத்தக் கூடாது என்று நான்கு பௌத்த மகா பீடங்களும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் நேரடியாக வலியுறுத்தியுள்ளன.

கண்டிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (02) வியாழக்கிழமை மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்றுக் கொண்டார்.

இதன் போதே மல்வத்து பீட மகாநாயக்க திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர், அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன தேரர், அமரபுர பீடத்தின் மகாநாயக்க தொடம்பான ஸ்ரீ சந்திரசிறி தேரர் மற்றும் ராமாஞ்ஞ பீடத்தின் மகாநாயக்க மல்குலாவே ஸ்ரீ விமல தேரர் ஆகியோரால் கையெழுத்திடப்பட்ட கடிதம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு நிறைவேற்றதிகாரி என்ற ரீதியில் நீங்கள் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ள கருத்து நாட்டுக்குள் பெரும் பதற்றமான சூழல் ஏற்படுவதற்கு காரணமாக அமைந்துள்ளது.

காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள், மரபு ரீதியானதும் வரலாற்று சிறப்பு மிக்கதுமான ஸ்தலங்கள் தொடர்பான அறிக்கைகள் மற்றும் மத ரீதியான அமைப்புக்களை ஒழுங்குபடுத்தல் உள்ளிட்ட அதிகாரங்களை செயற்படுத்த மாகாணசபைகளுக்கு வாய்ப்பளிக்கப்படுகின்றமையானது நாட்டில் பிரிவினைவாதம் செயல்பட வழிவகுக்கும்.

இதற்கு முன்னர் யுத்தம் பதவி வகித்த நிறைவேற்றதிகார ஜனாதிபதிகளால் 13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தினை முழுமையாக நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்காமைக்கான காரணம் நாட்டுக்குள் பதற்றமான நிலைமை உருவாகி விடக் கூடா என்பதனாலாகும் என்பதை நீங்கள் நன்றாக அறிவீர்கள்.

மக்களின் இறையான்மையைப் பாதுகாப்பதற்காக முன்னின்று செயற்படும் நிறைவேற்றதிகார ஜனாதிபதியொருவர், மத்திய அரசாங்கத்தின் சுயாதீனத்தன்மை வீழ்ச்சியடைவதற்கு காரணமாக அமையும் இவ்வாறான அரசியலமைப்பு திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கின்றமையானது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தும்.

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் பிராந்திய மற்றும் உலகலாவிய சக்திகளின் ஒத்துழைப்புக்களைப் பெற்றுக் கொள்வதற்காக சில நிபந்தனைகளுக்கு இணக்கப்பாட்டை எட்ட வேண்டிய அழுத்தம் ஏற்படுகின்றது. நாட்டின் இறையான்மை மற்றும் சுயாதீனத்தன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் இவ்வாறான யோசனைகள் நிராகரிக்கப்பட வேண்டும் என்பதை மகா சங்கத்தினர் என்ற ரீதியில் நாம் வலியுறுத்துகின்றோம்.

75 ஆவது சுதந்திர தினத்தை பெருமையுடன் கொண்டாடும் நாம் இலங்கையர்கள் என்ற ரீதியில் இனம், மத பேதமின்றி நாட்டின் பாதுகாப்பு மற்றும் அமைதிக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டமைக்கான சான்றுகள் எமது வரலாற்றில் காணப்படுகின்றன.

3 தாசாப்தங்களுக்கும் அதிக காலம் பாரதூரமான உள்நாட்டு யுத்தத்தினை எதிர்கொண்டுள்ளோம். இதன் காரணமாக பாரியளவில் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்காக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்திருக்கின்றது. வடக்கிலுள்ள அரசியல்வாதிகளுக்கு அமைச்சரவையில் அங்கத்துவம் வகிப்பதற்கு வாய்ப்பளிக்கப்பட்டு அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கான ஒத்துழைப்புக்களும் வழங்கப்பட்டுள்ளன.

எவ்வாறிருப்பினும் 13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்தி , அதன் ஊடாக காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் உள்ளிட்டவற்றை மாகாண சபைகளுக்கு வழங்குவதானது அரச நிர்வாகத்தை சீர்குலைப்பதாகவே அமையும்.

இதன் மூலம் நாட்டின் ஸ்திரத்தன்மை, இறையான்மை மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பில் பாரதூரமான பிரச்சினைகள் ஏற்படக் கூடும்.

எனவே 13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தினை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நடைமுறைப்படுத்தக் கூடாது என்பதை மகா சங்கத்தினர் என்ற ரீதியில் வலியுறுத்துகின்றோம்.’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.