போர்த்துகல் கழகத்தில் விளையாட ஒப்பந்தமான 55 வயதான ஜப்பானிய வீரர்..!

55 வயதான ஜப்பானிய கால்பந்தாட்ட வீரர் ஒருவர் போர்த்துகல் கழகம் ஒன்றில் விளையாடுவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

கஸுயோஷி மியுரா எனும் இவ்வீரர் எதிர்வரும் 26 ஆம் திகதி தனது 56 ஆவது பிறந்த தினத்தை கொண்டாவுள்ளார்.

ஜப்பானிய தொழிற்சார் கால்பந்தாட்ட லீக்கில் மிக அதிக வயதில் கோல் புகுத்திய வீரர் அவர்.

ஜப்பானின் இறுதியாக சுசுக்கா பொயின்ட் கெட்டர்ஸ் கழகத்துக்காக விளையாடி வந்த அவர், அக்கழகத்திலிருந்து, கடன் அடிப்படையில் போர்த்துகலின் 2 ஆம் பிரிவு கழகமான ஒலிவேரென்ஸ் கழகத்துக்காக இணைக்கப்பட்டுள்ளார்.

போர்த்துகல் கழகத்தில் இணைவதன் மூலம், தனது கால்பந்தாட்ட வாழ்க்கையில் 6 ஆவது நாடொன்றின் கழகத்துக்காக அவர் இணைந்துள்ளார்.

ஏற்கெனவே, பிரேஸில், ஜப்பான், இத்தாலி, குரோஷியா, அவுஸ்திரேலியா நாடுகளிலுள்ள கழகங்களின் சார்பாகவும் அவர் விளையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1986 ஆம் ஆண்டு பிரேஸிலின் சான்டோஸ் கழகத்துக்காக விளையாடி தொழிற்சார் கால்பந்தாட்ட வாழ்க்கையை ஆரம்பித்த மியுரா, 2017 ஆம் ஆண்டு தனது 50 ஆவது வயதில் தீஸ்பகுசத்சு கழகத்துக்கு எதிரான போட்டியில், கோல் புகுத்தி சாதனை படைத்திருந்தார்.

ஜப்பானிய தேசிய அணிக்காக அவர் 89 போட்டிகளில் விளையாடி, 55 கோல்களைப் புகுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.