துடுப்பாட்டத்தில் ஷுப்மான், பந்துவீச்சில் பாண்டியா அசத்தல்; தொடரைக் கைப்பற்றிய இந்தியா

இந்தியாவுக்கும் நியூஸிலாந்துக்கும் இடையில் அஹமதாபாத், நரேந்த்ர மோடி விளையாட்டரங்கில் புதன்கிழமை (01) நடைபெற்ற 3ஆவதும் கடைசியுமான சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா 168 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச இருபது 20 கிரிக்கெட் தொடரை 2 – 1 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா கைப்பற்றியது.

அத்துடன் மூவகை சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியா தனது சொந்த மண்ணில் 25 தொடர்களில் தொடர்ச்சியாக தோல்வி அடையாமல் இருந்து வருகிறது.

மேலும் சர்வதேச கிரிக்கெட் பேரவையில் பூரண அந்தஸ்துடைய நாடுகளுக்கு இடையிலான சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டியில் ஓட்டங்கள் ரீதியில் இந்தியா மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்தது.

இந்தியாவின் வெற்றியில் ஷுப்மான் கில் குவித்த சதமும் அணித் தலைவர் ஹார்திக் பாண்டியாவின் 4 விக்கெட் குவியலும் முக்கிய பங்காற்றின.

ஷுப்மான் கில் ஆட்டமிழக்காமல் 126 ஓட்டங்களைப் பெற்றதன் மூலம் சர்வதேச இருபது 20 கிரிக்கெட்டில் இந்தியா சார்பாக தனிநபருக்கான அதி கூடிய ஓட்டங்களைப் பெற்று வரலாறு படைத்தார்.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இந்தியா 20 ஓவர்களில் 4 விக்கெட்களை மாத்திரம் இழந்து 234 ஓட்டங்களைக் குவித்தது.

2ஆவது ஓவரில் இஷான் கிஷன் (1) ஆட்டமிழந்த போது இந்தியாவின் மொத்த எண்ணிக்கை 7 ஓட்டங்களாக இருந்தது. ஆனால், அதன் பின்னர் ஷுப்மான் கில், ராகுல் த்ரிப்பதி ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 42 பந்துகளில் 80 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினர்.

த்ரிப்பதி 22 பந்துகளில் 4 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களை விளாசி 44 ஓட்டங்களைப் பெற்றார்.

தொடர்ந்து ஓரளவு திறமையாகத் துடுப்பெடுத்தாடிய சூரியகுமார் 13 பந்துகளில் 24 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார். (125 – 3 விக்.)

இந் நிலையில் ஜோடி சேர்ந்த ஷுப்மான் கில், ஹார்திக் பாண்டியா ஆகிய இருவரும் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 4ஆவது விக்கெட்டில் 40 பந்துகளில் 103 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்தியாவை பலம் வாய்ந்த நிலையில் இட்டனர்.

கடைசி ஓவரின் முதல் பந்தில் ஆட்டமிழந்த ஹார்திக் பாண்டியா 17 பந்துகளில் 30 ஓட்டங்களைப் பெற்றார்.

மறுபுறத்தில் அபாரமாகத் துடுப்பெடுத்தாடிய ஷுப்மான் கில் 63 பந்துகளில் 12 பவுண்டறிகள், 7 சிக்ஸ்கள் உட்பட 126 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.

நியூஸிலாந்து பயன்படுத்திய 7 பந்துவீச்சாளர்களில் தலா ஒரு ஓவரில் டெரில் மிச்செல் 6 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் மிச்செல் ப்றேஸ்வெல் 8 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். ப்ளயார் டிக்னர், இஷ் சோதி ஆகியோரும் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்திய போதிலும் இந்திய துடுப்பாட்ட வீரர்களால் நையப்புடைக்கப்பட்டனர்.

மிகவும் கடினமான 235 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து 12.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 66 ஓட்டங்களுக்கு சுருண்டது.

3ஆவது ஓவரில் 4ஆவது விக்கெட் இழந்தபோது நியூஸிலாந்தின் மொத்த எண்ணிக்கை வெறும் 7 ஓட்டங்களாக இருந்தது.

டெரில் மிச்செல், மிச்செல் சென்ட்னர் ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் பகிர்ந்த 34 ஓட்டங்களே நியூஸிலாந்து இன்னிங்ஸில் அதிசிறந்த இணைப்பாட்டமாக அமைந்தது.

டெரில் மிச்செல் நிதானம் கலந்த வேகத்துடன் துடுப்பெடுத்தாடி 3 சிக்ஸ்கள், ஒரு பவுண்டறியுடன் 35 ஓட்டங்களைப் பெற்று கடைசியாக ஆட்டமிழந்தார். அவரை விட மிச்செல் சென்ட்னர் 2ஆவது அதிகபட்சமாக 13 ஓட்டங்களைப் பெற்றார்.

இந்திய பந்துவீச்சில் ஹார்திக் பாண்டியா 4 ஓவர்களில் 16 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களைக் கைப்பற்றி சர்வதேச இருபது 20 கிரிக்கெட்டில் தனது அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதியைப் பதிவு செய்தார்.

அவரை விட உம்ரன் மாலிக் 9 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஷிவம் மவி 12 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அர்ஷ்தீப் சிங் 16 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.