காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி அதிரடியாகக் கைது..!

தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவி காசிப்பிள்ளை ஜெயவனிதா இன்றைய தினம் வவுனியா காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உண்மை நிலையினை வலியுறுத்துமாறு கோரி போராட்டம் மேற்கொண்டு வரும் கொட்டகைக்கு சட்டவிரோதமாக மின்சாரத்தினை பெற்றனர் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.



குறித்த சங்கத்தின் செயலாளர் கோ.ராஜ்குமார் விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

நாம் கடந்த 2210 நாட்களாக குறித்த கொட்டகையிலேயே போராடி வருகின்றோம். அந்த கொட்டகைப் பகுதியில் இருந்த மின்சார தூணில் வீதி மின்விளக்கு ஒன்று பொருத்தப்பட்டிருந்தது.

எமக்கான மின்சாரம் மின்சார சபையால் வழங்கப்பட்டிருந்தது. வடமாகாண சபை செயற்பாட்டில் இருக்கும் போதே வழங்கப்பட்டிருந்தது. அதில் பழுதுகள் ஏற்ப்பட்டபோதும் கூட இலங்கை மின்சார சபையினை சேர்ந்தவர்கள் வருகைதந்து அதனை சீரமைத்தும் தந்திருந்தனர்.

இந்நிலையிலேயே எமது சங்கத்தின் தலைவி தற்போது கைது செய்துள்ளமையை ஏற்றுக்கொள்ள முடியாது. நாம் சட்டவிரோதமாக மின்சாரத்தை பெறவில்லை. எமது போராட்டத்தினை திசை திருப்புவதற்காகவே இவ்வாறான சட்டங்கள் பிரயோகிக்கப்படுகின்றன எனத் தெரிவித்துள்ளார்.



மேலும் காசிப்பிள்ளை ஜெயவனிதா, சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேனாவின் தேர்தல் பிரசார துண்டு பிரசுரத்தில் தனது மகள் உள்ளதாக கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.