கடந்த வெள்ளிக்கிழமை வெளிநாட்டுப் பயணத்தடை விதிக்கப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர (சொக்கா மல்லி), நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்படுவதற்கு முன்பே நாட்டை விட்டுத் தப்பியோடியுள்ளதாகக் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) கண்டறிந்துள்ளது.
2015ஆம் ஆண்டு கஹவத்த பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் சான்ட தொடங்கோட என்பவர் கொல்லப்பட்ட வழக்கு தொடர்பாக, இரத்தினபுரி மேல் நீதிமன்றத்தால் பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

பின்னர் மேன்முறையீட்டு நீதிமன்றம் அவர்களை விடுவித்தது. இவ் விடுதலையை எதிர்த்துப் பாதிக்கப்பட்டவரின் மனைவி தாக்கல் செய்த மேல்முறையீட்டை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உயர் நீதிமன்றம், பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூவருக்கும் வெளிநாட்டுப் பயணத் தடை விதித்ததுடன், எதிர்வரும் அக்டோபர் 21ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவிட்டது.
இருப்பினும், பயணத் தடையை அமுல்படுத்த சிஐடி முயன்ற போது, பிரேமலால் ஜயசேகர ஆகஸ்ட் 31ஆம் திகதியே தாயிலாந்து நோக்கித் தப்பிச் சென்றுள்ளது தெரியவந்துள்ளது.
இத் தகவலைச் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு சிஐடி உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது.


Recent Comments