ஊடகவியலாளர் நிலாந்தனை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு வருமாறு அழைப்பு..!

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளரும், மனித உரிமை செயற்பாட்டாளரும், சுயாதீன ஊடகவியலாளருமான செல்வக்குமார் நிலாந்தன் அவர்களை இலங்கை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு செங்கலடி ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவில் நடைபெற்ற மணல் அனுமதிப் பத்திரம் வழங்கல் மற்றும் காணி அனுமதிப் பத்திரம் வழங்கலின் போது பயனாளிகளிடம் இருந்து இலஞ்சம் பெறப்பட்டமை தொடர்பாக நடைபெறும் விசாரணை ஒன்றிற்காக கொழும்பில் உள்ள இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு வருமாறு மேற்குறித்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இது குறித்து மேலும் தெரியவருவதாவது இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் ஆணைக்குழுவின் விசாரணைச் சட்டத்தின் கீழ் 1994 இல:19 விசாரணை நடைபெற்று வருகிறது.

மணல் அனுமதிப்பத்திரம் மற்றும் காணி அனுமதிப்பத்திரம் வழங்கும் போது சேவை பயனாளிகளிடம் இருந்து பணம் பெறப்படுவதாக இந்த ஆணைக்குழுவிற்கு கிடைத்த முறைப்பாடு தொடர்பில் ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச செயலகம் மேற்படி சட்டத்தின் கீழ் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.மேற்படி விசாரணைக்கான உண்மைகளை மேலும் தெளிவுபடுத்த உங்களிடம் இருந்து சில அறிக்கைகள் பெறப்பட வேண்டியுள்ளது. எனவே மேற்கூறிய உண்மையை உறுதிப்படுத்தும் வகையில், 29.03.2023 அன்று 11.00 மணிக்கு மேற்படி சட்டத்தின் பிரிவு 5(1) இன் படி உங்களிடம் உள்ள அனைத்து விவரங்களுடன் இந்த ஆணையத்திற்கு வருமாறு உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சிங்களம் பேச உங்களுக்கு சிரமமாக இருந்தால், சிங்களம் பேசக் கூடிய ஒருவரை அழைத்து வாருங்கள் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.கடந்த காலங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்ற காணி மோசடிகள் மற்றும் மண் அனுமதிப் பத்திரம் வழங்குவதில் நடைபெற்று வரும் மோசடிகள், அரசியல் தலையீடுகள், இலஞ்சம் வாங்கும் அதிகாரிகள் குறித்து பல விடயங்களை ஊடகவியலாளர் நிலாந்தன் அவர்கள் ஊடகங்கள் வாயிலாக வெளிக்கொண்டு வந்திருந்த நிலையில் தற்போது இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் விசாரணைகள் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.