நெடுங்கேணி வெடுக்குநாறிமலை பிராமிச் சாசனம் ஒரு பார்வை..!

நயினாமடுவிலிருந்து சுமார் மூன்று மைல் தொலை தூரத்தில் வெடுக்குநாறி மலையுள்ளது. நயினாமடுக் குளத்திற்கு இந்த மலையில் இருந்தே தண்ணீர் வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றன. இந்த மலையானது ஏறத்தாள 300 அடி உயரம் கொண்டதாகக் காணப்படுகின்றது. இந்த மலையைச் சுற்றியுள்ள பகுதியில் ஏராளமான சிறுசிறு மலைக் குன்றுகளும் காணப்படுகின்றது.

இதற்கு அண்மையில் நாகர்குளம் எனப்படும் புராதன சிறு குளமும் ஒன்று உள்ளது. மேலும், இந்த மலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் இலங்கையில் கிறிஸ்துவிற்கு முற்பட்ட காலத்தில் வாழ்ந்த நாகர் இனத்தின் குடியிருப்புகள் இருந்ததற்கான தொல்லியற் சான்றுகள் ஏராளமாகக் கிடைக்கின்றன.



குறிப்பாகக் நாகர்கள் கட்டுமானங்களுக்குப் பயன்படுத்திய “தூண்தாங்கு கல்” அதாவது உருண்டை அல்லது சமச்சீரற்ற கற்களில் சிறு சதுரமாகத் துளையிடப்பட்ட கற்கள் இந்த வெடுக்குநாறி மலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமாக உள்ளன. எனவே வெடுக்குநாறி மலைக்கு அருகில் உள்ள நாகர் குளம் மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளில் காணப்படும் நாகர்களின் தொல்லியற் சிதைவுகள் என்பன அப்பகுதியில் நாகர்கள் வாழ்ந்தமைக்குச் சான்று பகிர்கின்றன.

1970 களில் செனரத் பரணவிதான 54 பிராமிக் கல்வெட்டுக்களின் மற்றும் மொழி பெயர்ப்புக்களையும் வெளியிட்டார் அதில் வவுனியா மாவட்டத்தில் நான்கு பிராமிச் சாசனங்கள் பற்றி குறிப்பிட்டுள்ளார். அதில் ஒன்று வெடுக்குநாறிமலையில் உள்ள பிராமிச் சாசனமும் ஒன்றாகும்.



வெடுக்குநாறி மலையில் உள்ள பிராமி எழுத்துக்கள் தொடர்பாக நோக்குகின்றபோது பொதுவாக இலங்கையின் பிராமிச் சாசன காலம் எனப்படுவது கி.மு 03 ஆம் நூற்றாண்டு தொடக்கம் கி.பி 04 ஆம் நூற்றாண்டு இடைப்பட்ட காலப் பகுதியாகும். இக்காலப் பகுதியில் பிராமி வரிவடிவத்தினைப் பயன்படுத்தி பிராகித மொழியில் கல்வெட்டு மட்பாண்டங்கள். குகைகள், நாணயங்கள், முத்திரைகள் போன்றவற்றில் எழுதப்பட்டதாகும்.

அவ்வாறான சாசனங்களில் தமிழ் மொழிக்குரிய சிறப்பெழுத்துக்களான ற, ன, ழ, ள என்பவற்றின் பயன்பாடும். தமிழக பிராமியின் சிறப்பெழுத்துக்களான ஈ. ம போன்ற எழுத்துக்களும் பரவலாகப் பயன்படுத்தப்பட்டது. அதனடிப்படையில் வவுனியா பெரிய புளியங்குளம், அம்பாறை குடுவில், திருகோணமலை சேருவில, வெல்கம் விகாரைக் கல்வெட்டு போன்றவை தமிழர்கள் பற்றிக் கூறுகின்ற பிராமிக் கல்வெட்டுக்களாகும்.



இலங்கையில் தமிழர்கள் பற்றிக் குறிப்பிடும் ஐந்து கல்வெட்டுக்களில் அனுராதபுரத்தில் உள்ள ஒன்று தவிர மீதி நான்கு கல்வெட்டுக்களும் தமிழர்களின் பூர்வீக இடங்களான வட, கிழக்கு இலங்கையில் உள்ளன. எனவே கி.மு 03 ஆம் நூற்றாண்டிலிருந்தே தமிழர்கள் ஒரு இனமாகவும், தமிழ் மொழியில் பரீட்சாத்தியமுடையவர்களாகவும் இருந்துள்ளனர்.

வெடுக்குநாறி மலையில் நீர்வடி விளிம்புகள் உள்ள இரண்டு குகைகளும், நீர்வடி விளிம்புகள் உள்ள இரண்டு சாய்வான மலைக்குன்றுகளும் காணப்படுகின்றன. இவற்றில் இரண்டு குகைப்பகுதியில் நீர்வடி விளிம்பிற்கு சற்று கீழ் பகுதியில் பிராமி எழுத்துக்கள் காணப்படுகின்றன. அவை தற்போது சேதமடைந்த நிலையில் காணப்படுகின்றது. அவ்வெழுத்துக்கள் கி.பி 02ஆம் நூற்றாண்டிற்கும் கி.மு 01 ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட பிராமி எழுத்துக்களாகும். இதில் தமிழகப் பிராமிக்குரிய சிறப்பெழுத்துக்களின் பயன்பாடுகள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

வெடுக்குநாறி மலையில் இரண்டு சாசனங்கள் காணப்படுகின்றன. அதில் ஒரு சாசனத்தின் பெரும்பாலான பகுதிகள் சிதைவடைந்துள்ளன. மற்றைய சாசனம் நல்ல நிலையில் உள்ளது. இதில் ஒரு சாசனத்தில் “மகா சமுதஹு” என்ற வசனம் தெளிவாக உள்ளது.

இப்பெயரானது தென்னிந்திய வணிகக்குழு ஒன்றின் பெயராகத்தான் இருக்க வேண்டும். ஏனென்றால் தமிழகத்தில் இராமநாதபுரம் மாவட்டத்தில் அழகன்குளம் என்னுமிடத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் பானை ஓடு ஒன்றில் “சமுத”, “சமுதஹு என்ற இரண்டு பெயர்கள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
(புஷ்பரட்ணம் 2017).

தொகுப்பு- நெடுங்கேணி சானுஜன்