இந்துத்துவா சார்புநிலை தமிழ் தேசியத்தை சிதைக்குமா? யதீந்திரா

இந்தக் கட்டுரை தினக்குரலில் கடந்த வாரம் வெளியாகியிருந்தது. எனது கட்டுரைகளை வழமையாக மறுபிரசுரம் செய்யும் இணைய தளங்கள், இந்தக் கட்டுரையை பிரசுரிக்க தயங்குகின்றன. அச்சப்படுகின்றன. இது தொடர்பில் ஆரோக்கியமாக விவாதம் செய்ய விரும்புவர்கள், அவர்கள் கருத்துக்களை முன்வைக்கலாம். கருத்துக்களில் தர்க்கமிருக்க வேண்டும். குதர்க்கமிருக்கக் கூடாது. இவர் அவரின் ஆள், இதற்கு பின்னால் அது -இதுவென்று பேசினால் அது பயனற்றது. எனது வாதங்களை மிகவும் பலமான வாதங்களால் நிராகரிக்க முடிந்தால், நான் மகிழ்சியடைவேன். ஆனால் தமிழ் தேசியமென்னும் ஒற்றைச் சொல் கொண்டு அனைத்தையும் கடந்துவிட முடியாது.

இந்த விடயம் தொடர்பில், அறிவுசார் சமூகத்தின் பிரதிநிதிகள், அரசியல் தரப்புக்கள் – எவரேனும், திருகோணமலையில் பகிரங்க கூட்டங்களை நடத்தும் துனிவு கொண்டால் – அதில் பேசுவதற்கு நான் தயராகவே இருக்கின்றேன். வடக்கு கிழக்கில் எவர் அழைத்தாலும் உரையாற்ற தயார்.

நமது அரசியல் சூழலில், இந்துத்துவா தொடர்பில் பேசுகின்ற, விவாதிக்கின்ற ஒரு போக்கு காணப்படுகின்றது. இந்துத்துவா என்பது, தற்போது இந்தியாவை ஆட்சிசெய்யும் பாரதிய ஜனதா கட்சியினால் முன்னிலைப்படுத்தப்படும் தேசியவாத கருத்தியலாகும். இது ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஸ்தாபகர் சாவகரால் முன்வைக்கப்பட்டது. இந்துவாக இருப்பது என்பதுதான் இதன் உள்ளடக்கமாகும். ஈழத் தமிழ் அரசியல் சூழலை பொறுத்தவரையில், இது ஒரு அண்மைக்காலப் போக்காகும். குறிப்பாக, இந்தியாவில் பாரதிய ஜனதா கட்சி பலமான நிலையில் ஆட்சியை கைப்பற்றியதை தொடர்ந்தே, இவ்வாறானதொரு போக்கு ஈழத் தமிழ் அரசியல் சூழலில் துளிர்விட்டது.



இப்போது அது ஓரளவு வளர்ந்திருக்கின்றது. அதற்கு நன்றாக தன்ணீருற்றி வளர்க்க வேண்டும் – அதில் தவறில்லையென்று ஒரு சாராரும், இல்லை அது ஆபத்தானதென்று இன்னொரு சாராரும் அடிக்கடி முட்டுப்படுவதை காண முடிகின்றது. இந்துத்துவா சார்பு நிலையானது, தமிழ் தேசிய அரசியலை சிதைத்துவிடுமென்பதே, அதனை எதிர்ப்பவர்களின் வாதமாக இருக்கின்றது. இந்த விடயத்தில் தமிழ் தேசியம் பேசும் கட்சிகள் மத்தியில் பெரியளவில் குழப்பங்கள் இருப்பதாக தெரியவில்லை.

அவர்கள் இந்த விடயத்தில் அபிப்பிராயங்களும் கூற முற்படுவதில்லை. ஆனால் கருத்துருவாக்கிகள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகள் என்போர் மத்தியில்தான், இந்த விடயம் அவ்வப்போது விவாதிக்கப்படுகின்றது. அதே போன்று, புலம்பெயர் சூழலிலுள்ள சிலரும் இத்துத்துவா சார்புநிலையை எடுப்பதன் ஊடாக, புதுடில்லியை அணுகலாமென்று எண்ணுவதாக தெரிகின்றது.

இதற்கு சமாந்திரமாக, உண்மையில் இன்னும் பலமாக, இந்துத்துவா அரசியலை கையாள வேண்டுமென்னும் முனைப்பு சிங்கள ஆளும் தரப்பிடமும் காணப்படுகின்றது. இந்தியாவிற்கான இலங்கை தூதுவர், மிலிந்த மொறகொட, இந்த விடயத்தில் பிரத்தியேகமாக செயற்பட்டு வருகின்றார். மொறகொட, ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்தை சந்தித்து கலந்துரையாடுகின்றார், பி.ஜே.பிக்கு நெருக்கமான சிந்தனைக் கூடமான, விவேகானந்தா சர்வதேச நிலையத்துடன் நெருங்கிய தொடர்பை பேணிவருகின்றார்.

இந்தியாவின் தற்போதைய தேசிய பாதுகாப்பு ஆலோசகர், அஜித் குமார் டோவால், குறித்த சிந்தனைக் கூடத்தின் பணிப்பாளராக இருந்தவராவார். இதற்கப்பால், ஆர்.எஸ்.எஸ் பிரமுகர்களுடன் தொடர்புகளை பேணுவதை, ஒரு ராஜதந்திர பணியாவே மொறகொட மேற்கொண்டு வருகின்றார்.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அரசியல் கட்சிதான் பி.ஜே.பி என்பது இகரசியமான ஒன்றல்ல. இந்தியாவின் ஆட்சி இந்துத்துவா சக்திகளின் கையிலிருக்க வேண்டுமென்பதற்காகவே, ஆஸ்.எஸ்.எஸ், பாரதிய ஜனதா கட்சியை உருவாக்கியது. ஆஸ்.எஸ்.எஸ் அமைப்பு தொடர்பிலும், பிரதமர் நரேந்திர மோடி தொடர்பிலும் பலவாறான விமர்சனங்கள் உண்டு. அண்மையில், அமெரிக்காவின் செல்வாக்குமிக்க பணக்காரரும், திறந்த சமூகத்திற்கான நிதியமென்னும் அமைப்பின் இயக்குனருமான, ஜோர்ஜ் சோரஸ், நரேந்திர மோடி தொடர்பில் தெரிவித்த கருத்துக்கள் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது.



அதே போன்று, நரேந்திர மோடி, குஜராத்தின் முதலமைச்சராக இருந்த போது, முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில், அண்மையில் பி.பி.சி ஊடகம், ஆவணப் படமொன்றை வெளியிட்டிருந்தது. அதில் நரேந்திர மோடி, முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையில் தொடர்புபட்டதாக கூறப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து பி.பி.சிக்கு எதிராக இந்தியளவில் கண்டனங்களும், எதிர்ப்புக்களும் வெளியிடப்பட்டன. இவைகள் அனைத்தும் பி.ஜே.பியின் தேர்தல் வெற்றியை பலவீனப்படுத்தும் நோக்கில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படுவதாகவே, பி.ஜே.பி வட்டாரங்கள் கருதுகின்றன.

ஓப்பீட்டடிப்படையில் பி.ஜே.பி பலமாக இருப்பதாகவே நோக்கப்படுகின்றது. முன்னர் எப்போதுமில்லாதளவிற்கு இந்துத்துவா சக்திகள் இந்தியாவில் எழுச்சியடைந்திருக்கின்றன. இந்த எழுச்சியின் விளைவே பி.ஜே.பியின் அபார வெற்றியாகும். பி.ஜே.பியின் வெற்றிக்கு மோடி கவர்ச்சியே பிரதான காரணமாகும். இதன் காரணமாகவே, மோடியின் மீது, பிரத்தியேகமாக விமர்சனங்கள் முன்வைப்படுகின்றன. மோடியின் செல்வாக்கை, நன்மதிப்பை பலவீனப்படுத்துவதன் ஊடாக, ஆளும் பி.ஜே.பியை பலவீனப்படுத்தலாமென்று எண்ணுவதற்கு வாய்ப்புண்டென்று – ஒருவர் வாதிட்டால் அதனை மறுப்பது கடினம்தான்.

இவ்வாறானதொரு பின்னணியில்தான், இத்துத்துவா சார்பு நிலையெடுப்பதன் ஊடாக, பலமான நிலையிலிருக்கும் பி.ஜே.பியை நெருங்கலாமென்றும், அதன் மூலம் ஈழத் தமிழ் மக்கள் நன்மையை பெறலாமென்றும் ஒரு பார்வை, ஈழத் தமிழ் தேசிய அரசியல் பரப்பில் துளிர்விட்டது. தமிழ் நாட்டு ஆதரவாளர்களோடு மட்டும் நிற்காமல், புதுடில்லியிலும் புதிய ஆதரவாளர்களை தேட வேண்டுமென்னும் போக்கொன்று உருவாகியது. ஈழத் தமிழர் அரசியலை பொறுத்தவரையில் பாரம்பரியமாக தமிழ் நாட்டோடு மட்டுமே அரசியல்ரீதியான தொடர்புகள் பேணப்பட்டிருந்தன. இன்றும் இதுதான் பிரதான போக்காக இருக்கின்றது.

தமிழ் நாடு இல்லாமல், புதுடில்லியை அணுக முடியாதென்பதே இதுவரையில் இருந்துவந்த பாhர்வையாகும். ஆனால் பி.ஜே.பியின் எழுச்சி இந்தப் பார்வையில் உடைவை ஏற்படுத்தியிருக்கின்றது. வழமைபோல், தமிழ் நாட்டோடு மட்டும் நின்றால், எமது அணுகுமுறையும் வழமைபோல் தமிழ் நாட்டோடு மட்டும் சுருங்கிவிடும். ஆனால், இந்துத்வா சார்புநிலையில் சிந்தித்தால், எமது அணுமுறை இந்தியா முழுமைக்குமானதாக இருக்கும், இதன் மூலம், புதுடில்லியை இலகுவாக அணுகலாம், இந்தியாவில் பரந்தளவிலான தொடர்பை பேணலாம். இவ்வாறானதொரு பார்வை ஒரு சாராரால் வலுவாக முன்வைப்படுகின்றது.

இதனை இன்னொருசாரார் எதிர்க்கின்றனர். ஈழத் தமிழர் தேசியமென்பது மதச்சார்பற்றதாகும் – எனவே, இத்துத்துவாவை நோக்கி வளைந்தால், தமிழ் தேசியம் சிதைந்துவிடுமென்பதே, அவர்களின் வாதமாக இருக்கின்றது. இந்த விடயங்களை அரசியல்ரீதியில் எவ்வாறு நோக்குவது? உண்மையில் இது அடிப்படையில் 2009இற்கு பின்னரான அரசியலின் விளைவாகும்.

2009வரையில், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூலம், ஒரு தனிநாட்டை அடையமுடியுமென்னும் பார்வையே தமிழ் பெரும்பாண்மையை ஆக்கிரமித்திருந்தது. அந்த நம்பிக்கை தோல்வியடைந்த போது, அடுத்தது என்ன என்னும் கேள்விக்கு பதிலளிக்கக் கூடிய நிலையில் ஈழத்திலும், புலத்திலும் எந்தவொரு கட்சியும், அமைப்பும் இருக்கவில்லை. 2009இவரையில் ஒன்றாக பயணித்த அமைப்புக்கள் மத்தியில் பிளவுகளும் முரண்பாடுகள் தீவிரமடைந்தன.

ஈழத்திலும் அதுவே நடந்தது. ஆரம்பத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பாக இணைந்திருந்தவர்கள், 2009இற்கு பின்னரான கடந்த 13 வருடங்களில் பல கட்சிகளாக பிளவடைந்திருக்கின்றனர். தமிழ் தேசியத்தின் பெயரால் அவர்களை ஒன்றுபடுத்த முடியவில்லை. தமிழ் தேசியத்தின் பெயரால் அவர்களை ஒரு பொது வேலைத்திட்டத்தின் கீழ் ஒன்றிணைக்க முடியவில்லை. இந்த பின்புலத்தில் நோக்கினால், கடந்த பதின்மூன்று வருடகாலத்தில், தமிழ் தேசியம் தொடர்ந்தும் சிதைந்து கொண்டுதான் சென்றிருக்கின்றது.

தமிழ் தேசிய அரசியலுக்கு வெளியிலிருந்தவர்களின் செல்வாக்கு குறிப்பிடத்தக்களவு அதிகரித்திருக்கின்றது. ஒரு குறிப்பிட்ட தமிழ் தரப்பால், அரசின் ஆதரவாளர்களென்றும், தமிழ்த் தேசிய விரோதிகளென்றும் வர்ணிக்கப்படுவர்கள், தேர்தல்களில் வெற்றிபெறுகின்றனர். தமிழ் தேசியத்தின் பெயரால், அவ்வாறானவர்களை மக்கள் மத்தியிலிருந்து அகற்ற முடியவில்லை. இவ்வாறானதொரு பின்புலத்தில் நோக்கினால், இந்துத்துவா சார்புநிலையால் தமிழ் தேசியம் சிதைந்துவிடுமென்று வாதிடுவதானது, மிகவும் பலவீனமான வாதமாகவே இருக்கின்றது.

தமிழ் தேசிய அரசியல் மதச்சார்பற்றதென்று வாதிடுவதில் உண்மையிருந்தாலும் கூட, அதனை ஒரு பலமான வாதமாக முன்வைப்பதற்கான நியாயங்கள் தமிழர் பக்கத்திலில்லை. இந்துத்துவா சார்புநிலையை கைக்கொள்ளுவதால், தமிழர்களுக்கு என்ன கிடைக்குமென்று கேள்வியெழுப்ப முடியுமென்றால், மதச்சார்பற்ற தேசியத்தால், தமிழர்களுக்கு எதைப் பெற்றுக்கொடுக்க முடிந்ததென்னும் கேள்விக்கும் எவரிடமும் பதிலில்லையே! இந்துத்துவா சார்புநிலையை நியாயப்படுத்துவர்கள் இவ்வாறு கேட்கின்றனர். இந்த வாதத்தை கேள்விக்குள்ளாக்கக் கூடிய நிலையில், ஏனையவர்கள் இல்லை.



ஏனெனில், விடுதலைப் புலிகள் இல்லாத கடந்த 13 வருடங்களில், தமிழ் மக்களுக்கு சரியான பாதையை எவராலும் காண்பிக்க முடியவில்லை. இந்த வழிமுறை மட்டுமே சரியானதென்று கூறக் கூடிய எந்தவொரு கட்சியும் மக்கள் மத்தியில் எழுச்சியடையவில்லை. இவ்வாறானதொரு பின்புலத்தில், ஒவ்வொருவரும் தங்களுக்கு சரியானதென்று கருதும் ஒன்றை கைக்கொள்ள முற்படுகின்றனர். தாங்கள் நம்பும் ஒன்றை பரிசோதித்து பார்க்க முற்படுகின்றனர். இந்த இடத்தில்தான் இந்துத்துவா சார்புநிலையென்பதும் ஒரு வழிமுறையாக நோக்கப்படுகின்றது.

இதற்கு என்ன காரணம்? விடுதலைப் புலிகளின் தோல்வி, தமிழ் தேசிய அரசியல் மீது சில கேள்விகளை முன்வைத்தது. பலருக்கும் பலவாறான கேள்விகளிருந்தாலும் கூட, அனைத்து வகையான கேள்விகளும் விடுதலைப் புலிகளின் தோல்வியிலேயே தரித்துநின்றது. ஏன் இவ்வாறானதொரு தோல்வியேற்பட்டது? மூன்று தசாப்தகாலமாக நிலைபெற்றிருந்த ஒரு இயக்கமானது, எவ்வாறு மூன்றே வருடங்களில் அழிக்கப்பட்டது? ஏன் இதனை தடுத்துநிறுத்த முடியவில்லை?

முpக அருகில் – தமிழ் நாட்டில் – இத்தனை கோடி தமிழ் மக்கள் இருந்தனர். மேற்குலக நாடுகளில் பத்துலட்சத்திற்கு மேற்பட்ட புலம்பெயர் தமிழ் மக்கள் இருந்தனர். இத்தனையிருந்தும், முள்ளிவாய்க்கால் அழிவை தடுத்துநிறுத்த முடியவில்லையே! ஏன்?

இந்தக் கேள்விகள் அனைத்திற்குமான பதிலாக இருந்தது, விடுதலைப் புலிகளுக்கு தற்பாதுகாப்பு நிலை ஆதரவு வழங்குவதற்கு ஒரு நாடு இருந்திருக்கவில்லை. அப்படியொரு நாடு இருந்திருக்குமென்றால், அது இந்தியா மட்டுமே. விடுதலைப் புலிகளின் சில வரலாற்று தவறுகளால், இந்தியாவின் ஆதரவை முற்றிலுமாக இழந்துபோயினர்.

இந்தியாவின் தவிர்க்க முடியாத இடம் தொடர்பான பார்வையில், பலரும் உடன்பட்டனர். பிராந்திய அரசியல் பின்புலத்தில், இந்தியாவின்றி, ஈழத் தமிழர் அரசியல் வாழ்வில், அனுவும் அசையாதென்னும் பார்வையை எவராலும் நிராகரிக்க முடியாமல் இருந்தது, விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் கூட, பிராந்திய அரசியல் யதார்த்தத்தை நம்மால் நிராகரிக்க முடியாதென்னும் பார்வையில் அனைவருமே உடன்பட்டனர்.

இந்த இடத்தில் எழுந்த அடுத்த கேள்வி, இந்தியாவின் இடம் தவிர்க்க முடியாததென்றால், எவ்வாறு இந்தியாவுடனான உறவை பலப்படுத்துவது? இதற்கான பாரம்பரிய பதில், தமிழ் நாட்டு ஆதரவு சக்திகளுடன் இணைந்து பணியாற்றுவதன் ஊடாக, புதுடில்லியை தமிழர்களுக்கு சாதமாக திருப்புவது. ஆனால் இந்த அணுகுமுறையால் தமிழர்கள் எதையும் அடைய முடியவில்லை. முள்ளிவாய்க்கால் பேரவலத்திலிருந்து, மக்களை பாதுகாக்க தமிழ் நாட்டால் எதனையும் செய்ய முடியவில்லையயே – பின்னர் எதற்காக தோல்வியடைந்த வழிமுறையை தொடர்ந்தும் கைக்கொள்ள வேண்டும்? இவ்வாறான கேள்விகளுக்கான பதிலாக முன்வைக்கப்பட்டதுதான், இந்துத்துவா சார்புநிலையாகும். அதாவது, ஆளும் பி.ஜே.பிக்கு நெருக்கமாகுவதன் மூலம், இந்தியாவின் வெளிவிவகார அணுமுறையில் மாற்றங்களை ஏற்படுத்தலாமென்னும் வாதமொன்று மேலோங்கியது.

இந்த வாதத்தை முன்வைப்பவர்கள் கூறும் பிறிதொரு விடயம், தமிழ் நாட்டோடு நின்றால், இந்தியாவுடனான எங்களுடைய உறவு, தென்னிந்தியாவுடன் மட்டுப்பட்டுவிடும், ஆனால் இந்;துத்துவா சார்புநிலையை கைக்கொண்டால், இந்தியா முழுவதும் தொடர்புகளை ஏற்படுத்தலாம். நமக்கு எது தேவை? தென்னிந்தியாவுடன் மட்டும் நிற்பதா அல்லது, முழு இந்தியாவுடனும் உறவாடுவதற்கான வாய்ப்புக்களை தேடுவதா? பரந்தளவிலான வாய்ப்புக்களை தேட வேண்டுமாயின், நாமும் பரந்தளவில்தான் சிந்திக்க வேண்டும். இவ்வாறு கூறுபவர்கள், இந்துத்துவா சார்புநிலையை வந்தடைந்திருக்கின்றனர்.

இந்துத்துவா சார்புநிலை தமிழர்களுக்கு கைகொடுக்குமா? இதற்கு உடனடியாகவே – இல்லையென்றோ அல்லது ஆம் என்றோ பதிலளித்துவிட முடியாது. ஆனால் சில விடயங்களை கையாண்டு பார்ப்பதில் தவறில்லை. ஏனெனில் ஏற்கனவே பல்வேறு விடயங்களை கையாண்டு தமிழர்கள் தோற்றுப் போயிருக்கின்றனர். ஒவ்வொரு தோல்வியும் சில அனுபவங்களை தந்திருக்கின்றது. ஆனால் பி.ஜே.பி ஆட்சியிலிருந்தாலும், இல்லாவிட்டாலும் இந்துத்துவா என்பது, இந்தியாவில் சக்திவாய்ந்த ஒன்றாகத்தான் இருக்கப் போகின்றது.