இனி WhatsApp-ல ஒருத்தரும் தப்பு தண்டா பண்ண முடியாது..!

WhatsApp பயன்பாட்டை உலகளவில் பல கோடி மக்கள் பயன்படுத்துகின்றனர். இருப்பினும் இந்த ஆப்ஸில், பல தப்பு தண்டாக்களைப் பயனர்கள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இனி எந்த வாட்ஸ்அப் பயனரும் இந்த தளத்தில் தப்பு செய்ய முடியாதென்று வாட்ஸ்அப் உறுதிப்படக் கூறியுள்ளது. வாட்ஸ்அப் இல் தப்புத் தண்டா நடக்கிறதா? என்று ஷாக் ஆக வேண்டாம்.

இங்கு நாங்கள் குறிப்பிட்ட விஷயம் நீங்கள் நினைப்பது போன்ற மோசமான தப்பு தண்டா இல்லை என்பதை முதலில் தெளிவுபடுத்திக் கொள்கிறோம். தப்புத் தண்டா என்று குறிப்பிட்டது, தவறாக நாம் WhatsApp இல் மெசேஜ் செய்யும் பிழைகளைத் தான் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.



வாட்ஸ்அப் எண்ணற்ற பல அம்சங்களை வழங்கினாலும், நாம் WhatsApp மெசேஜ்ஜில் மேற்கொள்ளும் பிழைகளைத் திருத்த வாட்ஸ்அப் அனுமதிப்பது இல்லை. இது பல பயனர்களுக்கு பெரிய துயரமாக அமைகிறது. தவறாக ஒரு மெசேஜ்ஜை சாட்டில் அனுப்பி விட்டால், அதை எடிட் செய்து திருத்த முடியாது என்பதனால், அந்த மெசேஜ்ஜை டெலீட் செய்து, பிறகுச் சரியான தகவலை மற்றொரு புது மெசேஜ் மூலம் அனுப்ப வேண்டியதாகவுள்ளது. அல்லது * என்று டைப் செய்து, பிறகு பிழையை நமக்கு நாமே புரியும் விதத்தில் WhatsApp-ல் அனுப்பிக்கொள்கிறோம்.

இனி இந்த சிக்கலே வேண்டாம். வாட்ஸ்அப் பயனர்கள் நீண்டகாலமாக எதிர்பார்த்துக் காத்திருந்த அந்த முக்கியமான எடிட்டிங் அம்சம் விரைவில் நமக்குக் கிடைக்கப்போகிறது. ஆம், மக்களே.. இனி வாட்ஸ்அப்பில் தவறாக டைப் செய்த மெசேஜ்களை டெலீட் செய்யாமல், உடனே எடிட் செய்து மாற்றிக் கொள்ள அனுமதிக்கும் புதிய அம்சத்தை WhatsApp சோதனை செய்கிறது.

WhatsApp அதன் சமீபத்திய WhatsApp பீட்டா வெர்ஷன் iOS 23.6.0.74 இல், இந்த புதிய பிரத்தியேக எடிட்டிங் அம்சத்தைச் சோதனை செய்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்த அம்சத்தின் படி, சாட்டில் அனுப்பட்ட மெசேஜ் எடிட் செய்யப்பட்டால், அது அனுப்புனர் மற்றும் பெறுநர் ஆகிய இருவருக்கும், இந்த செய்தி வெற்றிகரமாக எடிட் செய்யப்பட்டு அனுப்பப்பட்டது என்பதைக் காண்பிக்கிறதாம்.



இது அப்படியே நாம் WhatsApp இல் பயன்படுத்தும் Delete For Everyone அம்சத்தைப் போலச் செயல்படுகிறது. ஆனால், இங்கு டெலீட் செய்வதற்குப் பதிலாக இந்த அம்சம் தவறுகளை விரைவாகவும் எளிதாகவும் சரிசெய்ய அனுமதிக்கும். மேற்கொள்ளப்பட்ட மாற்றத்தை லேபிள் மூலம் காண்பிக்கும். வாட்ஸ்அப் பீட்டா பதிப்பின் அனைத்து சமீபத்திய முன்னேற்றங்களையும் கண்காணிக்கும் WABetaInfo இணையதளம் இந்த புதிய அம்சத்தைக் கண்டறிந்துள்ளது.

WABetaInfo-வின் அறிக்கையின்படி, பயனர்கள் தங்கள் மெசேஜ்ஜை அனுப்பிய முதல் 15 நிமிடங்களுக்குள் மட்டுமே எடிட் செய்ய அனுமதிக்கும் விருப்பம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் திருத்தப்பட்ட WhatsApp மெசேஜ்கள் “Edited” என்ற லேபிளால் குறிக்கப்படும் என்பதையும் அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது. இது WhatsApp மெசேஜ்களில் உள்ள ‘Forwarded’ குறிச்சொல்லைப் போன்றது.



இந்த WhatsApp அம்சம், தற்போதைய வாட்ஸ்அப் இன் சமீபத்திய பதிப்பில் உள்ள பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கும். பழைய பதிப்பைப் பயன்படுத்துபவர்கள் இந்த அம்சத்துடன் இணக்கமான சமீபத்திய பதிப்பிற்கு மேம்படுத்தும் வரை எடிட் மெசேஜ் அம்சத்தைப் பயன்படுத்த முடியாது.

அதாவது, உங்கள் ஃபோனில் எடிட் அம்சத்தைப் பெற முடிந்தாலும், பெறுநரிடம் இருக்கும் WhatsApp ஆப்ஸ் அப்டேட் செய்யப் பட்டிருந்தால் மட்டுமே எடிட் செய்யப்பட்ட திருத்தம் பிரதிபலிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அம்சம் இன்னும் உருவாக்கத்தில் இருப்பதால், இந்த அம்சத்திற்கான அதிகாரப்பூர்வ வெளியீட்டுத் தேதியை WhatsApp அறிவிக்கவில்லை.

இருப்பினும், இந்த சமீபத்திய அப்டேட் விரைவில் அணைத்து WhatsApp பயனர்களுக்குக் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.