சாதாரண தர பரீட்சையை நடத்தாது உயர்தரம் கற்க அனைவருக்கும் அனுமதி – டலஸ் கோரிக்கை

இந்த வருடம் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை நடத்தாது அதற்குப் பதிலாக அனைத்து மாணவர்களும் உயர்தரக் கல்வியை கற்பதற்கு தகுதியுடையவர்கள் என பரீட்சை திணைக்களத்தின் சான்றிதழை வழங்க வேண்டும் என பொதுஜன பெரமுனவின் சுயாதீன எதிரணி உறுப்பினர் டலஸ் அழகப்பெரும கோரிக்கை விடுத்தார்

பாராளுமன்றத்தில் இன்று (25) செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது கருததொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை விடைத்தாள்களை திருத்துவதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக தற்போது பிரச்சினை ஏற்பட்டுள்ளது.இதனால் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய 600,000 மாணவர்கள் கல்விப் பொதுத் தராதர உயர்தரத்திற்கு செல்ல முடியாத நிலை உள்ளது. அத்துடன் நடைபெறவுள்ள சாதாரண தரப் பரீட்சையும் பிற்போடப்பட்டுள்ளது.எனவே இந்த பிரச்சினைக்கு தீர்வாக இந்த வருடம் கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை நடத்தாது அதற்குப் பதிலாக அனைத்து மாணவர்களும் உயர்தரக் கல்வியை கற்பதற்கு தகுதியுடையவர்கள் என பரீட்சை திணைக்களத்தின் சான்றிதழை வழங்க வேண்டும்.ஏனெனில் கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை வைத்து எவரும் வேலை வாய்ப்புக்களைப் பெற்றுக் கொள்ள முடியாது என்பது உண்மை . இதன் மூலம் எந்த மாணவர்களுக்கும் அநீதி இழைக்கப்பட மாட்டாது என்றார்.