QR இன்றி மக்களுக்கு எரிபொருள் வழங்க தயாராகும் புதிய நிறுவனங்கள்..!

இலங்கையின் உள்ளூர் எரிபொருள் சந்தையில் பிரவேசிக்கத் திட்டமிட்டுள்ள இரண்டு வெளிநாட்டு நிறுவனங்கள், வாகனம் கழுவல், சேவைப் பகுதிகள், விற்பனையகங்கள் மற்றும் அனைத்து நோக்கங்களுக்கான எரிபொருள் நிலையங்களை அமைக்க முன்மொழிந்துள்ளன.

இலங்கை அரச அதிகாரிகளுக்கும், சீனாவுக்கு சொந்தமான சினோபெக் மற்றும் அமெரிக்காவை தளமாகக் கொண்ட RM Parks-Shell ஆகிய இரு நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கும் இடையேயான அண்மைய கலந்துரையாடலின் போது இந்த முன்மொழிவு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முன்மொழிவுகளுக்கு அரச அதிகாரிகள் தமது உடன்பாட்டை தெரிவித்துள்ளனர்.



அத்துடன், வெளியூர் பகுதிகளில் உள்ள எரிபொருள் நிலையங்களுக்கு இது பொருந்தும் என்றும் அரச அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தநிலையில், குறித்த எரிபொருள் நிலையங்களுக்கு தற்போது நடைமுறையில் உள்ள கியூ.ஆர் முறையின் கீழ் எரிபொருள் வழங்குவதில் இருந்து விலக்கு அளிக்கப்படலாம் என்றும் அரச அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த இரண்டு வெளிநாட்டு எரிபொருள் நிரப்பு நிறுவனங்களும், நவீன வணிக மையங்களின் அடிப்படையில் எரிபொருள் நிலையங்களை உருவாக்க விரும்புகிறார்கள்.

எரிபொருளைப் பெறச் செல்லும் இடங்களாக மட்டுமல்லாது வாகனங்களை கழுவி சேவை புதுப்பிக்கக்கூடிய பகுதிகளை அவர்கள் வைத்திருக்க விரும்புகிறார்கள்.



அத்துடன் ஒரு நீண்ட பயணத்திற்குச் சென்றால் இரவைக் கூட குறித்த இடங்களில் கழிக்கும் வசதிகளை அவர்கள் முன்மொழிந்துள்ளதாக அரச அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

ஒரு எரிபொருள் நிலையத்தின் சாதாரண பரப்பளவு சுமார் 40 பேர்சஸ் ஆகும். எனினும், புதிய நிறுவனங்களுக்கு சுமார் 1 ஏக்கர் காணி வழங்கப்பட வேண்டும் என்பது முன்மொழிவாக உள்ளது.

இதேவேளை, அடுத்த மாத ஆரம்பத்தில் குறித்த இரு நிறுவனங்களுடனும் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.



அத்துடன் மூன்றாவது நிறுவனமான அவுஸ்திரேலியாவின் யுனைடெட் பெட்ரோலியமும் விரைவில் இலங்கையின் எரிபொருள் உள்ளூர் சந்தைக்குள் நுழையவுள்ளது.

மூன்று நிறுவனங்களும் கூட்டாக வருடத்திற்கு 2.2 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு எரிபொருளை இறக்குமதி செய்யும் என்றும் இது திறைசேரியின் சுமையை குறைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.