மட்டு பெண்கள் பாடசாலையில் இரு ஆசிரியர்களுக்கிடையில் மோதல்; ஒருவர் கைது..!

மட்டக்களப்பில் தேசிய பெண்கள் பாடசாலையில் ஆசிரியர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படும் சக ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். மட்டு.தலைமையக பொலிஸாரினால் நேற்றைய தினம்(03.05.2023) கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு நகரிலுள்ள தேசிய பெண்கள் பாடசாலை ஒன்றில் இடமாற்றம் பெற்று வந்த ஆசிரியர், சங்க தலைவராக கடமையேற்க அனுமதிக்க வேண்டாம் என பாடசாலை அபிவிருத்தி குழுவினர் தடுத்துள்ளனர்.



இடமாற்றம் பெற்ற புது ஆசிரியர் மீது 40க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுக்கள் இருப்பதால்தான் பாடசாலை அபிவிருத்தி குழுவினர் குறித்த ஆசிரியரை தடுத்துள்ளனர்.

இதனையடுத்து அபிவிருத்தி குழுவினர் எதிர்ப்பு தெரிவித்த போது குழப்பம் இடம்பெற்றதால் குறித்த ஆசிரியர் பாடசாலையைவிட்டு வெளியேறி பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.



இதன் எதிரொலியாக சம்பவதினமான நேற்று பாடசாலைக்கு குறித்த ஆசிரியர் சங்க தலைவர் கடமையை பெறுப்பேற்க வந்த நிலையில் அவரை அனுமதிக்க வேண்டாம் என ஆசிரியர் ஒருவர் கேட்டுக் கொண்டுள்ளார்.



இதன் போது ஆசிரியர் சங்க தலைவர் அவரை தடுத்த ஆசிரியர் மீது தாக்குதலை மேற்கொண்டதால் பாதிக்கப்பட்ட ஆசிரியர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக ஆசிரியரை தாக்கிய சக ஆசிரியரை பொலிஸ் நிலையத்துக்கு வரவழைக்கப்பட்ட நிலையில் அவரை கைது செய்துள்ளதாகவும் சந்தேகநபர் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.