Sunday, August 3, 2025
Huisதாயகம்கால்நடை வைத்திய சாலைகளில் மருந்துகளை 10% விலைக் கழிவில் பெற்றுக் கொள்ளலாம் - எஸ்.வசீகரன்

கால்நடை வைத்திய சாலைகளில் மருந்துகளை 10% விலைக் கழிவில் பெற்றுக் கொள்ளலாம் – எஸ்.வசீகரன்

வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து கால்நடை வைத்திய அலுவலகங்களிலும் கால்நடைகளுக்கான பெரும்பாலான மருந்துகளை அதன் உச்சபட்ச சில்லறை விலையைவிட 10 சதவீதம் குறைவாகப் பெற்றுக் கொள்ள முடியும் என வடக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி எஸ்.வசீகரன் தெரிவித்தார்.

2000ஆம் ஆண்டு காலப் பகுதிகளிலும் கால்நடை வைத்திய அலுவலகங்களில் கால்நடைகளுக்கான மருந்துகள் விற்பனை செய்யப்பட்டன. ஆனாலும், அந்த நடைமுறை சில காரணங்களால் பின்னர் நிறுத்தப்பட்டது.

எனினும் வடக்கு கிழக்கு தவிர்ந்த ஏனைய பெரும்பாலான மாகாணங்களில் இன்றும் அரச கால்நடை வைத்திய அலுவலகங்களூடாக கால்நடைகளுக்கான பல்வேறு மருந்துவகைகளும் நியாயமான விலைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

பண்ணையாளர்களின் சிரமங்களை குறைக்கும் வகையில் சில கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச் சங்கங்கள் ஊடாக மருந்துகள் விற்பனை செய்யப்பட்டன. அது தொடர்பில் தொடர்ச்சியாக பண்ணையாளர்களால் முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அரச கால்நடை வைத்தியர்கள் கௌரவ வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களை சந்தித்து பண்ணையாளர்கள் மருந்துகளை பெறுவதிலுள்ள சிரமங்கள் தொடர்பாக வலியுறுத்தியிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து மாகாணப் பணிப்பாளர் அலுவலகத்தால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை ஆளுநரால் அனுமதிக்கப்பட்டதன் அடிப்படையில் விசேட நிதி ஒதுக்கப்பட்டு கால்நடை மருத்துவர்களின் கோரிக்கைப்படி தெரிவு செய்யப்பட்ட அவசியமான மருந்து வகைகள் கொள்வனவு செய்யப்பட்டு சகல கால்நடை வைத்திய அலுவலகங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் பண்ணையாளர்களின் மருந்து தேவைகளை அலுவலகங்களிலேயே நிவர்த்தி செய்யவும் குறைந்த விலையில் மருந்துகளை பெற்றுக் கொள்ளவும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவ்வசதியை பெப்ரவரி மாதம் முதல் பண்ணையாளர்கள் பெற்றுக் கொள்ள முடியும். இவற்றை சில்லறை விலையை விட 10 சதவீதம் குறைவாகப் பெற்றுக்கொள்ளவும் முடியும்.

இது தொடர்பான விலைப்பட்டியல் கால்நடை வைத்திய அதிகாரிகள் பணிமனையில் காட்சிப்படுத்தப்பட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் பணிப்பாளர் வைத்திய கலாநிதி எஸ்.வசீகரன் குறிப்பிட்டார்.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!