மன்னார் பொலிஸ் பிரிவில் கடந்த (25) ஆம் திகதி அதிகாலையில் மாடொன்று திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பணி இடைநீக்கம் (Suspended) செய்யப்பட்டுள்ளதாக மன்னார் பொலிஸ் தெரிவித்துள்ளது.
பணி இடைநீக்கம் செய்யப்பட்டவர் பேசாலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஆவார்.
அவர் கடந்த 23 ஆம் திகதி விடுமுறையில் சென்றிருந்ததாகவும், விடுமுறையிலிருந்த போது இந்தத் திருட்டில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் உள்ளிட்ட இருவர் இன்று (28) மன்னார் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப் படுத்தப்பட்டனர். இதன்படி குறித்த இருவரும் நாளைய தினம் (29) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 25 ஆம் திகதி அதிகாலை நானாட்டான் பிரதேசத்தில், மூவர் இணைந்து மாடொன்றைத் திருடி முச்சக்கர வண்டியொன்றில் ஏற்றுவதற்கு முயற்சித்துள்ளனர்.
இதைக் கண்ட பிரதேசவாசிகள் கூச்சலிட்டதால், முச்சக்கர வண்டி அங்கிருந்து தப்பிச் சென்றது. இதையடுத்து, பிரதேசவாசிகள் குறித்த முச்சக்கர வண்டியைப் பின் தொடர்ந்துள்ளனர்.
பின்னர் முச்சக்கர வண்டியானது அங்கு கடமையிலிருந்த பொலிஸ் உத்தியோகத்தரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
இதன்போது பொலிஸ் உத்தியோகத்தர்கள் முச்சக்கர வண்டியின் சாரதியைக் கைது செய்த போது, அவர் ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இருவர் முச்சக்கர வண்டியிலிருந்து தப்பிச் சென்றதாகத் தெரியவந்தது.
அதன்படி, விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, அந்தப் பகுதியில் திருட்டுச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மற்றொருவர் தப்பிச் சென்றுள்ளார்.


Recent Comments