பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தனை மேலும் 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், பிள்ளையானின் அடிப்படை உரிமை மீறல் தொடர்பான எழுத்தாணை உத்தரவு மனு மீதான விசாரணை நாளை நடைபெறவுள்ளது.
அதன் நிமித்தம் பிள்ளையானின் சட்டத்தரணியான முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில இன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு சென்று பிள்ளையானை சந்தித்தார்.
இதன்போது வழக்கு தொடர்பில் அவருடன் கலந்துரையாடியதாக உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பிள்ளையான் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக, அரசாங்கம் தெரிவித்து வருகிறது.
எனினும், கிழக்கின் பேராசிரியர் ஒருவர் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பிலேயே, அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
அதன்படி, தடுப்புக் காவல் உத்தரவுக்கு அமைய சுமார் ஏழரை மாதங்கள் பிள்ளையான் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இதனடிப்படையில், தாம் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமையில் எவ்வித அடிப்படையும் இல்லை எனவும், இதனூடாக தனது உரிமை மீறப்பட்டுள்ளதாகவும் அறிவித்து உத்தரவிடுமாறு கோரி, பிள்ளையான் தாக்கல் செய்த எழுத்தாணை மனு நாளை உயர் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.


Recent Comments