Wednesday, December 3, 2025
Huisதாயகம்மன்னாரில் கடுமையான வானிலை காரணமாக மீட்பு பணிகள் தடுமாற்றம்; 310 பேரின் நிலை?

மன்னாரில் கடுமையான வானிலை காரணமாக மீட்பு பணிகள் தடுமாற்றம்; 310 பேரின் நிலை?

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக மன்னார் மாவட்டம் பாரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சுமார் 310 பேர் எவ்விதத் தொடர்புமின்றி இருப்பதாகவும், அவர்கள் மரங்களிலும், கட்டிடங்களின் கூரைப் பகுதிகளிலும் தஞ்சமடைந்துள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

“குறித்த 310 பேரும் கடந்த இரண்டு நாட்களாக எவ்விதத் தொடர்புகளும் இன்றித் தவிக்கின்றனர். நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் தொடர்புகள் துண்டிக்கப்பட்டிருந்த சிலரைப் படகுகள் மூலம் மீட்டுள்ளோம்.

மேலும், கூராய் பிரதேசத்தில் 36 பேர் தொடர்புகளின்றி மரங்களிலும், கூரைகளின் மீதும் இருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது. அவர்களை மீட்கும் நடவடிக்கையில் கடற்படையினர், விமானப்படையினர் மற்றும் ஏனைய அரச உத்தியோகத்தர்களின் உதவியுடன் முயற்சிகளை முன்னெடுத்து வருகிறோம்.

கடற்படையினரின் மீட்புப் பணிக்காகச் சென்ற படகு, வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளமையினால் பாதிக்கப்பட்ட மக்களை நெருங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சீரற்ற வானிலை காரணமாக விமானப் படையின் உதவியையும் பெற்றுக் கொள்வதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விமானப் படைக்குச் சொந்தமான உலங்குவானூர்தி மீண்டும் வவுனியாவிற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

வானிலை சீரான நிலைக்குத் திரும்பும் சந்தர்ப்பத்திலேயே மீட்பு நடவடிக்கைகளைத் தொடர முடியும்.

மேலும் மாந்தை மேற்கு, மடு, முசலி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகள் மன்னார் பிரதேசத்துடன் துண்டிக்கப்பட்டுள்ளன. தொலைபேசித் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டவர்களின் தகவல்களைப் பெற்றுக் கொள்வதில் பாரிய சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.

மாந்தை மேற்கு பிரதேசம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மன்னாரிலிருந்து கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களுக்கான போக்குவரத்துகளும் தடைப்பட்டுள்ளன” என அவர் மேலும் தெரிவித்தார்.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!