Friday, January 23, 2026
Huisதாயகம்வடபகுதி மீனவர்களின் வாழ்வாதாரத்தை சிதைக்கும் இழுவைப் படகுகளை கட்டுப்படுத்துக - ரவிகரன் எம்பி

வடபகுதி மீனவர்களின் வாழ்வாதாரத்தை சிதைக்கும் இழுவைப் படகுகளை கட்டுப்படுத்துக – ரவிகரன் எம்பி

வடபகுதி மீனவர்களின் வாழ்வாதாரத்தை முற்றாகச் சிதைக்கின்ற இந்திய இழுவைப்படகுகளின் வருகையை உடனடியாக கட்டுப்படுத்துமாறு வன்னிமாவட்டாநாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரிடம் வலியுறுத்தியுள்ளார்.

பாராளுமன்றில் 05.01.2026இன்று இடம்பெற்ற கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அலுவல்கள்பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்கூட்டத்தில் பங்கேற்றுக் கருத்துத் தெரிவிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

வடக்கில் யாழ்ப்பாணம், தீவகம், கிளிநொச்சி, முல்லைத் தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களின் கடற்பரப்புக்களில் இந்திய இழுவைப் படகுகளின் அடாவடித்தனமான செயற்பாடுகள் அதிகரித்துள்ளமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனால் இதன் போது கடற்றொழில் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

குறிப்பாக வடபகுதி கடற்பரப்பில் கடற்கரைகளை அண்மித்து இந்திய இழுவைப் படகுகள் இழுவைமடித் தொழிலில் ஈடுபட்டு கடல் வளங்களை சூறையாடுவதுடன், வடபகுதி மீனவர்களின் கடற்றொழில் உபகரணங்களையும் சேதப்படுத்திச் செல்வதாகவும் நாடாளுமன்ற உறுப்பினரால் இதன்போது தெரிவிக்கப்பட்டது.

வடபகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கடந்த யுத்த காலப் பகுதியில் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, தற்போது அவர்கள் தமது அன்றாட வாழ்வாதாரத்தினை கொண்டு செல்வதற்கே பாரிய இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்து வருவதாகத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், இந்திய இழுவைப் படகுகளின் இவ்வாறான அடாவடித்தனமான செயற்பாடுகள் வடபகுதி மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேலும் சிக்கலுக்குள் தள்ளுவதாக அமைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

அதேவேளை இந்திய இழுவைப் படகுகளின் அடாவடித்தனமான செயற்பாடுகளை கட்டுப்படுத்துமாறு கடற்றொழில் அமைச்சரிடம் தொடர்ச்சியாக முறையீடுகளைச் செய்து வருவதாகவும், கடற்றொழில் பிரதியமைச்சர் முல்லைத்தீவிற்கு வரும் போதும் இவ்விடயம் தொடர்பில் தெரியப்படுத்தியிருந்ததாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் இதன் போது நினைவுபடுத்தினார். இருப்பினும் தற்போதும் இந்திய இழுவைப் படகுகளின் அத்து மீறல்கள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறிய வருகையை கட்டுப்படுத்துவதில் இலங்கை அரசிற்கு இராஜதந்திர ரீதியான சிக்கல் நிலை இருந்தாலும், வடபகுதி மீனவர்களின் வாழ்வாதாரப் பாதிப்பு நிலையை கருத்திற்கொண்டு இந்திய இழுவைப் படகுகளைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனால் இதன் போது வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில் இந்திய இழுவைப் படகுகளின் வருகையைக் கட்டுப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென இதன் போது கடற்றொழில் அமைச்சர் மற்றும் பிரதியமைச்சர் ஆகியோரால் பதிலளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!