கடற்றொழிலாளர் ஓய்வூதிய, சமூகப் பாதுகாப்பு நலன்புரித்திட்டம் சார்பாக கடற்றொழில் அமைச்சரால் முன்வைக்கப்பட்ட ஒழுங்குவிதிகளில் சில திருத்தங்களை ஏற்படுத்துவதன் மூலம் மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் ஓய்வுகாலத்தையும் மேலும் வளப்படுத்த முடியுமென வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஆலோசனை வழங்கியுள்ளார்.
அந்தவகையில் இறுக்கமான தவணைக் கட்டண முறைக்கு மாற்றாக பருவ காலத்துடன் இசைந்த வகையில் தவணைக் கட்டண முறையை நடைமுறைப்படுத்தல், அரசின் கூட்டுப்பொறுப்பை உறுதிப்படுத்தல், பண வீக்கத்துடன் இணைந்த வகையில் ஓய்வூதியத் தொகையை தீர்மானித்தல், இழப்பீட்டுத் தொகை காலப் பொருத்தமற்று இருத்தல், மதுபாவனையால் குடும்பத்தினர் தண்டிக்கப்படுவதை தவிர்த்தல், ஒழுங்குவிதிகளில் உள்ள இடைவெளிகளை ஆராய்தல் தொடர்பில் கடற்றொழில் அமைச்சர் மேலும் கரிசனை கொள்ள வேண்டுமெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் 06.01.2026இன்று இடம்பெற்ற கடற்றொழிலாளர் ஓய்வூதிய சமூகப் பாதுகாப்பு நலன்புரித்திட்ட சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகள் தொடர்பான விவாதத்தில் பங்கேற்று கருத்துத் தெரிவிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
30 ஆண்டுகளின் பின்னர் கடற்றொழிலாளர் ஓய்வூதிய, சமூகப் பாதுகாப்பு நலன்புரித்திட்டம் சார்பாக தற்போதைய கடற்றொழில் அமைச்சரால் முன்வைக்கப்பட்டுள்ள ஒழுங்குவிதிகளை வரவேற்கிறோம். வயதுக்குரிய பங்களிப்பு, ஓய்வூதிய கட்டங்கள், இயலாமை மற்றும் இறப்பின் போதான பணிக்கொடை விபரம் என்பன தெளிவாக வரையறுக்கப்பட்டிருத்தல் வரவேற்புக்குரியன.
ஆனாலும் மேற்படி ஒழுங்குவிதிகளில் மேலும் சில மாற்றங்களை ஏற்படுத்தினால் அவை மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் ஓய்வு காலத்தையும் மேலும் வளப்படுத்தும்.
இறுக்கமான தவணைக் கட்டண முறைக்கு மாற்றாக பருவ காலத்துடன் இசைந்த வகையில் தவணைக் கட்டண முறையை நடைமுறைப்படுத்தல், அரசின் கூட்டுப்பொறுப்பை உறுதிப்படுத்தல், பணவீக்கத்துடன் இணைந்த வகையில் ஓய்வூதியத்தொகையை தீர்மானித்தல், இழப்பீட்டுத் தொகை காலப்பொருத்தமற்று இருத்தல், மதுபாவனையால் குடும்பத்தினர் தண்டிக்கப்படுவதை தவிர்த்தல், ஒழுங்குவிதிகளில் உள்ள இடைவெளிகளை ஆராய்தல் தொடர்பில் கௌரவ கடற்றொழில் அமைச்சர் மேலும் கரிசனை கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
மீனவ சமூகத்தின் முதுமைக்காலம் மதிப்போடு கணிக்கப்பட வேண்டியது. எனினும் பொதுவான இயற்கை அனர்த்தங்களுக்கு மேலாக தடை செய்யப்பட்ட தொழில் முறைகள் இன்னமும் கட்டுப்படுத்தப்படாதிருத்தல், இழுவைமடிப்படகுகளின் அத்துமீறல் என்பவற்றால் எரிபொருள் செலவுக்கேனும் மீன்பிடிக்க இயலாது கரைதிரும்பும் வள்ளங்களும் உள்ளன.

இலட்சக்கணக்கான பெறுமதி கொண்ட வலைகளை இழந்து விட்டு கரை திரும்பும் மீனவர்கள் உள்ளனர். ஒவ்வொரு மாதமும் சீரான வருவாயை கடற்றொழில் ஈட்டித் தருவதில்லை.
இந்நிலையில் தவணைக் கட்டணங்களில் மட்டும் மீனவர்களுக்கு இறுக்கமான நடைமுறை எவ்வாறு பொருந்தும்? இந்தியா, பிறேசில் உள்ளிட்ட நாடுகளில் பேணப்படும் பருவகாலத்துடன் இசைந்ததான நெகிழ்வுப் போக்குடனான தவணைக் கட்டண முறைமை இலங்கை மீனவர்களுக்கும் மிகவும் பொருந்தும்.
செய்ச்செல்ஸ் (Seychelles) மற்றும் ஐரோப்பாவின் சில பகுதிகளில் மீனவர்களின் ஓய்வூதியத் திட்டங்கள் அரசுடன் இணைந்த, பகிரப்பட்ட பொறுப்பை அடிப்படையாகக் கொண்டவையாக உள்ளன. மீனவர்களின் ஓய்வூதியத்திட்டத்தில் பகுதியளவில் அரசின் பொறுப்பேற்றல் மீனவர் வாழ்வை மேலும் வலுவூட்டும்.
தற்போது 45 வயதில் உள்ள ஒருவர் 15 ஆண்டுகளின் பின்னர் ஒரு மாத ஓய்வூதியமாகப் பெறும் 1000 ரூபாய் தொகை ஒரு வேளை உணவுக்கு கூட போதாமல் இருக்கும். இப்போது 18 வயதில் உள்ள ஒருவர் 42 ஆண்டுகளின் பின்னர் ஒரு மாத ஓய்வூதியமாக பெறும் 1000 உரூபாய் தொகை பணவீக்கத்தின் அடிப்படையில் கிட்டத்தட்ட இப்போதைய 130 ரூபாய்க்குச் சமனாக காணப்படும்.
மேற்படி நலன்புரித்திட்டத்தின் ஊடாக 42 ஆண்டுகளின் பின்னர் கிடைக்கும் ஒரு மாத ஓய்வூதியத்தில் ஒரு பால் தேநீரைத்தான் குடிக்க முடியும் என்பது எத்தகைய அபத்தம்!
பணவீக்கம் மற்றும் வாழ்க்கைச் செலவுகளுடன் இணைந்ததான வகையில் கடற்றொழிலாளர் ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடைத் தொகைகள் அவ்வப்போது இற்றைப் படுத்தப்படுவது மிகவும் பொருத்தமானதாக அமையும்.
46 வயதுடைய மீனவர் ஒருவர் கடலில் விபத்துக்குள்ளாகி மரணமடைந்தால் அவர் சார்பாக வழங்கப்படும் 6 ஆயிரம் உரூபாய் அம்மீனவரின் குடும்பத்தின் எதிர்காலத்தை எந்த அளவில் ஆற்றுப்படுத்தும்? மேற்படி இழப்பீட்டுத் தொகை காலத்திற்கு பொருத்தமான தொகை தானா?
மது அருந்திய நிலையில் விபத்து நடந்தால் இழப்பீடு இல்லை என்ற விதி, பல நேரங்களில் அதிகாரிகளால் தவறாக பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது. முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்கள் மருத்துவ வசதிகளிலும் தீவளாவிய வகையில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளமை இதற்கு மேலும் வலுச் சேர்ப்பதாக அமைந்து விடும்.
மேலும் ஒருவரின் தனிப்பட்ட பழக்கம், குடும்பத்துக்கான அரசின் ஆற்றுப்படுத்தலை ஏன் தடை செய்யவேண்டும்.
ஒழுங்குவிதிகளில் உள்ள இடைவெளிகள் கடலில் ஒருவர் காணாமல் போனால் 2025 இன் ஒழுங்குவிதி என்ன தீர்வைத்தரும்? மீனவர்களுக்கு அவர்களின் கைகளே முதன்மையான வாழ்வாதார மூலங்கள். விபத்து ஒன்றில் மீனவர்கள் விரல்களை இழந்தால்? உள்ளங்கை சிதைந்தால்? கைகளுக்குச் செல்லும் நரம்புகள் சேதமுற்றால்?
கௌரவ அமைச்சர் அவர்களே,
ஒரு மீனவர் விரல்களை இழந்து, அவரின் கேட்டல் திறனை இழந்தது, கடற்பரப்பிலே பாதுகாப்பாக நிலைகொள்ளும் திறனை இழந்து அதனால் அம்மீனவரின் வாழ்வாதார வலு முற்றாக நிலைகுலைந்தாலும் கூட, 2025 இன் ஒழுங்குவிதி அம்மீனவரை இயலாமை உடையவர் என வரையறுக்க மறுக்கிறது! இது நியாயமா? மேற்படியான பாதிப்புகள் மீனவர்களின் மீன்பிடி வாழ்வை பாதிக்காதா?
இந்தியா, வாழ்வாதார இழப்புக்கான இழப்பீட்டைத் தான் கொடுக்கிறது. உடல் கூறுகளின் இழப்பை அளவிட்டு அல்ல. பல நாடுகள், சர்வதேச தொழிலாளர் அமைப்பால் உருவாக்கப்பட்ட,
மீன்பிடித் தொழிலில் வேலைவாய்ப்பு தொடர்பான C188 உடன்படிக்கைக்கு அமைய, உடல் உறுப்புகளின் இழப்பில் கவனம் செலுத்தாது பணிபுரிவதற்கான உடற் தகுதியில் கவனம் செலுத்துகின்றன.
முதுகெலும்பு வட்டுகள் சேதமடைதல், நாள்பட்ட முதுகு வலியால் அவதியுறல், பகுதிளவான பாரிசவாதம், நுரையீரல் நோய், காசநோய், எரிபொருள் புகையால் ஏற்படும் நோய், கை-கால் வலிப்பு, பகுதி குறைபாட்டுடனான பக்கவாதம், சமநிலை கோளாறு, உளநிலை பாதிப்புகள், பணிசார் நோய்கள் என்பவற்றுக்கு 2025 இன் ஒழுங்குவிதிகள் கூறும் தீர்வென்ன?
மேற்படி ஒழுங்குவிதிக்கான இயலாமை வரையறையும் மேலும் விரிவாக்கப்பட வேண்டும் என்பதையும் இந்தப் பேரவையில் கேட்டுக் கொள்கிறேன் – என்றார்.


Recent Comments