முல்லைத்தீவில் வெளிச்சவீடு இன்மையால் கடலுக்குச் செல்லும் மீனவர்கள் கரைதிரும்புவதில் பாரிய இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்து வருவதாகத் தெரிவித்த வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், வெளிச்ச வீடொன்றை அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு கடற்றொழில் அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் முல்லைத்தீவில் வெளிச்ச வீடு அமைப்பதுதொடர்பில் துறைமுகங்கள் மற்றும் விமானசேவைகள் அமைச்சருடன் தாம் பேசியுள்ளதாகவும், இவ்வருடத்திற்குள் முல்லைத்தீவில் வெளிச்ச வீட்டினை அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப் படுமெனவும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரால் பதில் வழங்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றக் கட்டடத்தொகுதியில் 05.01.2025நேற்று இடம்பெற்ற கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்திலேயே இவ்விடயம் தொடர்பில் பேசப்பட்டுள்ளது.
இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில்,
முல்லைத்தீவு மணற்குடியிருப்பு கடற்கரைப் பகுதியில் கடந்த 1950ஆம் ஆண்டு காலப் பகுதியில் கட்டப்பட்ட வெளிச்சவீடொன்று காணப்பட்டது.
இந்த வெளிச்சவீட்டினால் முல்லைத்தீவு மாவட்டத்தின் 74கிலோமீற்றர் தூரமான கரையோரத்தில் கொக்கிளாய் தொடக்கம் பேப்பாரப்பிட்டி வரையிலுள்ள மீனவர்கள் பயனடைந்தவந்தனர்.
குறித்த வெளிச்சவீட்டின் உதவியுடனேயே மீனவர்கள் தொழிலுக்குச் சென்று தமது மீன்பிடித் துறைகளுக்கு கரைதிருப்பிவந்தனர்.
இவ்வாறாக மீனவர்களுக்கு பெரும் வரப்பிரசாதமாகவிருந்த இந்த வெளிச்சவீடு கடந்த 2004ஆம் ஆண்டு இடம்பெற்ற சுனாமி அனர்த்தத்துடன் முற்றாக அழிவடைந்துள்ளது.
எனவே முல்லைத்தீவு மாவட்டத்தில் தற்போது மீனவர்கள் வெளிச்சவீடின்றி பல்வேறு இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.
எனவே மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினையைக் கருத்தில் கொண்டு கடற்றொழில் அமைச்சு முல்லைத்தீவில் வெளிச்ச வீடொன்றை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென கடந்த 09.09.2025அன்று பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெற்ற கடற்றொழில் அமைச்சின் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கோரிக்கை விடுத்திருந்தேன்.
இந்நிலையில் வெளிச்ச வீடுகளை அமைப்பதற்கு துறைமுக அதிகார சபையே பொறுப்பெனவும், எனவே துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சருடன் கலந்துரையாடி முல்லைத்தீவில் வெளிச்ச வீடு அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென கடற்றொழில் அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர் ஆகியோரால் இதன்போது பதில் வழங்கப்பட்டிருந்தது.
அதற்கமைய 05.01.2025அன்று இடம்பெற்ற கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கடற்றொழில் அமைச்சரிடம் குறித்த வெளிச்சவீட்டினை அமைப்பது தொடர்பான முன்னேற்றம் குறித்து கேள்வி எழுப்பியிருந்தேன்.
அந்த வகையில் துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சருடன் இது தொடர்பில் தாம் பேசியுள்ளதாகவும், நிச்சயமாக இவ்வருடத்திற்குள் முல்லைத்தீவு மாவட்டத்தில் வெளிச்சவீட்டினை அமைப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்படுமென கடற்றொழில் அமைச்சர் இதன்போது பதில் வழங்கியிருந்தார் – என்றார்.


Recent Comments