Friday, January 23, 2026
Huisதாயகம்சிறுமி டினோஜாவின் மரணத்திற்கான நீதியை விரைந்து வழங்குக - ரவிகரன் எம்.பி

சிறுமி டினோஜாவின் மரணத்திற்கான நீதியை விரைந்து வழங்குக – ரவிகரன் எம்.பி

முல்லைத்தீவு – சிலாவத்தைப் பகுதியைச்சேர்ந்த சிறுமி குகநேசன் டினோஜாவின் சர்ச்சைக்குரிய மருத்துவமனை மரணத்திற்கு விரைந்து நீதியை வழங்குமாறு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மற்றும் சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ ஆகியோரிடம் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த 03.01.2026அன்று சிறுமி டினோஜாவின் மரணத்திற்கு நீதிகோரி ஜனாதிபதி மற்றும் சுகாதார அமைச்சர் ஆகியோருக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார்.

அதேவேளை சிறுமி டினோஜாவின் மரணத்திற்கு நீதிகோரி 986பேர் கையொப்பமிட்ட மகஜரும் இக்கடிதத்துடன் ஜனாதிபதி மற்றும் சுகாதார அமைச்சர் ஆகியோருக்கு சேர்ப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் “மாணவி குகநேசன் டினோஜாவின் மரணம் தொடர்பில் நியாயமான விசாரணை கோருதல் – முல்லைத்தீவு மாவட்ட பொது மருத்துவமனை” எனத் தலைப்பிடப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களால் ஜனாதிபதி மற்றும் சுகாதார அமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,

முல்லைத்தீவு மாவட்டம் – சிலாவத்தை பகுதியைச் சேர்ந்த மாணவி குகநேசன் டினோஜா என்பவரின் மரணம் தொடர்பில் தங்களின் மேலான கவனத்திற்கு மரியாதையுடன் கொண்டு வருகிறேன்.

கடந்த 2025.12.21 அன்று இரவு 7.20 மணியளவில், குறித்த மாணவி உணவு ஒவ்வாமையால் முல்லைத்தீவு மாவட்ட பொது மருத்துவ மனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார்.

ஒவ்வாமையின் விளைவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட பின்னர், குழந்தை நல மருத்துவர் மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவு மருத்துவர்களின் பரிந்துரையோடு குறித்த மாணவிக்கு அதிகளவான மருந்து ஏற்றப்பட்டு அதன் பின்னர் 10 நிமிடத்தின் பின்னர் பிள்ளை மரணமடைந்ததாக பொதுமக்கள் பலரும் முறைப்பாடுகளை முன்வைத்தனர். மேலும் இது தொடர்பில் மருத்துவமனை ஊழியர்கள் சிலரும் நேரடியாக என்னிடம் தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.

மேற்படி சம்பவத்தின் தீவிர நிலையை கருத்திற் கொண்டு, இது தொடர்பில் நியாயமான, வெளிப்படைத் தன்மையான, சுயாதீன விசாரணை அவசியம் என நான் உறுதியாக நம்புகிறேன்.

மேலும், முல்லைத்தீவு மாவட்ட பொது மருத்துவமனையில் மருத்துவ சேவைகளின் தரம் மற்றும் பாதுகாப்பு குறித்து பொது மக்களால் பல சந்தர்ப்பங்களில் முறைப்பாடுகள் கடந்த காலங்களில் முன் வைக்கப்பட்டமையையும் தங்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

வளப்பற்றாக்குறை மற்றும் ஆளணி பற்றாக்குறை ஆகியவற்றால் மாவட்ட பொது மருத்துவமனை என்ற வகையில் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ள இந்த மருத்துவ மனையில், வினைத் திறனான மருத்துவ சேவை வழங்கல் தொடர்பான தொடர்ச்சியான கண்காணிப்பும் பொறுப்புக் கூறலும் அவசியமாகிறது.

எனவே, மேற்படி சிறுமியின் மரணம் தொடர்பில் நீதியான, சுயாதீன விசாரணை மேற்கொள்ள ஆவன செய்யுமாறும், முல்லைத்தீவு மாவட்ட பொது மருத்துவ மனையின் பாதுகாப்பான, தரமான மற்றும் வினைத் திறனான மருத்துவ சேவை வழங்கப்படுவதை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் தங்களைத் தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

இத்தோடு முல்லைத்தீவு சமூகத்தினரின் 986 கையொப்பங்கள் அடங்கிய கோரிக்கைக் கடிதத்தையும் தங்களுக்கு இணைத்து அனுப்புகிறேன்.

தங்கள் கனிவான கவனத்திற்கும் மேற்படி வேண்டுகைக்கான விரைவான நடவடிக்கையை எதிர்பார்ப்பதாக அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!