Thursday, January 22, 2026
Huisதாயகம்அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நஷ்ட ஈட்டுக் கொடுப்பனவை தாமதமின்றி வழங்குங்கள் - சத்தியலிங்கம் எம்பி கோரிக்கை

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நஷ்ட ஈட்டுக் கொடுப்பனவை தாமதமின்றி வழங்குங்கள் – சத்தியலிங்கம் எம்பி கோரிக்கை

நாட்டில் அண்மைய இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நஷ்ட ஈட்டுக்கொடுப்பனவை தாமதமின்றி வழங்குமாறு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று (21.01.2026) இடம்பெற்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

கடந்த வருடம் நவம்பர் மாத இறுதியில் எமது நாட்டை மிகமோசமாக தாக்கிய பேரனர்த்தமாக டித்வா புயலும் அதன் தொடர்ச்சியாக பெய்த கடும் மழையினால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் மண்சரிவு போன்றவற்றால் ஏற்பட்ட உயிரிழப்புகள் சொத்து சேதம் என்பன எமது நாட்டின் வளர்ச்சியில் பாரிய பின்னடைவை ஏற்படுத்தியிருக்கின்றது.

இந்த நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு பின்னர் படிப்படியாக ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சியில் விழுந்த பேரிடியாகவே இதனை கருதவேண்டியுள்ளது.

கடந்த 25 வருடங்களில் இந்த நாடு 4 பேரவலங்களை சந்தித்துள்ளது. 2004 இல் ஏற்பட்ட சுனாமி பேரவலம், 2009ல் வடக்கில் நடைபெற்ற இறுதியுத்தம், 2020ல் ஏற்பட்ட கொரோனா நோய்த்தாக்கம், கடந்த வருடம் ஏற்பட்ட “டித்வா புயல்” அனர்த்தம்.

கடந்த காலங்களில் ஏற்பட்ட பேரவலங்களிலிருந்த மீண்டது போன்று இந்த அனத்தத்திலிருந்தும் மீண்டு வழமைக்கு திரும்ப வேண்டிய கட்டாய சூழ்நிலையில் நாம் அனைவரும் உள்ளோம்.

இயற்கை அனர்த்தம் என்பது நமது கட்டுப்பாட்டுக்கு மீறியது. அதனை யாராலும் தடுக்கமுடியாது. எத்தனை நவீன வசதிகள் இருந்தாலும் அனர்த்தத்தை தடுக்க முடியாது. ஆனால் அந்த அனர்த்தங்களினால் ஏற்படுகின்ற பாதகமான விழைவுகளை, சேதாரங்களை தடுப்பதற்கான அல்லது குறைப்பதற்கான முன்னாயத்தங்களை செய்வதுடன் அனர்த்தத்தினால் ஏற்பட்ட விளைவுகளையும் அனர்த்தத்திற்கு பின்னரான கால முகாமைத்துவமும் மிக முக்கியமானது. அதுவே அனர்த்த முகாமைத்துவமாகும்.

உலகளாவிய ரீதியில் அனர்த்த முகாமைத்துவம் தொடர்பாக 4 படிநிலைகள் பின்பற்றப்படுகின்றன. தடுத்தல், எச்சரிக்கை விடுத்தல் தயார்படுத்தல், எதிர்நோக்குதல், மீட்பு பணி அவசர நிவாரணம் மீள்நிர்மாணம்.
அந்த வகையில் நவம்பர் மாதம் 25 தொடக்கம் 30 வரையான காலப்பகுதியில் பாரிய அனர்த்தமொன்று நடைபெறப் போவதாக பல்வேறு சமிஞ்சைகள் முன்கூட்டியே கிடைத்த போதிலும் முறையாக தயார்படுத்தல் நடைபெறவில்லை என்ற குற்றச்சாட்டு துறைசார்ந்த திணைக்களத்தின் மீது சுமத்தப்படுகின்றது. இதனை அரசாங்கம் எதிர்க்கட்சிகள் அரசியலாக்குகின்றன என்று கூறி தனது பொறுப்பிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியாது.

இளம் குடும்பத்தலைவன் தணிகாசலம் பத்மநிகேதன் இராஜாங்கனையில் ஏற்பட்ட அனர்த்தத்தில் உயிரிழந்தார் அல்லது கொல்லப்பட்டார். குறித்த பேரூந்து சாரதிமேல் கொலை என்றுதான் இராஜாங்கனை பொலிசார் நொச்சியாகம நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர். அவ்வழக்கில் ஒரு கொலை மற்றும் 64 பயணிகளை கொலை செய்ய முயற்சித்தார் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்படவேண்டியவர்கள் யார்? முறையான முன்னறிவித்தல் இல்லாமல் இராஜாங்கனை நீர்தேக்கத்திலிருந்து நீரை திறந்தவர்களா? அல்லது அனர்த்தம் நிகழ்ந்த இடத்திற்கு பேரூந்து செல்வதற்கு அனுமதித்த காவல்துறையினரா? அல்லது நாடு ஒரு அனர்த்தத்தை எதிர் கொண்டிருந்த நிலையில் நேர்முகத் தேர்விற்கு அழைத்த நேசண்ட் டிரஸ்ட் வங்கி நிர்வாகத்தினரா? அல்லது எல்லாவற்றிற்கும் பொறுப்புக்கூற வேண்டிய தேசிய அனர்த்த முகாமைத்துவ திணைக்களமா என்பதை அரசாங்கம் தீர்மானிக்க வேண்டும்.

இந்த துர்ப்பாக்கிய சம்பவம் நிகேதனுக்கு மாத்திரம் நிகழவில்லை, இவ்வாறு பல நிகேதன்கள் உயிரிழந்துள்ளனர். பொறுப்புச் சொல்பவர் யார்?

அனர்த்தத்தில் உயிரிழப்புகள் ஏற்படுவது பல சந்தர்ப்பங்களில் தடுக்க முடியாதென்றாலும் இவ்வாறான தவிர்க்கக் கூடிய சந்தர்ப்பங்களை தடுக்காதவர்களை பொறுப்புக்கூறலில் இருந்து காப்பாற்றக் கூடாது.

எனினும் அனர்த்தம் ஏற்பட்டபோது முப்படையினரும் பொலிசாரும் ஏனையோரும் உயிரச்சுறுத்தலுக்கு மத்தியில் அர்ப்பணிப்புடன் கடமையாற்றியதை நாம் குறைத்து மதிப்பிட முடியாது. குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் கடற்படை சிப்பாய்கள் உயிரிழந்தமை, விமானியின் உயிரிழப்பு ஆகியன வேதனையான சம்பவங்களாகும்.

மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையங்கள் முறையாக செயற்பட்டனவா என்ற கேள்வியும் இல்லையெனின் செயற்பட முடியாமைக்கான காரணங்கள் என்ன என்பதையும் ஆராய்ந்து எதிர்காலத்தில் அவர்கள் சிறப்பாக செயற்பட தேவையான வளங்களை அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

மீட்பு பணி வேலைகள் நேரடியாக ஜனாதிபதி அவர்களின் நேரடி கண்காணிப்பின் கீழ் நடைபெற்றது.
இலங்கையில் இதுவரை காலமும் செயற்பட்ட அனர்த்த முகாமைத்துவத்தில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற இலங்கை செஞ்சிலுவை சங்கத்தினர் உள்ளனர், அந்த வளம் பாவிக்கப்பட வேண்டும்.

அனர்த்தம் நடைபெற்றவுடன் உடனடியாக பல்வேறு நாடுகள் உதவிகள் செய்தன. அவற்றிற்கும் இந்த சந்தர்ப்பத்தில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.

எனினும் அனர்த்தத்திற்கு பின்னரான நிலைமை தொடர்பில் நாம் கூடிய கவனம் செலுத்தவேண்டியவர்களாக இருக்கின்றோம். நான் அறிந்தவரையில் வீடுகள் வியாபார நிலையங்களுக்குள் நீர்புகுந்ததை தொடர்ந்து அவற்றினை சுத்தப்படுத்துவதற்கான கொடுப்பனவு ரூபா 25000 பெரும்பாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எனினும் தளபாடங்கள் வீட்டு உபகரணங்கள் சேதமடைந்தவர்களுக்கான கொடுப்பனவுகள் இதுவரை முற்றுப்பெறவில்லை.

அத்துடன் குறிப்பாக எமது பிரதேசத்தில் பயிர்கள் அழிவடைந்தவர்களுக்கான கொடுப்பனவுகள் கால்நடைகள் இறந்தமைக்கான கொடுப்பனவுகள் தாமதமாகவே நடைபெறுகின்றது.

கிராம சேவகர்களின் பற்றாக்குறையே தாமதம் ஏற்படுவதற்கு காரணமாக சொல்லப்படுகிறது. போதிய ஒழுங்குகளை செய்வதனூடாக தாமதத்தை குறைக்க வேண்டும்.

அத்துடன் உடைப்பெடுத்த குளங்கள் தற்காலிகமாக புனரமைக்கப்பட்டுள்ளபோதிலும் அவற்றினை நிரந்தரமாக புனரமைப்பதற்காக இந்த வருடம் நிதியொதுக்கீடு செய்யவேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.

அதனை விட முக்கியமானது அனர்த்த முகாமைத்துவத்தின் முதல் இரண்டு படிநிலைகளையும் பலப்படுத்தி எதிர்காலத்தில் பாதிப்புகளை குறைப்பதற்கான பொறிமுறை உருவாக்கப்படுதல் வேண்டும்.

பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டமைக்கான காரணம் முறையான வடிகாலமைப்பு இல்லாமை, வடிகான்கள் சட்டவிரோதமாக தடுக்கப்பட்டுள்ளமை, நீண்டகாலமாக நீர்வழிந்தோடும் வடிகான்கள் முறையாக பராமரிக்கப்படாமை போன்றனவாகும். உதாரணமாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் வீதி அபிவிருத்தி திணைக்களம் ஆகியவற்றிற்கு சொந்தமான வடிகால்களை யார் துப்பரவு செய்வது என்ற சர்ச்சை, சம்பந்தப்பட்ட தினைக்களமா? உள்ளூராட்சி மன்றங்களா? இன்றும் தொடர்கிறது.

எனவே அனர்த்த முகாமைத்துவம் என்பது குறிப்பட்ட ஒரு திணைக்களத்தின் வேலை அல்ல. இது ஒரு கூட்டு முயற்சி. அனைவரும் ஒத்துழைத்தால் மட்டுமே எதிர்காலத்தில் சேதாரங்களை குறைக்கமுடியும் என தெரிவித்தார்.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!