மகாவலி அதிகாரசபையினால் முன்னெடுக்கப்படும் கிவுல் ஓயா நீர்த்தேக்க கட்டுமானத் திட்டத்திற்கு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான துரைராசா ரவிகரன் மற்றும் பத்மநாதன் சத்தியலிங்கம் ஆகியோர் மிகக் கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர்.
அதற்கமைய விரைவாக கிவுல் ஓயாத் திட்டம் தொடர்பான தெளிவூட்டல் கலந்துரையாடல்ஒன்றினை வவுனியாவில் நடாத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றக் கட்டடத்தொகுதியில் 23.01.2026இன்று இடம்பெற்ற கிவுல் ஓயா நீர்த்தேக்கத் திட்டம் தொடர்பான கலந்துரையாடலிலேயே நாடாளுமன்ற உறுப்பினர்களால் இவ்வாறு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில்,
தமிழ் மக்களுக்கு பல்வறேு வழிகளிலும் பாதகமாக இருக்கின்ற கிவுல் ஓயாத் திட்டம் தொடர்பான கலந்துரையாடல் விவசாய அமைச்சர் கே.டீ.லால்காந்த மற்றும் சபை முதல்வரும் அமைச்சருமான பிமல்ரத் நாயக்க ஆகியோரின் பிரசன்னத்துடன் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் கிவுல் ஓயாத் திட்டம் தொடர்பில் தெளிவூட்டுகின்ற வகையிலும், திட்டம் தொடர்பான ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களைக் கேட்டறியும் கலந்துரையாடலாக இக்கலந்துரையாடல் அமைந்திருந்தது.

அந்தவகையிலே இந்த கிவுல் ஓயாத் திட்டத்தின் பாதகத் தன்மைகள் தொடர்பில் எடுத்துக்கூறி நானும், வைத்தியயர் சத்தியலிங்கமும் இத்திட்டத்தினை மிகக் கடுமையாக எதிர்த்தோம்.
இத்திட்டம் செயற்படுத்தப்பட்டால் தமிழர்களது இனப்பரம்பல் கோலம் மற்றியமைக்கப்படுவதுடன், தமிழர்களது பூர்வீக தொல்லியல் சான்றுகளும் அழிக்கப்படுமென்பதைச் சுட்டிக் காட்டினோம்.
இதுதவிர சுற்றுச்சூழல் பாதிப்பு நிலைகள் ஏற்படும் அபாய நிலைகள் இருப்பதையும் இதன்போது மிகத் தெளிவாகச் சுட்டிக் காட்டியிருந்தோம்.
இனப்பரம்பல் கோலத்தை மாற்றியமைக்கும் கிவுல் ஓயா
குறிப்பாக இந்தக் கிவுல் ஓயா நீர்த்தேக்கத் திட்டத்தினை செயற்படுத்தினால் வவுனியா வடக்கில் இருக்கின்ற தமிழ் மக்களின் பூர்வீக இராமன்குளம், கொட்டோடைக் குளம், ஒயாமடுக் குளம், வெள்ளான் குளம், பெரியகட்டுக் குளம், பனிக்கல்மடுக் குளம், சன்னமுற்றமடுக் குளம், கம்மாஞ்சிக் குளம், குறிஞ்சாக் குளம், புலிக்குட்டிக் குளம், திரிவைச்ச குளம் முதலான சிறிய நீர்ப்பாசனக் குளங்களும், அவற்றின் கீழான வயல்காணிகளும், வெடிவைச்சகல்லு குளத்தின் கீழ் வரும் வயல் காணிகள் பகுதியளவிலும், நாவலர்பாம், கல்லாற்றுக்குளம், ஈச்சன்குளம், கூழாங்குளம் வயற் காணிகளும் வவுனியா வடக்கிலுள்ள பழந்தமிழ் கிராமங்களான காட்டுப்பூவரசங்குளம் கிராமம், காஞ்சூரமோட்டை கிராமம், மருதோடைக் கிராமத்தின் ஒருபகுதி போன்ற தமிழ் மக்களின் பூர்வீக குளங்களும், வயல் நிலங்களும், கிராமங்களும் நீரேந்துப் பகுதிகளுக்குள் மூழ்கிப் போகும் என்பதைச் சுட்டிக் காட்டினோம்.
இவ்வாறாக தமிழ் மக்களை அவர்களுடைய பூர்வீக இடங்களிலிருந்து வெளியேற்றி விட்டு, குடியேற்றப்பட்ட 6000 பெரும்பான்மையினக் குடும்பங்களை வலுப்படுத்தி தமிழ் மக்களின் இனப்பரம்பல் கோலத்தினை மாற்றியமைக்கும் இவ்வாறான திட்டங்களை ஒருபோதும் எம்மால் அனுமதிக்க முடியாதென எம்மால் தெரிவிக்கப்பட்டிருந்தது.
கிவுல் ஓயாத் திட்டத்தில் கருத்திலெடுக்கப்படாத சுற்றுச் சூழல் பாதிப்பு
இந்த கிவுல் ஓயாத் திட்டத்திற்காக வவுனியா பெரிய கட்டுக்குளம் பகுதியிலுள்ள பாரிய ஒதுக்கக் காடுகள் அழிக்கப்படவுள்ளன.
அத்தோடு கொக்குத்தொடுவாயிலுள்ள கிரிபன்வெவ என்று பெயர் மாற்றப்பட்டுள்ள தமிழர்களின் பூர்வீக ஆமையன் குளத்திற்கு நீரை நகர்த்துகின்ற போது 2500 ஹெக்டெயர் காடுகள் அழிந்துவிடுமென சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அதேவேளை இத்திட்டத்தினை அண்மித்த புதிய குடியேற்றங்களுக்காக 1500 ஹெக்டெயர் அளவிலான வாழ்விடத்தினை வனஜீவராசிகள் இழப்பதால் மனித – யானை மோதல்கள் மற்றும் ஏனைய வனஜீவராசிகளுக்கிடையிலான மோதல்கள் தீவிரமடையுமென வனஜீவராசிகள் திணைக்களம் கவலை தெரிவித்துள்ளதாக இந்த கிவுல் ஓயாத் திட்டத்தின் சுற்றுச் சூழல் பாதுகாப்பு மதிப்பீட்டு அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
இத்திட்டத்தால் மேம்படுத்தப்படவுள்ள விவசாயநிலங்களைப் பாதுகாப்பதற்காக மின்சார வேலிகள் அமைக்கப்பட்டால் காட்டுயானைகள் மற்றும் ஏனைய வன ஜீவராசிகளின் நடமாட்டம் கேள்விக்குறியாகும். இதனால் வனஜீவராசிகளின் உயிரவாழ்வு தொடர்பான பிரச்சினை உருவாகும்.
காட்டு யானை உள்ளிட்ட வனஜீவராசிகள் புதிய வழித்தடங்களை நாடினால் மின்சார வேலிகளை மேலும் 50கிலோமீற்றருக்கு அதிகரிக்கும் நிலை ஏற்படுமெனவும் எனவே அதற்கு மேலதிக நிதி தேவைப்டும் என வன ஜீவராசிகள் திணைக்களம் கரிசனை வெளியிட்டுள்ளது.
எதிர்காலத்தில் ஒதுக்கக் காடுகளை அழிக்கும் நில மேலும் தீவிரமடைந்தால் நீண்டகாலத்தில் மழைவீழ்ச்சி குறைவடைவதற்கான நிலமை ஏற்படலாமெனக் கண்டறியப்பட்டுள்ளது.
குறித்த கிவுல் ஓயாத் திட்டப் பகுதியில் மொத்தம் 88 தாவர இனங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. அவற்றில் 02 தாவர இனங்கள் தேசிய அளவில் அச்சுறுத்தலுக்கு உள்ளானவையாகக் காணப்படுவதுடன், முக்கியமான 07 தாவர இனங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அதேவேளை இப்பகுதியில் 214 விலங்கு இனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 14விலங்கு இனங்கள் உள்ளூரைச் சேர்ந்தவையாக்காணப்படுகின்றன. மேலும் இங்கு காணப்படும் 04விலங்கு இனங்கள் உலக அளவில் ஆபத்திற்கு உள்ளானவையாகக் காணப்படுவதுடன், 08விலங்கு இனங்கள் தேசிய அளவில் அழிந்து வருபவையாகவும் உள்ளன.
அதேவேளை பறவைகளில் 10புலம்பெயர்ந்த இனங்களும் இந்தப்பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளன.
ஆகவே சுற்றுச்சூழல் பாதுகாப்புத் தொடர்பில் அவதானம் செலுத்திகின்ற போது இத்திட்டத்தின் நேர்மறையான முடிவுகளை விடவும் எதிர்மறையான தாக்கங்களே அதிகமாக இருக்கின்றன என்பதையும் இதன்போது சுட்டிக் காட்டியிருந்தோம்.
வன்னிக்கும் தமிழர்களுக்குமான வரலாற்றுத் தொடர்பை விழுங்கப் போகும் கிவுல் ஓயா
மேலும் கிவுல் ஓயாத்திட்டத்தினைச் செயற்படுத்தினால் நீரேந்துப் பகுதிக்குள் 47 தொல்லியல் இடங்கள் மூழ்கிப் போகும் அபாயநிலை ஏற்படும்.
தமிழர்களின் பூர்வீகத்தை பறைசாற்றும் வன்னி இராட்சியத்துடன் தொடர்புடைய வரலாற்றுத் தொன்மங்களே இவ்வாறு கிவுல் ஓயாத் திட்டத்தில் மூழ்கிப் போகும் நிலையில் காணப்படுகின்றன. என்பதும் இதன்போது சுட்டிக் காட்டப்பட்டது.
எனவே தமிழர்களுக்கும் வன்னிக்குமிடையிலான நீண்டகால வரலாற்றுத் தொடர்பினை நீரில் மூழ்கச்செய்கின்ற இத்திட்டத்தினை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாதென்ற எமது கருத்துக்களை் இதன் போது தெரிவித்திருந்தோம்.
இந்நிலையில் குறித்த திட்டத்தினால் பாதிப்புக்கள் எவையும் இடம்பெறாதெனத் தெரிவித்த மகாவலி அதிகாரசபையினர், கிவுல் ஓயா திட்டம் தொடர்பாக வவுனியாவில் தெளிவூட்டல் கலந்துரையாடல் ஒன்றினை நடாத்துவதாகத் தெரிவித்தனர் – என்றார்.


Recent Comments