எமது சங்கத்தால் கடந்த திங்கட்கிழமை (17/08/2026) அன்று முன்னெடுக்கப்பட்ட போராட்டமானது எவ்வித விட்டுக் கொடுப்புகளுக்கும் உட்படாது, எமக்கு ஏற்பட்ட பாதிப்பிற்கான தீர்வை பெறும் வரை முன்னெடுக்கப்படும் என்பதை ஊடகங்கள் வாயிலாக அபிவிருத்தி உத்தியோகதர்களுக்கு தெரியப்படுத்த விரும்புகின்றோம் என வட மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம் (19.08.2026) இடம்பெற்ற ஆளுநருடனான சந்திப்பிற்கும் குறித்த போராட்டத்தை பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் முன்னெடுத்த எமக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும் அந்த சங்கம் தெரிவித்துள்ளது.
எமது போராட்டத்தின் முதல்நிலை நோக்கமான ‘குறித்த அதிகாரிகளின் செயற்பாடு தொடர்பாக விசாரனைகள் மேற்கொள்ளப்பட்டு அவர்களுக்கான ஒழுக்காற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படல் வேண்டும்” என்பதில் இருந்து நாம் பின்வாங்கப் போவது இல்லை என்பதை எம் சக உத்தியோகத்தர்கள், எமக்கு ஆதரவு வழங்கிய ஏனைய தொழிற் சங்கங்கள் மற்றும் சமூக அக்கறை உடையோருக்கு தெரியப்படுத்துகின்றோம்.
தொழிற் திணைக்களத்தில் முறையாக பதிவுசெய்து வடக்கு மாகாணம் தழுவிய வகையில் மாகாண சேவை மற்றும் மத்திய சேவையில் கடமையாற்றும் மூவாயிரத்துக்கும் அதிகமான அபிவிருத்தி உத்தியோகத்தர்களை கொண்டு கடந்த 10 வருங்களுக்கு மேலாக செயற்படும் நாம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் நலன்களை மாத்திரமே முன்னிறுத்தி செயற்படுவோம் என்பதனையும், குறித்த போராட்டத்தின் இலக்கை அடைய நாம் ஏற்கனவே திட்டமிட்ட செயற்பாடுகளை முன்னெடுப்போம் என்பதனையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
நேற்றைய தினம் (19.08.2026) ஆளுநர் செயலகத்தில் இடம் பெற்றதாக ஊடகங்கள் ஊடாக அறிய முடிந்த குறித்த கலந்துரையாடலுக்கு, வட மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கமாகிய எமக்கு முறையான அழைப்பு வழங்கப்படவில்லை என்பதனை கவனத்தில் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
எம்மால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தை தமக்கு சாதகமாக பயன்படுத்தி எமது போராட்டத்தையும், அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் மலினப்படுத்தும் நோக்கோடு பிரதான தொழிற்சங்கமாகிய எம்மைத் தவிர்த்து பிறிதொரு பகுதியினரை அழைத்து பேச்சுவார்த்தை ஒன்றை நடாத்தியமைக்காக எமது கண்டனத்தையும் வெளிப்படுத்துகின்றோம்.
இவ்வாறான முறையற்ற செயற்பாடுகளை இனிவரும் காலங்களில் ஆளுநர் அவர்கள் முன்னெடுக்க மாட்டார் என நம்புவதோடு தனது நேர்மையான செயற்பாடுகள் மூலமாக ஜனாதிபதியால் ஆளுநராக நியமிக்கப்பட்ட வடமாகாண ஆளுநர் எமக்கு வழங்கிய வாக்குறுதியின் அடிப்படையில் “வாய்மையே வெல்லும்” என்ற நோக்கோடு செயற்படுவார் என நாம் ஆணித்தரமாக நம்புகின்றோம் என குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Recent Comments