மர்ம நபரிடமிருந்து தப்பி வந்த இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியின் தரம் மூன்று மாணவி..!

வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியில் தரம் 3 இல் கற்கும் மாணவி ஒருவரை மர்ம நபரொருவர் அழைத்து சென்ற நிலையில், மாணவி தப்பி வந்த போது ஆசிரியரிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.


நேற்று திங்கள் கிழமை (15.05) இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

குறித்த பாடசாலையில் நேற்றைய தினம் பாடசாலை நிறைவடைந்ததும் பெற்றோர் அழைத்து செல்ல தாமதமாகியதால் முன்பகுதியில் உள்ள இருக்கையில் தரம் 3 இல் கற்கும் மாணவி இருந்துள்ளதாகவும் இவ்வேளையில் அங்கு வந்த ஒருவர் மாணவியை அழைத்து சென்றதாகவும் தெரிய வருகின்றது.

இந் நிலையில் சிறிது தூரம் சென்ற மாணவி மீண்டும் பாடசாலையை நோக்கி அழுது கொண்டு வந்தபோது அவ்வீதியால் வந்த ஒரு பெண்மணி குறித்த மாணவியை அழைத்து வந்து பாடசாலை ஆசிரியர் ஒருவரிடம் ஒப்படைத்து விட்டு சென்றுள்ளார். இதனையடுத்து பெற்றோர் குறித்த மாணவியை அழைத்து சென்றுள்ளனர்.



இந்நிலையில் இன்று (16.05) பாடசாலையில் குறித்த மாணவியின் பெற்றோரை அழைத்து பாடசாலை பிரதி அதிபர் உரையாடியதாக தெரியவந்த நிலையில் அவருடன் தொடர்பு கொண்டு குறித்த சம்பவம் தொடர்பில் கேட்ட போது,

இச்சம்பவம் உறுதிப்படுத்தப்படவில்லை என தெரிவித்திருந்தார்.

பெற்றோருடன் நீங்கள் அழைத்து கதைத்தீர்களா என கேட்டபோது, அவர்களுடன் கதைத்திருந்தோம். எனினும் அதனை நாம் சரியாக பார்க்கவில்லை. பிள்ளையின் பாதுகாப்புக்காக பெற்றோருடன் கதைத்தோம் என தெரிவித்தார்.



இந்நிலையில் வவுனியா பொலிஸ் நிலையத்தில் அவ்வாறான சம்பவம் தொடர்பில் எவ்வித முறைப்பாடுகளும் பதியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

இதேவேளை, வவுனியா தெற்கு வலய கல்விப் பணிப்பாளருடன் தொடர்பு கொண்ட போது இச்சம்பவம் தொடர்பில் அறிந்திருக்கவில்லை எனவும் குறித்த பாடசாலை நிர்வாகத்துடன் கதைப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

(பாஸ்கரன் கதீசன்)