மன்னார் கடத்தல் முயற்சி; சந்தேக நபர்களை அடையாளம் காட்டிய சிறுமிகள்..!

தலைமன்னாரில் மூன்று மாணவிகளை கடத்த முயற்சித்ததாக கூறப்படும் சந்தேகநபர்கள் இருவர் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

மன்னார் நீதவான் முன்னிலையில் நேற்று (18) நடைபெற்ற அடையாள அணிவகுப்பின் போது, மூன்று சிறுமிகளாலும் சந்தேகநபர்கள் அடையாளம் காட்டப்பட்டதாக பொலிஸார் கூறினர்.இதனையடுத்து, சந்தேக நபர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில், சந்தேகநபர்கள் இருவரையும் எதிர்வரும் 25 ஆம் திகதியும் அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்தவுள்ளதாக பொலிஸார் கூறினர்.தலைமன்னார் சிலுவை நகரில் கடந்த 11 ஆம் திகதி இனிப்பு பண்டங்கள் வழங்குவதாகக் கூறி சிறுமிகளை சந்தேகநபர்கள் வேனிற்கு வருமாறு அழைத்துள்ளதாக தெரிவித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

அத்துடன், சந்தேகநபர்களும் மக்களால் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தனர்.இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலைமன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.