சர்வாதிகார ஆட்சி முறைக்குள் நாட்டை கொண்டு செல்ல முயற்சி; இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம்..!

ஊடகத்தை நசுக்குகின்ற செயற்பாடுகள் மற்றும் ஊடகங்களை கட்டுப்படுத்துதல் என்னும் கோணத்தில் ஊடக சுதந்திரத்தை கட்டுப்படுத்துவதன் ஊடாக சர்வாதிகார ஆட்சி முறைக்குள் நாட்டை கொண்டு செல்லும் அரசாங்கத்தின் முயற்சிழய இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாக கண்டிப்பதாக அதன் உப தலைவர் தீபன் திலீசன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் இன்று (05) நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் புதிய ஒரு சட்ட நடைமுறை ஊடாக ஜனநாயக செயற்பாடுகள் அனைத்தையும் முடக்குகின்ற ஒரு செயற்பாட்டில் இந்த அரசாங்கம் முழுமையாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. அதன் ஒரு அம்சமாக ஊடகத்துறை மீது மற்றும் ஜனநாயக செயற்பாடுகள் மீதும் கட்டுப்பாடுகளை விதைக்கின்ற கோணத்திலே சட்டங்கள் கொண்டுவர இந்த அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.



இந்த சட்டங்கள் வருவதற்கு முன்னரேயே ஊடகங்கள் அச்சுறுத்தப்பட்டிருக்கின்றது ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள் ஊடக சுதந்திரம் பறிக்கப்பட்டிருக்கிறது. இப்படி நடந்த நிலையிலே இதை ஒரு சட்டபூர்வமான விடயமாக கொண்டு வந்து ஊடக ஜனநாயக அடக்குமுறைகள் கட்டுப்படுத்தும் கோணத்தில்தான் இந்த அரசாங்கம் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறது.

ஒரு பாராளுமன்ற அங்கீகாரம் கிடைக்காத ஆட்சி முறையிலேயே ஜனாதிபதி ஒருவர் மக்களது வாக்குகள் எதுவும் பெறாது தெரிவு செய்யப்பட்டு இருக்கும் சூழலிலே அவர் தன்னுடைய பதவிகளை தக்க வைத்து அனைத்து விடயங்களை மூடி மறைப்பதற்காக ஒரு சர்வாதிகார தனம் கொண்ட செயற்பாடுகளிலேயே ஈடுபட்டு ஜனநாயக முறைகளுக்கு முட்டுக்கட்டை போடுகின்ற விடயத்தில் ஈடுபட்டு வருகிறார் என்பதுதான் இதனுடைய பின்னணியாக இருக்கிறது.



இந்நிலையிலேயே இப்படியாக இந்த அரசாங்கம் மேற்கொண்டு வரும் செயற்பாடுகள் அனைத்தையும் இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாக எதிர்க்கிறது. இதற்கு எதிரான பல செயற்பாடுகளை நாங்கள் முன்னெடுக்க இருக்கின்றோம்.

அந்த வகையிலே ஊடகத்தை நசுக்குகின்ற செயற்பாடுகள் மற்றும் ஊடகங்களை கட்டுப்படுத்துதல் என்னும் கோணத்தில் ஊடக சுதந்திரத்தை கட்டுப்படுத்துதல் அனைத்தும் உண்மைகளை, வெளிப்படைத் தன்மைகளை இல்லாமல் செய்து ஒரு வெறுமனே அரச இயந்திரமாக அரசுக்கு துதி பாடுகின்ற ஒரு கட்டமைப்பை மட்டும் உருவாக்குகிற ஒரு செயல்பாட்டை மட்டுமே தான் இந்த நாட்டிலே கொண்டுவர இந்த அரசாங்கம் முயற்சிக்கிறது.



இது ஒரு பாரதூரமான ஜனநாயக விரோத செயற்பாடாக அமையும். மக்களுடைய கருத்து சுதந்திரம் ஊடக சுதந்திரம் ஜனநாயக இடைவெளிகள் அனைத்தையும் கட்டுப்படுத்தி ஒரு சர்வ அதிகார ஆட்சி முறைக்குள் இந்த நாட்டை கொண்டு போகிற ஒரு வழியை ஏற்படுத்தும் என்கின்ற அடிப்படையிலேயே சட்டமூலங்கள் வருகின்ற போது இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாக எதிர்த்து அதற்கு எதிராக குரல் கொடுத்து செயல்படுகின்றது என்றார்.