தேஷபந்துவிற்கு கடிவாளமிட ஜனாதிபதி ரணில் வகுக்கும் புதிய திட்டம்..!

பொலிஸ் ஆணையாளர் நாயகம் என்ற புதிய பதவியை ஸ்தாபிக்கவும், அதற்காக முன்னாள் பொலிஸ்மா அதிபர் சந்தன விக்ரமரத்னவை நியமிக்கவும் ஜனாதிபதி அலுவலகம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜனாதிபதியால் ஸ்தாபிக்கப்பட்டவுள்ள பொலிஸ் ஆணையாளர் நாயகம் பதவி மூலம் முழு பொலிஸ் திணைக்களத்தின் நிர்வாகத்தையும் மேற்பார்வையிடும் பொறுப்பு ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



இந்தப் பதவிக்கு மேலதிகமாக, பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக முன்னாள் பொலிஸ்மா அதிபரை நியமிக்குமாறு மற்றுமொரு பிரேரணைவும் ஜனாதிபதி அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், புதிதாக நிறுவப்பட்டுள்ள பொலிஸ் ஆணையாளர் நாயகம் பதவியை சந்தன விக்ரமரத்னவுக்கு வழங்க அரசாங்கம் அதிக முன்னுரிமை அளித்து வருவதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.



இதனிடையே, பொலிஸ்மா அதிபராக பதவி வகித்த சந்தன விக்ரமரத்ன அண்மையில் பதவி விலகியிருந்தார். அவரின் சேவை காலம் பல தடவைகள் நீடிக்கப்பட்டிருந்தது.

அவரின் பதவி கால நீடிப்பு கொழும்பு அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், கடந்த வாரம் பதில் பொலிஸ்மா அதிபராக தேஷபந்து தென்னகோன் நியமிக்கப்பட்டார்.



எவ்வாறாயினும், நிர்பந்தத்தின் அடிப்படையிலேயே தேஷபந்து தென்னகோன் பதில் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேஷபந்து தென்னகோனின் நியமனத்திற்கும் கத்தோலிக்க திருச்சபை எதிர்ப்பு தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.