ராஜபக்ஷ தரப்பு பதுக்கிய பணத்தை மீட்டால் நாட்டில் வரி வசூலிக்க தேவையில்லை..!

இலங்கையில் ராஜபக்ச குடும்பத்தினர் திருடிய பணத்தை திரும்பப் பெற்றால் பொதுமக்களிடம் வரி வசூலிக்க வேண்டிய அவசியம் இருக்காது என முன்னாள் அதிபர் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

குறிப்பாக நடுத்தர வர்க்கத்தினருக்கு வரி அதிகரிப்பை மேற்கொள்வதற்கு முன், ராஜபக்ச குடும்பத்திடமிருந்து திருடப்பட்ட சொத்துக்களை மீட்பதற்கு முன்னுரிமை அளிக்குமாறும் அரசாங்கத்திற்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையின் குறைந்த வரி வீதத்தை சுட்டிக்காட்டிய அவர், வரிகளை அதிகரிப்பதற்கு பதிலாக இழந்த நிதியை மீட்பதில் கவனம் செலுத்துமாறு பரிந்துரைத்தார்.கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் கருத்துரைத்த அவர், ஜனவரி மாதம் முதல் வரி அதிகரிப்பினால் பொருட்களின் விலை அதிகரிக்கப்பட உள்ளதாகவும், நடுத்தர வர்க்கத்தினர், ஏழைகள் மீது வரி விதிக்கப்படக்கூடாது என்றும் தெரிவித்தார்.ராஜபக்ச குடுப்பத்தினர் இலங்கையிலும் வெளிநாடுகளிலும் பதுக்கி வைத்துள்ள நிதியை மீட்பதே இதற்கான தீர்வாக அமையும் என்றும் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க சுட்டிக்காட்டியுள்ளார்.