ரணிலை அதிருப்திக்கு உள்ளாக்கி இடுப்பிலுள்ள கோவணத்தையும் இழக்கவுள்ள ராஜபக்ஷ ரெஜிமெண்ட்..!

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் பட்டியலில் இருந்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நீக்க அக்கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச பல்வேறு இராஜதந்திர நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக அறிய முடிகிறது.

ஜனாதிபதி வேட்பாளராக தெரிவுசெய்யப்பட வேண்டுமாயின் 10 நிபந்தனைகளை தம்மிக்க பெரேரா ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் குறித்த 10 நிபந்தனைகளுக்கான தீர்வையும் தேர்தலுக்கு முன்னர் முன்மொழிய வேண்டும் எனவும் பொதுஜன பெரமுன சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



தம்மிக்க பெரேராவுக்கு அனுப்பப்பட்ட நிபந்தனைகள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தரப்புக்கும் பொதுஜன பெரமுனவால் அனுப்பப்பட்டுள்ளது. ஜனாதிபதியை அதிருப்திக்கு உள்ளாக்கும் வகையிலும், பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் ரணில் விக்ரமசிங்க இல்லை என்பதையும் மறைமுகமாக தெரிவிக்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

நிதியமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி முன்வைத்து நிறைவேற்றியுள்ள வற் வரியை 18% ஆக அதிகரிப்பதற்கான தீர்மானம் ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளமையால் எதிர்காலத்தில் மக்கள் பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுக்க நேரிடும் என்பதை பசில் ராஜபக்ச நன்கு அறிந்துள்ளார்.

அத்துடன், தற்போதைய அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கையினால் எதிர்காலத்தில் பாரிய நெருக்கடிகள் உருவாகப் போவதாகவும் பசில் கணக்குப்போட்டுள்ளார்.



தம்மிக்க பெரேராவுக்கு அனுப்பப்பட்ட இந்த 10 நிபந்தனைகளின் ஊடாக, ஜனாதிபதி தலைமையிலான தற்போதைய அரசாங்கத்தினால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு பதில் கிடைக்கும் என பசில் நம்புகிறார்.

இந்த 10 நிபந்தனைகளுக்கு தம்மிக்க பெரேரா பதில் அளித்தால், ரணிலை ஜனாதிபதித் தேர்தல் போட்டியில் இருந்து முழுமையாக நீக்கிவிட பசில் திட்டமிட்டுள்ளார்.



இந்த 10 கேள்விகளுக்கும் மிக விரைவில் பதிலளிக்க தம்மிக தயாராகி வருவதாகவும் பதில் அளிக்கும் சரியான திகதியை விரைவில் நாட்டுக்கு வெளியிடத் தயாராக உள்ளதாகவும் தெரிய வருகிறது.

இதேவேளை ரணிலின் தயவில் இன்று அரசியல் செய்யும் ராஜபக்ஷ ரெஜிமெண்ட் ரணில் எதிர்ப்பு நடவடிக்கையால் மூட்டை முடிச்சுக்களுடன் அரசியலில் இருந்து மட்டுமன்றி நாட்டிலிருந்தும் வெளியேற வேண்டிய நிலை ஏற்படும் என்பது மட்டும் உண்மை.