கட்சி என்ன தீர்மானம் எடுத்தாலும் ரணிலேயே ஆதரிப்பேன் – ராஜாங்க அமைச்சர்

ராஜபக்ச குடும்பத்தின் தீவிர ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோனின் புதல்வரான பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் பிரமீத்த பண்டார தென்னகோன், அடுத்த ஜனாதிபதி தேர்தலில், ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்க போவதாக பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.

மாத்தளை மாவட்ட செயலகத்தில் 16 ஆம் திகதி நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் அவர் இதனை கூறியுள்ளார்.



ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எப்படியான தீர்மானத்தை எடுத்தாலும் நான் ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பேன். ரணில் விக்ரமசிங்க தேவை என்ற நிலைப்பாட்டிலேயே இளம் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களை விட நான் இதனை உரத்து கூறுகிறேன் என பிரமீத்த பண்டார தென்னகோன் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2022 ஆம் ஆண்டு மக்கள் போராட்டத்தின் மூலம் பதவியில் இருந்து இறக்கப்பட்டு நாட்டில் இருந்து தப்பியோடிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, போராட்டங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட பின்னர் நாடு திரும்பினார்.



நாடு திரும்பிய கோட்டாபய ராஜபக்ச வசிப்பதற்காக பொருத்தமான உத்தியோகபூர்வ இல்லத்தை தெரிவு செய்த போது, ஜனக்க பண்டார தென்னகோன் அதுவரை தங்கியிருந்த வீடு கடும் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு அவரிடம் இருந்து பெறப்பட்டது.



இதனால், ராஜபக்சவினருக்கு நெருக்கமாக இருந்த தென்னகோன் குடும்பத்தினர் தற்போது ரணில் விக்ரமசிங்கவுக்காக பகிரங்கமாக குரல் கொடுத்து வருகின்றனர்.