ரணிலுடன் கைகோர்க்கும் சஜித் தரப்பு எம்பிகள்; சஜித் ஜனாதிபதி போட்டியிலிருந்து விலகல்?

ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் பலர் எதிர்வரும் 10 ஆம் திகதி ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கொள்ளவுள்ளதாக அந்த கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கை தொடர்பான பேச்சுவார்த்தைகள் தற்போது வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.



கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் இன்று (01) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது, பாலித்த ரங்கே பண்டார இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இந்த ஆண்டு தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில், கூட்டணிகளை அமைக்க சில அரசியல்வாதிகள் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், சில அரசியல்வாதிகள் கட்சித் தாவல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.



இந்த நிலையில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச போட்டியிட மாட்டார் என பாலித்த ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்கவுடன் அண்மையில் பல அரசியல் தலைவர்கள் பேச்சுக்களை முன்னெடுத்திருந்ததாக அவர் கூறியுள்ளார்.



இதற்கமைய, சஜித் பிரேமதாச வேட்பளராக களமிறங்க மாட்டார் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ஐக்கிய மக்கள் சக்தியின் பல உறுப்பினர்கள் எதிர்வரும் நாட்களில் தமது கட்சியுடன் இணைந்து கொள்வார்கள் எனவும் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.