பெறுபேற்றுக்கு முன்னர் உயர்தர வகுப்புக்கள் ஆரம்பம் – கல்வி அமைச்சு

தற்போது இடம்பெற்று வரும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கான உயர்தர வகுப்புக்கள் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான பெறுபேறுகள் வெளியாகும் முன்னர் அந்த மாணவர்களுக்கு உயர்தர கல்விக்கான வகுப்புக்கள் ஆரம்பிக்கப்படும் என்று முன்னர் கல்வி அமைச்சு அறிவித்திருந்தது.



இந்தநிலையில், எதிர்வரும் மாதம் 5ஆம் திகதி இந்த வகுப்புக்கள் ஆரம்பமாகும் என்று கல்வி அமைச்சு தற்போது அறிவித்துள்ளது.

இது தொடர்பான அமைச்சரவை பத்திரம் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

புதிய திட்டத்திற்கு மாகாண ஆளுநர்கள் மற்றும் கல்வி அதிகாரிகளின் அனுமதியும் கிடைத்துள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.



இதன்படி, சாதாரண தரம் வரை மட்டுமே வகுப்புகள் நடைபெறும் பாடசாலைகளின் மாணவர்கள் உயர்தரத்திற்கு அருகில் உள்ள பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுவர்.

உயர்தர வகுப்புகள் நடத்தப்பட்டாலும், குறிப்பிட்ட பாடநெறியில் பாடம் கற்பிக்கப்படாவிட்டால், மாணவர்களை உரிய பாடநெறி கொண்ட பாடசாலைக்கு அனுப்புவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.



கடந்த கோவிட் அனர்த்தத்தின் போது பாடசாலைகள் மூடப்பட்டமையினால் விடுபட்ட கல்வி மற்றும் பாடசாலை பரீட்சை அட்டவணையை மீளமைக்கும் வேலைத்திட்டத்தின் பிரகாரம் இது நடைமுறைப்படுத்தப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த ஏற்கனவே தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.