இறந்த ஒருவர் உயிருடன் இருப்பதாக போலி ஆவணம்; கிராம உத்தியோகத்தர் கைது..!

உயிழந்த பெண் ஒருவர் உயிருடன் இருப்பதாக ஆவணம் வழங்கிய கிராம உத்தியோகத்தர் ஒருவர் விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

2021 ஆம் ஆண்டு அவர் மற்றுமொரு கிராம உத்தியோகத்தரின் பிரதேசத்தில் கடமையாற்றும் போது உயிரிழந்த பெண் ஒருவரின் பெயரில் முஸ்லிம் பள்ளிவாசல் மவுலவி ஒருவருக்கு அவர் உயிருடன் இருப்பதாக சந்தேகத்திற்குரிய கிராம உத்தியோகத்தர் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.அதனை தொடர்ந்து, இவ்வாறு வழங்கப்பட்ட கடிதத்தை பெற்றுக் கொண்ட பெண் ஒருவர், களுத்துறை வெட்டுமகட பிரதேசத்தில் வேறு ஒருவருக்கு சொந்தமான காணியின் ஒரு பகுதிக்கு கடிதத்தை சமர்ப்பித்து போலி பத்திரம் தயாரித்துள்ளதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.கடிதத்தை வழங்கிய பெண்ணை தனக்கு தெரியாது எனவும், அவர் இரண்டு சிறு குழந்தைகளுடன் வந்து கேட்டதை அடுத்து கடிதம் வழங்கப்பட்டதாகவும் கிராம உத்தியோகத்தரின் வாக்கு மூலத்தில் இருந்து தெரிய வந்துள்ளதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.சந்தேகநபர் தற்போது களுத்துறை – தேக்கவத்தை கிராம அதிகாரியின் பகுதியில் கடமையாற்றும் கிராம அதிகாரி என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.