வவுனியாவில் சட்டவிரோதமாக காணி அபகரிப்பு; கமநல திணைக்களம் முறைப்பாடு..!

வவுனியாவில் குளத்து நீரேந்து பிரதேசத்தை கையகப்படுத்தி விடுமுறை நாட்களிலும், இரவு வேளைகளிலும் வேலி அடைக்கப்பட்டு வருவதாக கமநல அபிவிருத்தி திணைக்களம் வவுனியா பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளது.

வவுனியா கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் கீழான பட்டாணிச்சூர் புளியங்குளத்தின் குருமன்காட்டுக்கு அண்மித்த மன்னார் வீதி ஓரமாகவுள்ள நீரேந்து பிரதேசத்தை ஆக்கிரமித்து குறித்த சில நபர்களால் கம்பி கட்டை போடப்பட்டு கடந்த 30 ஆம் திகதி வேலி அடைக்கப்பட்டிருந்தது.



இது தொடர்பில் கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் கவனத்திற்கு சென்றதையடுத்து குறித்த வேலைகள் நிறுத்தப்பட்டிருந்தன.

எனினும் வெசாக் தினத்தை முன்னிட்டு அரச திணைக்களங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்ட நிலையில் நேற்று (06.05.2023) இரவோடு இரவாக குறித்த பகுதியில் மேலும் நீரேந்து பிரதேச நிலத்தை கையகப்படுத்தி வேலி அடைக்கப்பட்டுள்ளது.



இதனையடுத்து அரச நிலத்தை அத்துமீறி கையகப்படுத்தி வேலி அடைத்தமைக்கு எதிராக கமநல அபிவிருத்தி திணைக்களத்தால் வவுனியா பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை முன்னர் இது போன்ற நில ஆக்கிரமிப்பு இடம்பெற்றிருந்தும் குறித்த வேலிகள் கமநல திணைக்களத்தினால் அப்புறப் படுத்தப்பட்டதுடன் ஆக்கிரமிப்பாளருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.