முல்லைத்தீவில் பதின்ம வயது சிறுமி கடத்தல்; காரணம் இதுதான்..!

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவில் சிறுமியை கடத்த முற்பட்டதாக குறிப்பிட்டு இளைஞன் ஒருவர் பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

புதுக்குடியிருப்பு – கைவேலி பகுதியில் நேற்று (13) காலை இந்த சம்பவம் நடந்தது. எனினும் இது கடத்தல் அல்ல குடும்பத்தை பிரிந்துள்ள தந்தை மகளை பார்ப்பதற்கான முயற்சியென்பது தெரியவந்தது.நேற்று காலை 7 மணியளவில் கைவேலி பகுதியில் தனியார் வகுப்பில் கலந்து கொள்வதற்காக 10 வயது சிறுமியை தாயார் மோட்டார் சைக்கிளில் கொண்டு வந்து இறக்கியுள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞன் சிறுமியை இழுத்து மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் செல்ல முற்பட்டார்.

சிறுமி சத்தமிட அந்தப் பகுதியில் நின்றவர்கள் குறித்த இளைஞனை மடக்கிப் பிடித்தனர். கோம்பாவிலை சேர்ந்த காவலியான 23 வயதான இளைஞனே மடக்கிப் பிடிக்கப்பட்ட அவர் புதுக்குடியிருப்பு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.சிறுமி முல்லைத்தீவு மாவட்டமருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சட்ட மருத்துவ அதிகாரியினால் மருத்துவ பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு மருத்துவமனையில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

கைதான இளைஞனிடம் புதுக்குடியிருப்பு பொலிசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் சிறுமியின் தந்தையார் கேட்டுக் கொண்டதற்கு இணங்க சிறுமியை அழைத்துச் செல்லவே முற்பட்டதாக இளைஞன் தெரிவித்துள்ளார்.

சிறுமியின் பெற்றோர் குடும்பத் தகராறு காரணமாக பிரிந்து வாழ்கிறார்கள். தனது பிள்ளையை பார்க்க மனைவி அனுமதிப்பதில்லையென குறிப்பிட்டு தன்னிடம் உதவி கோரியதாக இளைஞன் தெரிவித்தார்.சிறுமியின் தந்தையும், கைதான இளைஞனும் நண்பர்கள் என தெரியவருகிறது. தனியார் வகுப்புக்கு வரும் போது சிறுமியை அழைத்து வருமாறு தந்தை கேட்டதால் நேற்று சிறுமியை அழைத்துச் செல்ல முற்பட்டதாகவும் சிறுமிக்கு தன்னை தெரியாதால் கத்தி சத்தமிட்டதாகவும் இளைஞன் தெரிவித்தார்.

எனினும் குறித்த விடயத்தின் உண்மைத் தன்மை தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.