Tuesday, February 17, 2026
Huis Blog

கிவுல்ஓயா திட்டத்தால் பாதிக்கப்பட்டவுள்ள தமிழ் மக்களுக்கு எதுவுமில்லை – சத்தியலிங்கம் எம்.பி

0

வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்த அறிவிக்கப்பட்டுள்ள கிவுல் ஓயா திட்டத்திற்காக மொத்த மதிப்பீடாக 24000 மில்லியன் ரூபா காட்டப்பட்டுள்ளது. இத்திட்டத்தால் 6000 விவசாயிகள் பயன்பெறவுள்ளனர்.

ஒரு விவசாயிக்கு ரூபா 4 மில்லியன் செலவு செய்யும் அளவுக்கு அவசரம் காட்டும் பின்னணி பற்றி அமைச்சர் கே.டி. லால்காந்த அவர்களுக்கு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்கள் எடுத்துரைத்தார்.

கிவுல்ஓயா திட்டம் தொடர்பிலான விசேட கூட்டமொன்று விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்த அவர்களின் தலைமையில் இன்று (17.02.2026) பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

1983ம் ஆண்டு தமிழ் மக்களின் பூர்வீக நிலங்கள் அபகரிக்கப்பட்டு சிங்கள மக்கள் அங்கு குடியேற்றப்பட்ட வரலாறும் அதனால் அந்த நிலத்திற்கு சொந்தமான தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பிலும் தொடர்சியாக இனப்பரம்பலை மாற்றும் நோக்கில் கடந்தகால பேரினவாத அரசாங்கங்களின் செயற்பாடு தொடர்பிலும் விரிவான தெளிவூட்டல் செய்யப்பட்டது.

மேலும் 1983ம் ஆண்டு தமிழ்மக்களை அவர்களது பூர்வீக நிலத்தில் இருந்து பலவந்தமாக வெளியேற்றிவிட்டு சிங்கள மக்களை அந்த நிலங்களில் குடியேற்றம் செய்யும்போது தமிழ் மக்கள் வாழ்ந்த கொக்கச்சியான்குளம்( போகஸ்வெவெ), கச்சல்சமளங்குளம் (சப்புமல்கஸ்கட), ஹெண்பாம் (கல்யானபுர), டொலர்பாம் (சம்பத்நுவர), சிலோன் தியேட்டர் (கஜபாபுர), அரியகுண்டான் (எத்தாவெட்டுனுவெவ), கொக்குத்தொடுவாய் வடக்கு ( ஜனகபுர), உந்தராயன்குளம் (நெலும்வெவெ), ஆமையன்குளம் (கிரிபென்வெவெ), வத்தாமடு(ஹெலம்பவெவ), கொக்குளாய் (கொகிலபுர) , நாயாறு (மாயபுர), திரிவைச்சகுளம் ( அந்தரவெவ), நவாலயம் மற்றும் சுவாலயம்( மொனரவெவ) ஆகிய சுமார் 14இற்கும் மேற்பட்ட இடங்கள் தற்போது சிங்கள பெயர்கள் சூட்டப்பட்டதுடன் வெடிவைத்தகல்லு மற்றும் கள்ளிக்குளம் ஆகிய பாரம்பரிய தமிழ் கிராமங்களில் பல சிங்கள உப கிராமங்களும் உருவாக்கப்பட்டுள்ளன என தெரிவித்தார். அமைச்சர் அவர்கள் மிக ஆர்வமாக அவற்றை கேட்டறிந்து கொண்டார்.

1983ம் ஆண்டு காலப்பகுதியிலிருந்து குடியேற்றப்பட்ட மக்களின் நீர்த்தேவையை பூர்த்தி செய்வதற்காகவே இத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு நீர்வழங்குவதில் எமக்கு எப்பிரச்சினையும் கிடையாது.

ஆனால் இத்திட்டத்தால் பாதிக்கப்படும் தரப்பினராகிய தமிழ்மக்கள் தொடர்பிலும் அவர்களுக்கான நிவாரனங்கள் தொடர்பிலும் எந்தவிதமான ஆய்வுகளையும் செய்யாத மகாவலி அதிகாரசபை பயன்பெறும் தரப்பினருக்கான வரப்பிரசாதங்கள் பற்றியே திட்ட ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் தமிழ் விவசாயிகளின் 910 ஏக்கர் வயல் நிலம், பிரதேச சபைக்கு சொந்தமான பாதைகள், குடியிருப்புக் காணிகள் நீரில் மூழ்கும் எனவும் பெருந்தொகையாக வனம் அழிக்கப்படுவதால் யானை-மனித முரன்பாடு அதிகரிப்பதுடன் பாரிய சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என சுட்டிக் காட்டப்பட்டது.

கடந்தகால அரசுகள் இனப்பரம்பலை மாற்றியமைக்கும் செயற்பாட்டிற்காக உருவாக்கிய அதே திட்ட வரைபினை இந்த அரசாங்கமும் எதுவித கலந்துரையாடலோ மீளாய்வோ இன்றி நடைமுறைப்படுத்த முயல்வது ஏமாற்றத்தை ஏற்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டது.

இதேவிதமான நீர்த் தேவையுடன் மகாவலி எல் வலய பிரதேசத்திற்கு வெளியே வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களை சேர்ந்த மிக அதிக எண்ணிக்கையான விவசாயிகள் உள்ளார்கள். அவர்களுக்கு நன்மை பயக்கும் வகையில் திட்டமொன்றினைப் பற்றிய சிந்தனை ஆட்சியாளர்களுக்கு ஏன் வரவில்லை எனவும் கேள்வியெழுப்பினார்.

2002ம் ஆண்டில் அரச அதிபராக இருந்த திரு.கணேஸ் அவர்களின் காலப்பகுதியில் வவுனியா வடக்கில் பெரிய மருதோடைக்குளம், சிற்றாற்றுக்குளம், கல்லாற்றுக்குளம் ஆகிய மூன்று குளங்களையும் பிரதானமாகக்கொண்ட 13 சிறிய நீர்ப்பாசனக் குளங்களை உள்ளடக்கிய படிமுறை நீர்ப்பாசன தொகுதியொன்றை புனரமைப்பதனூடாக 2000 ஏக்கர் வயல் நிலத்தில் செய்கை மேற்கொள்ள நியாப் மற்றும் சிரான் ஆகிய நிறுவனங்களுக்கு முன்மொழிவு சமர்ப்பித்தார், ஆனால் இன்றுவரை அத்திட்டம் கைகூடவில்லை.

மக்களின் நீர்த்தேவையை பூர்த்திசெய்வதுதான் அரசாங்கத்தின் நோக்கம் என்றால் இந்த திட்டம் உட்பட பல இவ்வாறான திட்டங்களை அடையாளப்படுத்தி மக்கள் பயன்பெறும் வகையில் செயற்படுத்த உங்களுடன் சேர்ந்து செயற்பட நாம் தயாராகவே உள்ளோம், ஆனால் எமது ஒத்துழைப்பை பெறும் மனநிலை இதுவரை அரசாங்கத்திற்கு வராதது துரதிஸ்ரவசமானது என குறிப்பிட்டார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் வன்னிப் பிரதேசத்தில் உள்ள வனவள திணைக்களத்தால் கையகப்படுத்தப்பட்ட குளங்களையும் வயல்களையும் விடுவிப்பதுடன் அனைத்து குளங்களையும் புனரமைக்கும் போது பாரிய நீர்ப்பாசன திட்டங்கள் தேவையற்றது என்றும் காணியற்ற அனைவருக்கும் விவசாய காணிகளை வழங்க முடியும் எனவும் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்தார். அத்துடன் பாரிய நீர்ப்பாசன திட்டங்களை நடைமுறைப்படுத்தி வனத்தை அழிப்பதனூடாக நேரடியாகவும் மறைமுகமாகவும் மனித-யானை மோதல் அதிகரிப்பதாகவும் தெரிவித்தார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் கலந்துரையாடல்களை ஏற்படுத்தி தேவையான முன்மொழிவுகளை அனைவரதும் பங்குபற்றுதலுடன் தயாரிக்க தான் தயாராக உள்ளதாக தெரிவித்தார்.

எனவே தொடர்ந்தும் தமிழ் மக்களின் காணிகள் அபகரிக்கப்படுவதை நிறுத்தி அனைத்து மக்களையும் சமனாக மதிக்கும் அரசாக இத்திட்டத்தினை மீளாய்வு செய்து தமிழ் மக்கள் பாதிப்படையாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

இதன்போது பதிலளித்த அமைச்சர், இத்திட்டம் முன்னைய அரசுகளால் இனவாத நோக்கங்களுக்காவே உருவாக்கப்பட்டுள்ளது என்பதை ஆமோதித்ததுடன், இத்திட்டம் மீளாய்வு செய்த பின்னரே நடைமுறைப் படுத்தப்படும் எனவும் உறுதியளித்தார். அத்துடன் இத்திட்டம் தொடர்பான தமிழ் தரப்பினது கரிசனைகள், முன்மொழிவுகளை தனக்கு எழுத்துமூலமாக சமர்ப்பிக்கும்படி கோரினார்.

மேலும், மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டங்களின்போது வனவள திணைக்களத்தினால் கையகப்படுத்தப்பட்ட இடங்களின்கீழ்வரும் குளங்கள், வயற்காணிகளை விடுவித்தல் தொடர்பில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட போதும் இதுவரை எவையும் விடுவிக்கப்படவில்லை என்பதையும் அமைச்சரின் கவனத்திற்கு இதன் போது பாராளுமன்ற உறுப்பினர் கொண்டு வந்தார். எனினும் அவ்வாறான தீர்மானங்கள் எவையும் மாவட்ட செயலகங்களிலிருந்து தனக்கு அனுப்பிவைக்கப்படவில்லை என அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், கிவுல் ஓயா திட்டம் மற்றும் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய இடங்களில் கைவிடப்பட்ட நிலையில் உள்ள குளங்கள், வயல் நிலங்கள், அரச திணைக்களங்களால் ஏற்படுத்தப்படும் பிரச்சனைகள் உள்ளிட்ட ஏனைய விவசாய பிரச்சினைகள் தொடர்பில் ஆராய விசேட மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டமைன்றை எமது பகுதிகளில் ஏற்பாடு செய்யுமாறு அமைச்சரிடம் இக்கூட்டத்தில் பங்குபற்றிய கெளரவ ரவிகரன் உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரினார்கள்.

கோரிக்கையை ஏற்றுக் கொண்ட அமைச்சர் அவர்கள் விரைவாக அவ்வாறான கூட்டத்தை கூடுவதாக வாக்குறுதியளித்தார்.

பலாலி அம்மன் ஆலயத்துக்குச் செல்லும் வீதியை சித்திரைக்குள் விடுவிக்குமாறு கோரிக்கை..!

0

பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்துக்குச் செல்லும் வீதி இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் உள்ளமையால், தற்காலிகமாக தனியார் காணிகள் ஊடாக ஆலயத்துக்குள் செல்லும் பாதையை நிரந்தர பாதையாக மாற்றியமைக்கும் பணிகளை இராணுவத்தினர் முன்னெடுத்த நிலையில், அதற்கு காணி உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தமையையடுத்து இராணுவத்தினர் தமது பணிகளை நிறுத்தியுள்ளனர்.

உள்நாட்டு யுத்தம் காரணமாக கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் திகதி பலாலியில் இருந்து மக்கள் வெளியேறியிருந்தனர். அதனை தொடர்ந்து அப்பகுதி இராணுவ உயர் பாதுகாப்பு வலயமாக காணப்பட்டது.

கடந்த 35 வருட காலத்திற்கு மேலாக அப்பகுதி உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள நிலையில், கடந்த ஆண்டு ஜூன் மாதமளவில் குறித்த பகுதியில் உள்ள ஆலயத்திற்கு மாத்திரம் செல்வதற்கு என உயர் பாதுகாப்பு வலயத்தினுள் தனியார் காணிகள் மற்றும் வைரவர் ஆலய காணி ஆகியவற்றின் ஊடாக பிரத்தியேக பாதை அமைக்கப்பட்டு, மக்கள் ஆலயத்திற்கு மாத்திரம் சென்று வழிபட்டுத் திரும்ப, இராணுவத்தினர் அனுமதி வழங்கியிருந்தனர்.

குறித்த தற்காலிக பாதை ஊடாகவே ஆலயத்திற்கு மக்கள் சென்று வந்த நிலையில், அப்பாதையை நிரந்தர பாதையாக்கும் நோக்குடன் இராணுவத்தினர், பாதையில் மேலதிகமாக மண் கொட்டி பாதை அமைக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.

இதனை அறிந்த காணி உரிமையாளர்கள் அது தொடர்பில் தெல்லிப்பழை பிரதேச செயலகம், வலி. வடக்கு பிரதேச சபை ஆகியவற்றுக்கு அறிவித்ததையடுத்து அவர்களால் இராணுவத்தினரின் பாதை அமைக்கும் பணி இடைநிறுத்தப்பட்டது.

ஆலயத்துக்கு செல்லும் நிரந்தர பாதை உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள போதிலும், பாதையை அண்டிய பகுதிகளில் இராணுவ முகாம்கள் எதுவும் இல்லை எனவும், பாதையை அண்மித்த பகுதியில் இராணுவத்தினரின் வாகன திருத்தகம் ஒன்றே காணப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

ஆலயத்திற்கு செல்லும் பிரத்தியேக பாதையை விடுவிப்பதனால் எவ்வித பாதுகாப்பு அச்சுறுத்தல்களும் ஏற்படாத நிலையில், அந்த பாதையை விடுவிக்கும் நோக்கமின்றி, தனியார் காணிகள் ஊடாக செல்லும் தற்காலிக பாதையை நிரந்தர பாதையாக மாற்ற இராணுவத்தினர் முயற்சிப்பது, நிரந்தர பாதையை விடுவிக்கும் நோக்கம் இராணுவத்தினருக்கு இல்லையா என்ற அச்சம் தோன்றியுள்ளதாகவும், அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

அதேவேளை சித்திரை புத்தாண்டு தினத்திற்கு முன்பாக வலி. வடக்கில் உயர் பாதுகாப்பு வலய பகுதிக்குள் உள்ள ஒரு தொகுதி காணியை விடுவிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக கடற்தொழில் அமைச்சர் தெரிவித்துள்ள நிலையில், ஆலயத்திற்கு செல்லும் பாதையை விடுவித்து, ஆலயத்தினையும் அதனை சூழவுள்ள பிரதேசங்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சித்தரை புத்தாண்டு தினத்தன்று ஆலயத்திற்கான நிரந்தர பாதை ஊடாக ஆலயத்திற்கு சுதந்திரமாக சென்று பொங்கல் பொங்கி வழிபட ஏதுவாக பாதையை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரியுள்ளனர்.

இன்றிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் இல்லை..!

0

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை ஒழிப்பதற்கான சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. சட்டமூலத்திற்கு ஆதரவாக 154 வாக்குகளும் எதிராக 2 வாக்குகளும் கிடைத்தன.

அதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை ஒழிப்பதற்கான சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு இன்று (17) நாடாளுமன்றத்தில் 152 பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

இந்த விடயம் தொடர்பில் இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கருத்து வெளியிட்ட நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார,

இன்றைய தினம் முதல் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஓய்வூதியம் ரத்து செய்யப்படவுள்ளது. இதன்படி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஓய்வூதிய கொடுப்பனவு இனி வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இதுவரையில் ஓய்வூதியம் பெற்றுக் கொண்ட தொகைகள் மீள அறவீடு செய்யப்படும் என சிலர் வதந்திகளை கிளப்பி வருகின்றனர். எனினும் இதுவரையில் செலுத்தப்பட்ட தொகைகள் எதுவும் மீள அறவீடு செய்யப்படாது.

இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களைப் போலவே தற்பொழுது நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களுக்கும் ஓய்வூதியம் கிடையாது.

கடந்த 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஓய்வு பெற்றுக் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மூன்று கோடியே 44 லட்சம் ரூபாய் ஓய்வூதிய கொடுப்பனவே வழங்கப்பட்டுள்ளது.

நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமைகளுக்கு மத்தியில் இவ்வாறு ஓய்வூதியம் பெற்றுக் கொள்வது நியாயம் இல்லை என்பதே தமது நிலைப்பாடு” என அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

மிகைஊழியர் அதிபர்களின் பிரச்சினைகள் தொடர்பில் கேள்விகளை முன்வைத்த ரவிகரன் MP..!

0

இடமாற்றம் மற்றும் நிர்வாக கொடுப்பனவுகளில் உள்ள மட்டுப்படுகளால் மிகை ஊழியர் அடிப்படையில் நியமனஞ்செய்யப்பட்ட அதிபர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் பிரதமர் மற்றும் கல்வி, உயர்கல்வி, தொழிற்கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரியவின் பதிலுக்காக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனால் சமர்ப்பிக்கப்பட்ட கேள்விகள் வாய்மூல விடைக்கான வினா நேரத்தில் 17.02.2026இன்று நாடாளுமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட குறித்த கேள்விகளுக்கான பதிலை வழங்குவதற்கு இன்னும் இரண்டுவார கால அவகாசத்தை வழங்குமாறு சபாநாயகரிடம் பிரதமர் ஹரிணி அமரசூரிய கோரியுள்ளார்.

குறித்த மிகை ஊழியர் அடிப்படையில் நியமனஞ்செய்யப்பட்ட அதிபர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் தொடர்பான கேள்விகளை நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கடந்த 22.08.2025ஆம் திகதியன்று நாடாளுமன்றில் சமர்ப்பித்தார்.

இந்நிலையில் கடந்த 02.12.2025 அன்று நாடாளுமன்ற சபை அமர்வில் குறித்த கேள்விக்கான பதில் வழங்கப்படுமென நாடாளுமன்ற அறிவித்தல்கள் மூலம் வெளிப்படுத்தப்பட்டிருந்தன. இருப்பினும் அப்போது “தித்வா” அனர்த்தத்தினால் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையால் குறித்த தினத்தில் இந்தக்கேள்விக்கான பதில்கள் வழங்கப்பட்டிருக்கவில்லை.

இத்தகைய சூழலில் குறித்த கேள்விகள் 17.02.2026 இன்று பாராளுமன்ற சபை அமர்வில் வாய்மூல விடைக்கான வினாநேரத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட போது பிரதமர் ஹரிணி அமரசூரிய இந்தக் கேள்விகளுக்கான பதிலை வழங்குவதற்கு இன்னும் இரண்டுவாரம் கால அவகாசத்தைக் கோரியுள்ளார்.

மேலும் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களால் கடந்த 2025ஆம் ஆண்டில் மாத்திரம் துறைசார்ந்த அமைச்சர்களிடம் கேட்பதற்கென 30கேள்விப் பத்திரங்கள் பாரளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

அந்தவகையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனால் சமர்ப்பிக்கப்பட்டு துறைசார் அமைச்சர்களால் நாடாளுமன்றில் பதில் வழங்குவதற்காக இதுவரை ஏழு கேள்விப்பத்திரங்கள் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.

அவற்றில் ஐந்து கேள்விப் பத்திரங்களுக்கான பதில்கள் துறைசார் அமைச்சர்களால் முழுமையாக வழங்கப்பட்டுள்ளன.

மேலும் மிகை ஊழியர் அடிப்படையில் நியமிக்கப்பட்ட அதிபர்கள் எதிர்நோக்கும் சிக்கல் தொடர்பான இந்தக் கேள்விக்கு பதில்வழங்குவதற்கு தற்போது இரண்டு வாரகால அவகாசம் கோரப்பட்டுள்ளது.

அதேவேளை ஏற்கனவே பகுதியளவில் கட்டப்பட்டு கட்டி முடிக்கப்படாத பாடசாலைக் கட்டடங்கள் தொடர்பான கேள்வியும் இதேபோல் இரண்டு முறை எடுக்கப்பட்டு இவ்வாறு இரண்டு வார கால அவகாசம் கோரப்பட்டுள்ளதோடு, மூன்றாவதும் இறுதியுமான முறையாக அடுத்த சபை அமர்வில் எடுத்துக்கொள்ளப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

பெப்.4 கறுப்புக் கொடிப் போராட்டம் பிரிவினைவாதம் அல்ல – அரசாங்கம்

0

இலங்கையின் சுதந்திர தினத்தன்று வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்பட்ட கறுப்புக் கொடிப் போராட்டங்களை அடிப்படையாகக் கொண்டு, நாட்டில் பிரிவினைவாதம் மீண்டும் உருவாவதாகக் கூறி மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு கோருவது அரசியல் உள்நோக்கம் கொண்டது என பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச். அபயரத்ன தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சிகள் மற்றும் அரசுக்கு எதிரான அமைப்புகள் இது தொடர்பில் விடுத்துள்ள கோரிக்கைகள் குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்,

“கடந்த 4 ஆம் திகதி சுதந்திர தினத்தன்று வடக்கு, கிழக்கில் இடம்பெற்ற கறுப்புக் கொடிப் போராட்டங்கள் ஒரு ஜனநாயக நாட்டில் நிலவும் கருத்துச் சுதந்திரத்தின் அங்கமே தவிர, அவை நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவோ அல்லது பிரிவினைவாதத்தின் மீள் எழுச்சியாகவோ கருதப்பட வேண்டியதில்லை. இத்தகைய போராட்டங்களை மிகைப்படுத்தி அரசியலாக்குவது தேவையற்ற செயலாகும்.

மாகாண சபைத் தேர்தலைப் பிற்போடுவது அரசின் நோக்கமல்ல. எனினும், தேர்தலை நடத்துவதற்குத் தேவையான எல்லை நிர்ணயப் பிரச்சினைகள், சட்ட ரீதியான சிக்கல்கள் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை ஆகியவற்றைச் சீர்செய்வதில் அரசு தற்போது தீவிர கவனம் செலுத்தி வருகின்றது. முறையான சீர்திருத்தங்கள் இன்றி தேர்தலை நடத்துவது மேலதிகக் குழப்பங்களையே ஏற்படுத்தும்.

எதிர்க்கட்சிகளும் அரசுக்கு எதிரான அமைப்புகளும் மக்கள் மத்தியில் தேவையற்ற அச்சத்தை உருவாக்கி, அதன் மூலம் அரசியல் இலாபம் தேட முயற்சிக்கின்றன. பிரிவினைவாதத்தைக் காரணமாகக் காட்டித் தேர்தல் கோருவது ஆரோக்கியமான அரசியல் கலாசாரம் அல்ல. தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் அரசு எப்போதும் விழிப்புடன் உள்ளது.” என்றார்.

யுத்த முடிவின் பின்னரும் மக்களிடத்தில் இதுவரை நிலைபெறாத அமைதி – பிரதமர்

0

யுத்தம் முடிவடைந்து பல வருடங்கள் கடந்த பிறகும், மக்களின் இதயங்களுக்கு அமைதி முழுமையாக வந்துள்ளதா என்பது இன்னும் ஒரு கேள்வியாகவே உள்ளது என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

மன்னார் மாவட்ட மகளிர் கூட்டத்தில் உரையாற்றும் போது பிரதமர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் தனது கருத்துக்களைத் தெரிவித்த பிரதமர், பொது மக்களிடம் கலந்தாலோசிக்காமல் போர் தொடங்கப்பட்டாலும், அதன் விளைவாக எழுந்த இனவெறி மற்றும் வன்முறையால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் பெண்கள்தான் என்று சுட்டிக் காட்டியுள்ளார்.

போரின் போது மக்களைப் பிரித்து நாட்டில் அதிகாரத்தைக் கைப்பற்றியவர்கள் இன்றும் மிகவும் வசதியான வாழ்க்கையை வாழ்ந்து வரும் நிலையில், அன்று பிளவுபட்ட சாதாரண மக்கள் இன்றும் துன்பப்படுகிறார்கள் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போதைய அரசாங்கம் இனவெறிக்கு எதிராக வலுவான போராட்டத்தை நடத்தி வருகிறது, அப்படியிருந்தும், சில அரசியல் சக்திகள் இன்னும் அதிகாரத்தைப் பெறுவதற்கான ஒரே வழியாக இனவெறி மற்றும் முரண்பாடுகளை உருவாக்க முயற்சிப்பதாக பிரதமர் வெளிப்படுத்தியுள்ளார்.

“அவர்கள் ஊழலை ஒழிக்க விரும்பவில்லை, ஜனநாயகத்தை உருவாக்க விரும்பவில்லை, அவர்களுக்கு சட்டம் அனைவருக்கும் சமமாகப் பயன்படுத்தப்படுவது முக்கியமல்ல. மக்களின் பொருளாதாரத்தைப் பற்றி அவர்களுக்கு அக்கறை இல்லை,” என்றும் பிரதமர் ஹரிணி கூறியுள்ளார்.

மேலும், அவர்களுக்கு மக்களுக்கு சேவை செய்ய அதிகாரம் தேவையில்லை, மாறாக சொந்த வாழ்க்கையை வளப்படுத்த மட்டுமே அதிகாரம் தேவை என்பதை சுட்டிக் காட்டிய பிரதமர், மக்களிடையே மீண்டும் முரண்பாடுகளை உருவாக்க இதுபோன்ற சக்திகளின் முயற்சிகள் குறித்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

சாதாரண தரப் பரீட்சை நேர அட்டவணை; வெளியான விசேட அறிவிப்பு..!

0

2025 (2026) கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சார்த்திகளுக்கு, பரீட்சையின் நேர அட்டவணை குறித்து விசேட அவதானம் செலுத்துமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை பரீட்சை ஆணையாளர் நாயகம் ஏ. கே. எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.

ஆரம்பமாகவுள்ள பரீட்சை தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் மற்றும் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் உள்ள நேர அட்டவணையை மாத்திரம் பின்பற்றுமாறு வலியுறுத்தினார்.

கடந்த ஆண்டை விட இம்முறை சாதாரண தரப் பரீட்சையின் ஐந்தாவது, ஆறாவது, ஏழாவது மற்றும் எட்டாவது நாட்களுக்கான பாடங்களின் வரிசை முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால், சரியான நேர அட்டவணையை மாத்திரம் பயன்படுத்துமாறு இந்திகா குமாரி லியனகே மேலும் குறிப்பிட்டார்.

நாளை காலை 8.30 மணிக்கு பரீட்சை ஆரம்பமாகவுள்ளதுடன், பரீட்சார்த்திகள் பரீட்சை ஆரம்பமாவதற்கு ஒரு மணித்தியாலத்திற்கு முன்னதாக நிலையங்களுக்குச் செல்ல வேண்டும்.

அத்துடன், பிற்பகல் நேரப் பரீட்சைகள் 1.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதுடன், பரீட்சார்த்திகள் மதியம் 12.30 மணிக்குள் பரீட்சை நிலையங்களுக்கு வருகை தர வேண்டும் எனவும் பரீட்சை ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.

பாதகமான கிவுல் ஓயாத் திட்டம்; மக்களுக்கு விளிப்பூட்டுவது தொடர்பில் கலந்துரையாடல்..!

0

மகாவலி அதிகாரசபையின் (எல்) வலயத்தினால் செயற்படுத்தப்படவுள்ள தமிழர்களுக்குப் பாதகமான கிவுல் ஓயா நீர்த்தேக்க குடியேற்றத் திட்டம் தொடர்பில் தெளிவூட்டல்களை வழங்கி, தமிழ் மக்களை விளிப்படையச் செய்வது தொடர்பான கலந்துரையாடலொன்று 15.02.2026நேற்று முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பங்கேற்றிருந்தார்.

அந்தவகையில் முல்லைத்தீவு ஊடக அமையத்தின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலானது, மறைந்த ஊடகவியலாளர் புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தியின் நினைவேந்தலுடன் ஆரம்பமானது.

அதனைத் தொடர்ந்து கிவுல் ஓயாத் திட்டத்தின் பாதக நிலை தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், தமிழ் மக்களுக்கு கிவுல் ஓயாத் திட்டத்தின் பாதக நிலைதொடர்பில் தெளிவூட்டி விளிப்படையச் செய்வது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டிருந்தது.

மேலும் இக் கலந்துரையாடலில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், சிரேஷ்ட ஊடகவியலாளர் அ.நிக்சன், முல்லைத்தீவு ஊடக அமையத்தைச் சார்ந்த ஊடகவியலாளர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வெடுக்குநாறி ஆலய சிவராத்திரி விழா எவ்வித தடையுமின்றி இடம்பெற வேண்டும்..!

0

வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் இவ்வருடம் சிவராத்திரி விழா எவ்வித தடையுமின்றி மேற்கொள்ளப்பட வேண்டும் என இன்று (13.02.2026) நடைபெற்ற வவுனியா வடக்கு பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டத்தின் போது இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தார்.

அத்துடன் குறித்த ஆலயத்திற்கான காணி மற்றும் பாதை விடுவிப்பு தொடர்பில் தன்னால் வடக்கு மாகாண ஆளுனருக்கும் வவுனியா வடக்கு பிரதேச செயலாளருக்கும் கடிதம் மூலம் கோரிக்கை விடப்பட்டிருந்தது.

அதன் தொடர்ச்சியாக ஆளுனரால் பிரதேச செயலாளரிடம் அறிக்கை கோரப்பட்டது. பல மாதங்கள் கடந்தும் அந்த அறிக்கை அனுப்பப்படவில்லை. ஏன் அது அனுப்பப்படவில்லை எனவும் கேள்வியெழுப்பியிருந்தார்.

விரைவில் அறிக்கையினை சமர்ப்பிப்பதாக பிரதேச செயலாளர் பதிலளித்திருந்தார்.

ரமணா விஜயகாந் பாணியில் களமிறங்கிய வைத்தியர் திலகநாதன் எம்பி..!

0

இன்றைய தினம் வவுனியா வடக்கு பிரதேசத்திற்கான பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம் பிரதேச செயலக மண்டபத்தில் மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவர் பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தலைமையில் நடைபெற்றது.

இன்றைய கூட்டத்தில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஆசிரியர் மயில்வாகனம் ஜெகதீஸ்வரன், வைத்தியர் திலகநாதன், வைத்தியர் சத்தியலிங்கம், துரைராசா ரவிகரன் ஆகியோர் உட்பட திணைக்களத் தலைவர்கள், உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

கலந்துரையாடலின் போது வவுனியா வடக்கு பிரதேசத்தின் கல்வி நிலை தொடர்பான கேள்வியை எழுப்பிய வைத்தியர் திலகநாதன் அவர்கள், கடந்த வருடம் வெளியாகிய சாதாரண தரப் பரீட்சையின் அடிப்படையில் வவுனியா வடக்கு கல்வி வலயத்தின் நிலை தொடர்பிலும், வவுனியா வடக்கின் கல்வி அபிவிருத்தி தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய விடயங்கள் தொடர்பிலும் குறித்த துறையுடன் தொடர்புடைய அதிகாரியிடம் கேள்வியெழுப்பியிருந்தார்.

எனினும் உரிய முன் ஆயத்தம் ஏதுமின்றி வருகை தந்திருந்த அதிகாரி வழமையாக சமாளிக்கும் வழியில் கருத்துக்களை பொதுவாக தெரிவித்திருந்த நிலையில், வெகுண்டெழுந்த பாராளுமன்ற உறுப்பினர் வவுனியா வடக்கு வலயம் 100 வலயங்களில் 96வது இடத்தில் இறுதி நிலையில் இருப்பதாகவும் பரீட்சை எழுதிய 561 மாணவர்களில் கணிதம், தமிழுடன் 263 மாணவர்களே சித்தியடைந்துள்ளதாகவும் கூறிய போது குறுக்கிட்ட கல்வி அதிகாரி தாங்கள் கூறுவது பிழையென வாதிட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த பாராளுமன்ற உறுப்பினர் பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ பகுப்பாய்வு அறிக்கையை அனைவருக்கும் காட்டி வவுனியா வடக்கில் மொழி, கணிதம் இல்லாது 561 மாணவர்களில் 298 (53%) மாணவர்களின் கல்வி உரிமை மட்டுமன்றி அவர்களின் எதிர்காலம் முழுமையாக அழிக்கப்பட்டு கூலித் தொழிலாளர்களாக மாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார். உண்மை ஆதாரங்களுடன் வெளிப்பட்டதால் மேலும் கதைக்காது குறித்த அதிகாரி அமைதியாகி விட்டார்.

அதுமட்டுமன்றி மேலும் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் திலகநாதன் அவர்கள், ஆசிரியர்களை பதிலால் இன்றி விட்டமை தவறு, அதன் முழுப் பொறுப்பும் வலயக் கல்விப் பணிப்பாளரையே சாரும், இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் வலயக் கல்விப் பணிப்பாளருக்கே உண்டு என்பதை மீள ஞாபகமூட்டினார்.  இதனால் குறித்த அதிகாரியால் மேலும் எதுவும் கூற முடியாத நிலை ஏற்பட்டது.

எனினும் நிலையையும், நேரமுகாமைத்துவத்தையும் கருத்தில் கொண்டு மேலதிக விடயங்களை மாவட்ட அபிவிருத்தி கூட்டத்தில் கதைப்போம் என சக பாராளுமன்ற உறுப்பினரான மயில்வாகனம் ஜெகதீஸ்வரன் அவர்கள் கூறியதற்கு இணங்க குறித்த விடயம் நிறைவுக்கு வந்தது.

அதன் பின்னர் வெடுக்குநாறி சிவராத்திரி விழா ஏற்பாடுகள் உட்பட பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டு நிகழ்வு நிறைவுக்கு வந்தது.

error: Content is protected !!