இலங்கையில் டித்வா புயலால் பாதிக்கப்பட்ட 14 இலட்சம் மக்களில் 2 இலட்சத்து 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பல பகுதிகளில் தொடர்பு வசதிகள் துண்டிக்கப்பட்டதாலும், பல வீதிகள் மற்றும் அணுகுமுறைகள் தடுக்கப்பட்டதாலும், உண்மையான எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கக்கூடும் எனவும் யுனிசெப் அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதி எம்மா பிரிக்ஹாம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் யுனிசெப் அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதி எம்மா பிரிக்ஹாம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
டித்வா புயல் தாக்கத்தால் இலங்கையில் குழந்தைகள் கடுமையான மனிதாபிமான நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர். நவம்பர் 28 ஆம் திகதி அதிகாலை கிழக்குக் கரையை கடந்து சென்ற புயல், பெரும் வெள்ளப்பெருக்கு மற்றும் மண் சரிவுகளை ஏற்படுத்தி பல மாவட்டங்களை மிக மோசமான நிலையில் விட்டுச் சென்றுள்ளது.
ஆரம்பகட்ட மதிப்பீடுகளின் படி, பாதிக்கப்பட்ட 14 இலட்சம் மக்களில் 2 இலட்சத்து 75 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் குழந்தைகள் உள்ளடக்கப்பட்டுள்ளனர். தகவல் தொடர்பு துண்டிப்பு மற்றும் பல பகுதிகளுக்கான அணுகுமுறை பாதிக்கப்பட்டுள்ளதால், இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும்.
புயலால் குழந்தைகளும், அவர்கள் நம்பியிருந்த அத்தியாவசிய சேவைகளும் கடுமையாக சேதமடைந்துள்ளது குறித்து ஆழ்ந்த கவலை அடைகிறோம். உயிரிழப்பு, சொத்து இழப்பு, இடம்பெயர்வு என துயரத்தில் உள்ள குடும்பங்களுடன் நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம்.
மிகவும் அபாயத்தில் உள்ள குடும்பங்களுக்கு உதவுவது தற்போதைய நிலைக்கு ஏற்றதாக உள்ளது. புயல் மறைந்துவிட்டதாக தோன்றினாலும், அதன் விளைவுகள் இன்னும் கடுமையாகவே உள்ளது.”
குழந்தைகளுக்கு நோய் பரவல், ஊட்டச்சத்து குறைபாடு, பாதுகாப்பற்ற வாழ்வு, மனஅழுத்தம் போன்ற அபாயங்களை அதிகரித்துள்ளன.
பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இருக்கும் குழந்தைகள் மற்றும் குடும்பங்களின் அவசர தேவைகளுக்காக, அரசு, தேசிய அதிகாரிகள், கூட்டாளர்கள் ஆகியோருடன் ஒருங்கிணைந்து யுனிசெப் பணியாற்றி வருவதாகவும், மேலும் அவசர உதவிகளை வழங்க நிதி ஆதரவு தேவைப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் கல்வி வரலாற்றில் ஒரு காலத்தில் கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்த வடக்கு மாகாணம், இன்று கல்வித் தரத்தில் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்து வருவது வேதனைக்குரிய விடயமாகும்.
போருக்குப் பின்னரான சவால்கள், சமூகப் பொருளாதாரப் பிரச்சினைகள் எனப் பல காரணிகள் இதற்குக் கூறப்பட்டாலும், கல்வி அதிகாரிகளின் அசமந்தப் போக்கும், நிர்வாகச் சீர்கேடுகளுமே இந்த வீழ்ச்சிக்கு முக்கியக் காரணம் என்பது பரவலான குற்றச்சாட்டாக உள்ளது.
இந்தக் கட்டுரையானது, வடக்கு மாகாண கல்வியின் தற்போதைய நிலை, அதன் வீழ்ச்சிக்கான காரணிகள், குறிப்பாக அதிகாரிகளின் பங்களிப்பு மற்றும் சாத்தியமான தீர்வுகள் குறித்து விரிவாக ஆராய்கிறது.
வடக்கு மாகாணத்தின் கல்வி வீழ்ச்சி என்பது வெறும் புள்ளி விவரங்களில் அடங்கும் ஒன்றல்ல. அது ஒரு சமூகத்தின் எதிர்காலத்தையே கேள்விக்கு உள்ளாக்கும் அபாயகரமான அறிகுறியாகும்.
க.பொ.த சாதாரண மற்றும் உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளில் மாகாணம் தொடர்ச்சியாக பின்தங்கிய நிலையை எட்டியுள்ளது. உதாரணமாக, 2024 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில், சுமார் 70% மாணவர்கள் மாத்திரமே உயர் தரத்திற்குத் தகுதி பெற்றுள்ளனர்.
இது தேசிய சராசரியை விடக் குறைவானதாகும். குறிப்பாக, கணிதம், விஞ்ஞானம் மற்றும் ஆங்கிலம் போன்ற முக்கிய பாடங்களில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. பல்கலைக் கழகங்களுக்குத் தெரிவாகும் மாணவர்களின் எண்ணிக்கையும் வீழ்ச்சியடைந்து வருவது, இந்த பிரச்சினையின் தீவிரத்தை உணர்த்துகிறது.
அதிகாரிகளின் அசமந்தமும் நிர்வாகச் சீர்கேடுகளும் இந்தக் கல்விச் வீழ்ச்சிக்குப் பின்னால் காணப்படுவதுடன், மாகாணக் கல்வி அமைச்சிலிருந்து வலயக் கல்வி அலுவலகங்கள் வரை பரவியிருக்கும் அதிகாரிகளின் மெத்தனப் போக்கும், நிர்வாகத் திறமையின்மையுமே பெரும் பங்கு வகிக்கின்றன.
அந்த வகையில் இனங்காணப்பட்ட சில பிரச்சினைகள் தொடர்பில் கவனத்தைச் செலுத்துவோம்.
1. ஆசிரியர் பற்றாக்குறையும் சமனற்ற நியமனங்களும்
மாகாணத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை, குறிப்பாக முக்கிய பாடங்களுக்கு, பல ஆண்டுகளாகத் தீர்க்கப்படாத பிரச்சினையாக உள்ளது. தற்காலிக மற்றும் தொண்டர் ஆசிரியர்களைக் கொண்டு கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் அவலநிலை பல பாடசாலைகளில் காணப்படுகிறது.
மேலும், ஆசிரியர் நியமனங்கள் மற்றும் இடமாற்றங்களில் காணப்படும் அரசியல் தலையீடுகளும், அதிகாரிகளின் தான் தோன்றித்தனமான செயற்பாடுகளும் இந்தப் பிரச்சினைக்கு மேலும் வலு சேர்க்கின்றன.
தேவைப்படும் பாடசாலைகளை விடுத்து, நகர்ப்புற மற்றும் வசதியான பாடசாலைகளுக்கு ஆசிரியர்கள் முண்டியடிப்பதும், அதனை அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் விடுவதும் வடக்கின் கல்வியின் தரத்தை நேரடியாகப் பாதிக்கிறது.
உதாரணமாக தீவகம், மடு, துணுக்காய், வவுனியா வடக்கு போன்ற பிரதேசப் பாடசாலைகளுக்கு நியமனம் பெற்று வரும் புதிய ஆசிரியர்கள் தமது தனிப்பட்ட அரசியல், அதிகாரிகளின் தயவுடன் தமக்கு விருப்பமான வலயங்களுக்கு நியமனம் பெற்றுச் செல்கின்றனர். இதற்கு சில வலய அதிகாரிகளும் மேலதிகாரிகளுடனான தமது நல்லுறவு பாதிப்படையும் என்பதற்காக விடுவிப்பை வழங்குகின்றனர்.
2. வளப் பங்கீட்டில் பாரபட்சம்
பாடசாலைகளுக்கான வளப் பங்கீட்டில் வெளிப்படைத் தன்மை இல்லாததும், பாரபட்சம் காட்டப்படுவதும் கிராமப்புற மற்றும் பின்தங்கிய பாடசாலைகளை மேலும் நலிவடையச் செய்கிறது.
பௌதீக மற்றும் கற்றல் உபகரணங்கள் உரிய நேரத்தில் வழங்கப்படுவதில்லை என்பதுடன் திட்டமிடல் மற்றும் நிதி முகாமைத்துவத்தில் காணப்படும் குளறுபடிகள், பல திட்டங்கள் ஆரம்பத்திலேயே முடங்கிப் போகக் காரணமாகின்றன.
உதாரணமாக வளம் தேவை உள்ள அதிக மாணவர்களை உடைய பாடசாலைகளுக்கு குறைந்த உதவிகளை வழங்கியபடி குறைந்த வளத் தேவையுள்ள போதும் சில அதிபர்களுடன் காணப்படும் தனிப்பட்ட நல்லுறவு காரணமாக அதிக நிதி ஒதுக்கீடுகள் வழங்கப்படுகின்றன ( ஆதாரங்கள் உள்ளது)
3. கண்காணிப்பின்மையும் பொறுப்புக்கூறல் இன்மையும்
பாடசாலைகளின் கற்றல்-கற்பித்தல் செயற்பாடுகளைக் கண்காணித்து, தரத்தை உறுதி செய்ய வேண்டிய கல்வி அதிகாரிகள், தமது கடமைகளிலிருந்து தவறுவதாக பரவலாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.
பாடசாலைகளுக்கு விஜயம் செய்வது, ஆசிரியர்களுக்கு வழிகாட்டுவது, மாணவர்களின் அடைவு மட்டத்தை பகுப்பாய்வு செய்வது போன்ற அடிப்படைப் பணிகள் கூட முறையாக நடைபெறுவதில்லை.
இதனால், ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் மத்தியில் ஒருவித பொறுப்பற்ற தன்மை உருவாகிறது. தவறுகள் சுட்டிக் காட்டப்படும் போது, அதனைத் திருத்திக் கொள்வதை விடுத்து, ஒருவரையொருவர் குற்றம்சாட்டித் தப்பிச் செல்லும் போக்கே அதிகாரிகளிடம் மேலோங்கியுள்ளது.
எனினும் அதிகாரிகள் தமக்கான எரிபொருள் கொடுப்பனவு, வாகன அனுமதிப் பத்திரம், தொலைபேசிக் கொடுப்பனவு, மேலதிக நேரக் கொடுப்பனவு, போக்குவரத்துக் கொடுப்பனவு, அரச வாகனம், அரச நிதியில் கல்விச் சுற்றுலா, இடருதவிக் கடன்கள், கடமை விடுமுறைகள் எனப் பல சலுகைகளைப் பெறுகின்ற போதும் தமது கடமையைச் சரிவரச் செய்வதாகத் தெரியவில்லை.
4. சமூகப் பொருளாதாரக் காரணிகள்
கல்வி அதிகாரிகளின் அசமந்தப் போக்கு பிரதான காரணியாக இருந்தாலும், சில சமூகப் பொருளாதாரக் காரணிகளும் இந்தக் கல்வி வீழ்ச்சிக்குப் பங்களிக்கின்றன. அந்த வகையில்,
பெற்றோர்களின் பொருளாதாரப் பின்தங்கிய நிலை, போரினால் ஏற்பட்ட உளவியல் பாதிப்புகள், சொத்தழிவுகள், அதிகரித்துவரும் தனியார் கல்வி மோகம் மற்றும் சமூகச் சீர்கேடுகள் போன்றவை மாணவர்களின் கற்றல் சூழலை முழுமையாகப் பாதிக்கின்றன.
எனினும், இந்தக் காரணிகளைக் கையாண்டு, மாணவர்களுக்கு உகந்த சூழலை உருவாக்குவதும் கல்வி நிர்வாகிகளின் பொறுப்பாகும்.
தீர்வுகள்
வடக்கு மாகாணத்தின் கல்வி வீழ்ச்சி என்பது உடனடியாகக் கவனம் செலுத்தப்பட வேண்டிய ஒரு பாரிய நெருக்கடியாகும். இந்தச் சரிவைத் தடுத்து நிறுத்தி, மீண்டும் மாகாணத்தை கல்விப் பாதையில் நிமிரச் செய்ய, பின்வரும் நடவடிக்கைகள் அவசியமாகின்றன,
1. வெளிப்படையான நிர்வாகம்
ஆசிரியர் நியமனங்கள், இடமாற்றங்கள் மற்றும் வளப் பங்கீட்டில் முழுமையான வெளிப்படைத் தன்மையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதுடன் பாடசாலைகளின் நிர்வாக விடயங்களில் அதிபரை மீறி தலையீடு செய்தல் உடன் நிறுத்தப்படல் வேண்டும்.
ஒரு பாடசாலையில் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என்பது ஒரு குடும்பம், ஆகவே இதற்குள் ஏனையோரின் தலையீடுகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
2. வகைகூறல்
அனைத்து மட்டங்களிலுமுள்ள கல்வி அதிகாரிகள் தமது கடமைகளுக்குப் பொறுப்புக் கூறும் நிலையை உருவாக்க வேண்டும். செயல்திறன் மதிப்பீட்டின் அடிப்படையில் அதிகாரிகளின் பதவி உயர்வுகளும், ஏனைய சலுகைகளும் வழங்கப்படல் வேண்டும்.
3. திட்டமிட்ட வள முகாமைத்துவம்
பாடசாலைகளின் தேவைகளை துரிதமாக இனங்கண்டு, வளங்களைச் சமமாகப் பகிர்ந்தளிக்க வேண்டும்.
4. ஆசிரியர் நலன்
ஆசிரியர்களின் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் அளித்து, அவர்களின் தொழில் சார் மேம்பாட்டிற்கு உரிய பயிற்சிகளை வழங்க வேண்டும்.
அரசியல் தலையீடுகளற்ற, அதிகாரிகளின் பழிவாங்கல் மற்றும் அழுத்தமற்ற, நேர்மையான மற்றும் செயல்திறன் மிக்க ஒரு கல்வி நிர்வாகத்தை உருவாக்குவதன் மூலமே, வடக்கு மாகாணத்தின் கல்விப் பாரம்பரியத்தை மீட்டெடுக்க முடியும்.
தவறின், வடக்கு சமூகத்தின் எதிர்காலத்தையே நாம் முழுமையாக இழக்க நேரிடும்.
இன்று மாலை 6.00 மணி நிலவரப்படி, நாட்டில் நிலவும் மோசமான வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 465 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், 366 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் 1,433 பாதுகாப்பு தங்குமிடங்களில், 61,875 குடும்பங்களைச் சேர்ந்த 232,752 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
சுண்டிக்குளம் பகுதியில் உள்ள குளம் ஒன்றின் கழிமுகத்தை அகலப்படுத்தும் நடவடிக்கையின் போது, காணாமல் போன ஐந்து கடற்படை வீரர்களும் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீரோடையை விரிவுபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த போது இந்த துயரச் சம்பவம் ஏற்பட்டது. இது தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியாவில் இதுவரை 43 பேர் HIV நோயாளிகளாக இனம் காணப்பட்டுள்ளதுடன், இளவயதினரே மிக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் தடுப்பு வேலைத் திட்டத்தின் பொறுப்பு வைத்திய அதிகாரி கு.சந்திரகுமார் தெரிவித்தார்.
எச்ஐவி எயிட்ஸ் நோய் தொடர்பாக இன்று ஊடகவியலாளர்களிற்கு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்படி தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
உலக எயிட்ஸ் தினம் மார்கழி மாதம் 1ம் திகதி உலகம் முழுவதும் கடைப்படிக்கபட்டு வருகின்றது. இம்முறை சவால்களை சமாளித்து புதிய வழிகளில் போராடுதல் எனும் தொணிப்பொருளில் உலக எயிட்ஸ் தினம் அனுஸ்டிக்கபடவிருக்கின்றது.
இலங்கையில் இதுவரை 7168 பேர் எயிட்ஸ் நோயாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர்.
ஆண்கள் 5544 பெண்கள் 1603, இடைநிலை பால்நிலையை சேர்ந்த 21 பேர் இதனுள் அடங்கும். இதுவரை நாட்டில் 1629 பேர் இந்நோயால் இறந்துள்ளனர். எந்தவித தொற்று அறிகுறிகளும் இன்றி நோய்தொற்றுடன் 5700 பேர் நடமாடி வருகின்றார்கள்.
வவுனியாமாவட்டத்தில் இதுவரை 43 எச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் இனம்காணப்பட்டுள்ளனர். அவர்களில் 34 பேர் எம்மிடம் மருந்துவ சிகிச்சைகளை பெற்று வருகின்றனர்.
அவர்களில் 21 பேர் ஆண்கள். 13 பேர் பெண்கள். 2 கர்பிணி தாய்மாரும் உள்ளனர். அவர்களிடம் இருந்து பிள்ளைக்கு தொற்றாத வகையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது. 13பேர் இதுவரை மரணத்தை தளுவியுள்ளனர்.
நாட்டில் 15 வயது தொடக்கம்25 வயதிற்குட்பட்டவர்களே தொற்றாளர்களாக இருக்கும் நிலை உள்ளது. நோய்தொற்று ஏற்பட்டவர் சாதாரண ஒரு மனிதரை போலவே இருப்பர்.
வவுனியா வைத்திய சாலையில் அமைந்துள்ள பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் தடுப்பு பிரிவில் பொதுமக்கள் தாமாகவந்து பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும். இங்கு பரிசோதனைகள் மேற்கொள்பவர்களது இரகசியங்கள் பாதுகாக்கப்படும். என்றார்
நாட்டில் தற்போது நிலவும் அனர்த்த நிலைமை காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள மின் பாவனையாளர்களின் வீடுகளில் மின் துண்டிப்பு எதனையும் மேற்கொள்ளப் போவதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர், மின் பொறியியலாளர் ஷெர்லி குமார இதனை தெரிவித்துள்ளார்.
மின் கட்டணம் செலுத்தப்படாமைக்காக இந்த மாதத்தில் எந்தவொரு துண்டிப்பும் மின்சார சபையினால் மேற்கொள்ளப்பட மாட்டாது என்றும், செலுத்தப்பட வேண்டிய கட்டணம் அடுத்த மாதங்களில் உரிய கட்டணத்துடன் சேர்க்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
மேலும், பல பாதிக்கப்பட்ட பகுதிகளில் மானி வாசிப்புகள் மற்றும் மின் கட்டணப் பட்டியல்கள் விநியோகிப்பது சாத்தியமில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், அந்தக் கட்டணப் பட்டியல்கள் அடுத்த மாதங்களில் பாவனையாளர்களுக்குக் கிடைக்கச் செய்யப்படும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தின் புதிய இணையதளம் அண்மையில் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இந்த புதிய தளம் மூலம் மக்களுக்கு எம்.பிக்களுடன் நேரடி தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளும் வசதி வழங்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற ஊடகப் பிரிவு வெளியிட்ட அறிக்கையின்படி;
புதிய இணையதளம் நவீன தேவைகளுக்கு இணங்க வடிவமைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் எளிதில் அணுகக்கூடிய வகையில் பல கூடுதல் அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
“My Parliament” போர்டல் மூலம் மக்கள் பாராளுமன்றத்துடன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ளலாம்.
தளத்தில் பதிவு செய்வதன் மூலம் பாராளுமன்றம் வழங்கும் பல்வேறு சேவைகளை பொதுமக்கள் பயன்படுத்த முடியும்.
அதேசமயம், பாராளுமன்றத்துடன் பணியாற்றும் அரச ஊழியர்களும் தங்களது அதிகார பூர்வ பணிகளை இந்த பதிவு செயல்முறை மூலம் எளிதில் நிறைவேற்றலாம்.
19 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த இலங்கை பாராளுமன்றத்தின் அதிகார பூர்வ இணையதளம் இந்த புதுப்பிப்பின் மூலம் பல புதிய அம்சங்களுடன் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்சியான மழை காரணமாக 12691குடும்பங்களை சேர்ந்த 39193 பேர் பாதிப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.
தற்போது நிலவும் தொடர் மழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் குளங்களின் நீர்மட்டம் அதிகரித்து வான் பாயத் தொடங்கியுள்ளதுடன், இதனால் தாழ் நிலப் பகுதிகளிலும் வெள்ள நீர் தேங்கியுள்ளது.
இதன் காரணமாக மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவில் 656 குடும்பங்களை சேர்ந்த 2062 நபரும், கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் 4400 குடும்பங்களை சேர்ந்த 13559 நபரும், ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் 5443 குடும்பங்களை சேர்ந்த 17132 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் 1408 குடும்பங்களை சேர்ந்த 4041 பேரும், துணுக்காய் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட 520 குடும்பங்களை சேர்ந்த 1811 பேரும், வெலிஓயா பிரதேச செயலாளர் பிரிவில் 264 குடும்பங்களை சேர்ந்த 588 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த மக்கள் மீட்கப்பட்டு ஆறு பிரதேச செயலக பிரிவின் கீழுள்ள 40 இடைத்தங்கல் முகாம்களிலும் உறவினர்கள் வீடுகளிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அதில் உறவினர் வீடுகளில் 3620 குடும்பங்களை சேர்ந்த 9913 நபர்களும், இடைத்தங்கல் முகாம்களில் 1186 குடும்பங்களை சேர்ந்த 3178 நபர்களும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு ஒதியமலை கிராமத்தில் கடந்த 1984.12.02 ஆம் திகதியன்று இலங்கை இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட 32 தமிழ் மக்களின் 41ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று (02.12.2025) உணர்வெழுச்சியுடன் மேற்கொள்ளப்பட்டது.
குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைக் கிராமமான ஒதியமலையில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபி வளாகத்தில் குறித்த நினைவேந்தல் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.
அந்தவகையில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்கு ஈகைச் சுடரேற்றப்பட்டதுடன், நினைவுத் தூபிகளுக்கு மலர்தூவி, மலர்மாலை அணிவிக்கப்பட்டு உறவுகளால் உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது.
நினைவேந்தல் நிகழ்வில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தபிசாளர் வே.கரிகாலன், புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் கிரிதரன், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் பங்கேற்றிருந்தனர்.
அதனைத் தொடர்ந்து குறித்த நினைவிட வளாகத்தில் நினைவேந்தல் கூட்டமொன்று இடம்பெற்றதுடன், அதனைத் தொடர்ந்து ஒதியமலை பிள்ளையார் ஆலயத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு விசேட அத்மசாந்தி வழிபாடுகளும் மேற்கொள்ளப்பட்டது.
சீரற்ற காலநிலை காரணமாக இடம்பெயர்ந்துள்ள மக்கள் மீண்டும் தமது வீடுகளுக்குத் திரும்பும்போது அவற்றைச் சுத்தம் செய்வதற்கு அரசாங்கத்தால் ரூபாய் 25,000 வழங்கப்படவுள்ளது.
தொடக்கத்தில் ரூபாய் 10,000 வழங்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில் தற்போது பணத் தொகை உயர்த்தப்பட்டுள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நிதி அமைச்சு இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாக அதன் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்துள்ளார்.