Thursday, January 22, 2026
Huis Blog

சட்டவிரோத கரைவலைத் தொழிலை கடந்தகால அரசே ஊக்கப்படுத்தியுள்ளது – ரவிகரன் எம்.பி

0

சட்டவிரோத கரைவலைத் தொழில் முறையை மேற்கொள்வதற்கு கடந்தகால அரசுகளும், அமைச்சர்களும், அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்களும் கடற்றொழிலாளர்களை ஊக்கப்படுத்தியுள்ளதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை அவ்வாறு சட்டவிரோத கரைவலை முறைக்கு கடற்றொழிலாளர்களை ஊக்கப்படுத்தியோருக்கெதிராக இந்த அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றில் உரையாற்றும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார்.

இதன் போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கைகள் வடக்கு, கிழக்கு கடற்பரப்புகளில் இடம்பெற்று வருகின்றன.

குறிப்பாக சுருக்குவலை, வெளிச்சம்பாய்ச்சி மீன்பிடித்தல், வெடிவைத்து மீன்பிடித்தல் போன்ற சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.

இந்த சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் வடக்கு, கிழக்கு கடற்பரப்பில் தொடற்சியாக மேற்கொள்ளப்பட்டுவருவதைச் சுட்டிக்காட்டி, இத்தகைய சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளை கட்டுப்படுத்துமாறு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம்.

அந்தவகையில் இத்தகைய சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற நோக்குடன் கடற்றொழில் அமைச்சரும், பிரதி அமைச்சரும் செயற்பட்டு வருகின்றீர்கள் என்பதை நான் அறிவேன்.

நிச்சயமாக இவ்வாறான சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளை மேற்கொள்ளும் எவராக இருப்பினும் அவர்களுக்கெதிராக நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.

மேலம் கடந்த கால அரசுகள் சட்டவிரோத கரவலை தொழில் முறையை கடற்றொழிலாளர்கள் மேற்கொள்வதற்கு ஊக்கப்படுத்தி தவறான செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர் என்பதை இச்சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

அவ்வாறு கடந்தகால அரசுகள் சட்டவிரோதமான கரவலை முறைகளை மேற்கொள்வதற்கு கடற்றொழிலாளர்களை அனுமதித்ததால் தற்போது அந்த கடற்றொழிலாளர்கள் அவதிப்படுகின்றனர்.

இவ்வாறான சட்டவிரோதமான கரைவலைத் தொழில்முறைக்கு கடற்றொழிலாளர்களை ஊக்கப்படுத்திய கடந்தகால அரசுகளுக்கெதிராகவும், அமைச்சர்களுக்கெதிராகவும், இதனோடு தொடர்புடைய அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்களுக்கு எதிராகவும் மிகக்கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென இந்த அரசைக் கேட்டுக் கொள்கின்றேன்.

அதேவேளை இந்த அரசு சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளை கட்டுப்படுத்த மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன் – என்றார்.

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நஷ்ட ஈட்டுக் கொடுப்பனவை தாமதமின்றி வழங்குங்கள் – சத்தியலிங்கம் எம்பி கோரிக்கை

0

நாட்டில் அண்மைய இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நஷ்ட ஈட்டுக்கொடுப்பனவை தாமதமின்றி வழங்குமாறு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று (21.01.2026) இடம்பெற்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

கடந்த வருடம் நவம்பர் மாத இறுதியில் எமது நாட்டை மிகமோசமாக தாக்கிய பேரனர்த்தமாக டித்வா புயலும் அதன் தொடர்ச்சியாக பெய்த கடும் மழையினால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் மண்சரிவு போன்றவற்றால் ஏற்பட்ட உயிரிழப்புகள் சொத்து சேதம் என்பன எமது நாட்டின் வளர்ச்சியில் பாரிய பின்னடைவை ஏற்படுத்தியிருக்கின்றது.

இந்த நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு பின்னர் படிப்படியாக ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சியில் விழுந்த பேரிடியாகவே இதனை கருதவேண்டியுள்ளது.

கடந்த 25 வருடங்களில் இந்த நாடு 4 பேரவலங்களை சந்தித்துள்ளது. 2004 இல் ஏற்பட்ட சுனாமி பேரவலம், 2009ல் வடக்கில் நடைபெற்ற இறுதியுத்தம், 2020ல் ஏற்பட்ட கொரோனா நோய்த்தாக்கம், கடந்த வருடம் ஏற்பட்ட “டித்வா புயல்” அனர்த்தம்.

கடந்த காலங்களில் ஏற்பட்ட பேரவலங்களிலிருந்த மீண்டது போன்று இந்த அனத்தத்திலிருந்தும் மீண்டு வழமைக்கு திரும்ப வேண்டிய கட்டாய சூழ்நிலையில் நாம் அனைவரும் உள்ளோம்.

இயற்கை அனர்த்தம் என்பது நமது கட்டுப்பாட்டுக்கு மீறியது. அதனை யாராலும் தடுக்கமுடியாது. எத்தனை நவீன வசதிகள் இருந்தாலும் அனர்த்தத்தை தடுக்க முடியாது. ஆனால் அந்த அனர்த்தங்களினால் ஏற்படுகின்ற பாதகமான விழைவுகளை, சேதாரங்களை தடுப்பதற்கான அல்லது குறைப்பதற்கான முன்னாயத்தங்களை செய்வதுடன் அனர்த்தத்தினால் ஏற்பட்ட விளைவுகளையும் அனர்த்தத்திற்கு பின்னரான கால முகாமைத்துவமும் மிக முக்கியமானது. அதுவே அனர்த்த முகாமைத்துவமாகும்.

உலகளாவிய ரீதியில் அனர்த்த முகாமைத்துவம் தொடர்பாக 4 படிநிலைகள் பின்பற்றப்படுகின்றன. தடுத்தல், எச்சரிக்கை விடுத்தல் தயார்படுத்தல், எதிர்நோக்குதல், மீட்பு பணி அவசர நிவாரணம் மீள்நிர்மாணம்.
அந்த வகையில் நவம்பர் மாதம் 25 தொடக்கம் 30 வரையான காலப்பகுதியில் பாரிய அனர்த்தமொன்று நடைபெறப் போவதாக பல்வேறு சமிஞ்சைகள் முன்கூட்டியே கிடைத்த போதிலும் முறையாக தயார்படுத்தல் நடைபெறவில்லை என்ற குற்றச்சாட்டு துறைசார்ந்த திணைக்களத்தின் மீது சுமத்தப்படுகின்றது. இதனை அரசாங்கம் எதிர்க்கட்சிகள் அரசியலாக்குகின்றன என்று கூறி தனது பொறுப்பிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியாது.

இளம் குடும்பத்தலைவன் தணிகாசலம் பத்மநிகேதன் இராஜாங்கனையில் ஏற்பட்ட அனர்த்தத்தில் உயிரிழந்தார் அல்லது கொல்லப்பட்டார். குறித்த பேரூந்து சாரதிமேல் கொலை என்றுதான் இராஜாங்கனை பொலிசார் நொச்சியாகம நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர். அவ்வழக்கில் ஒரு கொலை மற்றும் 64 பயணிகளை கொலை செய்ய முயற்சித்தார் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்படவேண்டியவர்கள் யார்? முறையான முன்னறிவித்தல் இல்லாமல் இராஜாங்கனை நீர்தேக்கத்திலிருந்து நீரை திறந்தவர்களா? அல்லது அனர்த்தம் நிகழ்ந்த இடத்திற்கு பேரூந்து செல்வதற்கு அனுமதித்த காவல்துறையினரா? அல்லது நாடு ஒரு அனர்த்தத்தை எதிர் கொண்டிருந்த நிலையில் நேர்முகத் தேர்விற்கு அழைத்த நேசண்ட் டிரஸ்ட் வங்கி நிர்வாகத்தினரா? அல்லது எல்லாவற்றிற்கும் பொறுப்புக்கூற வேண்டிய தேசிய அனர்த்த முகாமைத்துவ திணைக்களமா என்பதை அரசாங்கம் தீர்மானிக்க வேண்டும்.

இந்த துர்ப்பாக்கிய சம்பவம் நிகேதனுக்கு மாத்திரம் நிகழவில்லை, இவ்வாறு பல நிகேதன்கள் உயிரிழந்துள்ளனர். பொறுப்புச் சொல்பவர் யார்?

அனர்த்தத்தில் உயிரிழப்புகள் ஏற்படுவது பல சந்தர்ப்பங்களில் தடுக்க முடியாதென்றாலும் இவ்வாறான தவிர்க்கக் கூடிய சந்தர்ப்பங்களை தடுக்காதவர்களை பொறுப்புக்கூறலில் இருந்து காப்பாற்றக் கூடாது.

எனினும் அனர்த்தம் ஏற்பட்டபோது முப்படையினரும் பொலிசாரும் ஏனையோரும் உயிரச்சுறுத்தலுக்கு மத்தியில் அர்ப்பணிப்புடன் கடமையாற்றியதை நாம் குறைத்து மதிப்பிட முடியாது. குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் கடற்படை சிப்பாய்கள் உயிரிழந்தமை, விமானியின் உயிரிழப்பு ஆகியன வேதனையான சம்பவங்களாகும்.

மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையங்கள் முறையாக செயற்பட்டனவா என்ற கேள்வியும் இல்லையெனின் செயற்பட முடியாமைக்கான காரணங்கள் என்ன என்பதையும் ஆராய்ந்து எதிர்காலத்தில் அவர்கள் சிறப்பாக செயற்பட தேவையான வளங்களை அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

மீட்பு பணி வேலைகள் நேரடியாக ஜனாதிபதி அவர்களின் நேரடி கண்காணிப்பின் கீழ் நடைபெற்றது.
இலங்கையில் இதுவரை காலமும் செயற்பட்ட அனர்த்த முகாமைத்துவத்தில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற இலங்கை செஞ்சிலுவை சங்கத்தினர் உள்ளனர், அந்த வளம் பாவிக்கப்பட வேண்டும்.

அனர்த்தம் நடைபெற்றவுடன் உடனடியாக பல்வேறு நாடுகள் உதவிகள் செய்தன. அவற்றிற்கும் இந்த சந்தர்ப்பத்தில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.

எனினும் அனர்த்தத்திற்கு பின்னரான நிலைமை தொடர்பில் நாம் கூடிய கவனம் செலுத்தவேண்டியவர்களாக இருக்கின்றோம். நான் அறிந்தவரையில் வீடுகள் வியாபார நிலையங்களுக்குள் நீர்புகுந்ததை தொடர்ந்து அவற்றினை சுத்தப்படுத்துவதற்கான கொடுப்பனவு ரூபா 25000 பெரும்பாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எனினும் தளபாடங்கள் வீட்டு உபகரணங்கள் சேதமடைந்தவர்களுக்கான கொடுப்பனவுகள் இதுவரை முற்றுப்பெறவில்லை.

அத்துடன் குறிப்பாக எமது பிரதேசத்தில் பயிர்கள் அழிவடைந்தவர்களுக்கான கொடுப்பனவுகள் கால்நடைகள் இறந்தமைக்கான கொடுப்பனவுகள் தாமதமாகவே நடைபெறுகின்றது.

கிராம சேவகர்களின் பற்றாக்குறையே தாமதம் ஏற்படுவதற்கு காரணமாக சொல்லப்படுகிறது. போதிய ஒழுங்குகளை செய்வதனூடாக தாமதத்தை குறைக்க வேண்டும்.

அத்துடன் உடைப்பெடுத்த குளங்கள் தற்காலிகமாக புனரமைக்கப்பட்டுள்ளபோதிலும் அவற்றினை நிரந்தரமாக புனரமைப்பதற்காக இந்த வருடம் நிதியொதுக்கீடு செய்யவேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.

அதனை விட முக்கியமானது அனர்த்த முகாமைத்துவத்தின் முதல் இரண்டு படிநிலைகளையும் பலப்படுத்தி எதிர்காலத்தில் பாதிப்புகளை குறைப்பதற்கான பொறிமுறை உருவாக்கப்படுதல் வேண்டும்.

பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டமைக்கான காரணம் முறையான வடிகாலமைப்பு இல்லாமை, வடிகான்கள் சட்டவிரோதமாக தடுக்கப்பட்டுள்ளமை, நீண்டகாலமாக நீர்வழிந்தோடும் வடிகான்கள் முறையாக பராமரிக்கப்படாமை போன்றனவாகும். உதாரணமாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் வீதி அபிவிருத்தி திணைக்களம் ஆகியவற்றிற்கு சொந்தமான வடிகால்களை யார் துப்பரவு செய்வது என்ற சர்ச்சை, சம்பந்தப்பட்ட தினைக்களமா? உள்ளூராட்சி மன்றங்களா? இன்றும் தொடர்கிறது.

எனவே அனர்த்த முகாமைத்துவம் என்பது குறிப்பட்ட ஒரு திணைக்களத்தின் வேலை அல்ல. இது ஒரு கூட்டு முயற்சி. அனைவரும் ஒத்துழைத்தால் மட்டுமே எதிர்காலத்தில் சேதாரங்களை குறைக்கமுடியும் என தெரிவித்தார்.

தமிழரின் இருப்பை அழிக்கும் கிவுல் ஓயா திட்டத்தை கடுமையான எதிர்ப்பேன் – ரவிகரன் எம்.பி

0

தமிழர்கள் மீதான கட்டமைக்கப்பட்ட இனவழிப்பின் வடிவமான கிவுல்ஓயா திட்டத்தினைச் செயற்படுத்துவது தொடர்பிலான கலந்துரையாடலொன்று எதிர்வரும் 23ஆம் திகதி வெள்ளிக் கிழமையன்று பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் இடம்பெறவுள்ள நிலையில், குறித்த கலந்துரையாடலில் தம்மால் கடுமையான எதிர்ப்பு வெளியிடப்படுமென வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் 21.01.2026இன்று இடம்பெற்ற கமத்தொழில், கால்நடை வளங்கள் காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் அமைச்சுசார் ஆலோசனைக்குழுக்கூட்டத்தில் கிவுல்ஓயா நீர்ப்பாசனக் கட்டுமானத் திட்டத்திற்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் எதிர்வரும் 23ஆம்திகதி கிவுல் ஓயாத்திட்டம் தொடர்பான கலந்துரையாடலொன்று ஏற்பாடு செய்யப் பட்டுள்ளதாகவும் அக்கலந்துரையாடலில் குறித்தவிடயம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்குமாறு அமைச்சர் கே.டீ.லால்காந்த இதன் போது தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் குறித்த கமத்தொழில், கால்நடை வளங்கள் காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் அமைச்சுசார் ஆலோசனைக்குழுக் கூட்டத்தில் இடம்பெற்ற விடயங்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையினால் முன்னெடுக்கப்பட விருக்கின்ற கிவுல்ஓயா நீர்த்தேக்க கட்டுமானத்திட்டத்திற்கு 2.5பில்லியன் ரூபா நிதி இவ்வருடத்திற்கான வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்கத்தினால் ஒதுக்கீடு செய்யப்பட்டதுடன் இந்த கிவுல் ஓயாத் திட்டத்தினைச் செயற்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதியும் பெறப்பட்டுள்ளது.

குறித்த கிவுல் ஓயா திட்டத்தினைச் செயற்படுத்தினால் வவுனியா வடக்கு பிரதேசத்திலுள்ள பூர்வீகத் தமிழ்மக்களின் பல சிறிய நீர்பாசனக் குளங்களும், அவற்றின் கீழான வயல் நிலங்களும், பழந்தமிழ் கிராமங்களும் பறிபோகும் அபாயம் ஏற்படுமென்பதை கமத்தொழில், கால்நடை வளங்கள் காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்கூட்டத்தில் அமைச்சர் லால்காந்தவின் கவனத்திற்கு கொண்டு வந்தேன்.

குறிப்பாக இராமன்குளம், கொட்டோடைக்குளம், ஒயாமடுக்குளம், வெள்ளான்குளம், பெரியகட்டுக்குளம், பனிக்கல்மடுக்குளம், சன்னமுற்றமடுக்குளம், கம்மாஞ்சிக்குளம், குறிஞ்சாக்குளம், புலிக்குட்டிக்குளம், திரிவைச்சகுளம் முதலான சிறிய நீர்ப்பாசனக் குளங்களும், வெடிவைச்சகல்லு குளத்தின் கீழ்வரும் வயல் காணிகள் பகுதியளவிலும், நாவலர்பாம், கல்லாற்றுக்குளம், ஈச்சன்குளம், கூழாங்குளம் வயற்காணிகளும்,

வவுனியா வடக்கிலுள்ள பழந்தமிழ் கிராமங்களான காட்டுப் பூவரசங்குளம் கிராமம், காஞ்சூரமோட்டை கிராமம், மருதோடைக் கிராமத்தின் ஒருபகுதி உள்ளிட்ட பகுதிகள் குறித்த நீர்ப்பாசன அணைக்கட்டின் நீரேந்துப் பகுதிகளாக மாறும் அபாயம் ஏற்படும் என்பதை இதன் போது அமைச்சருக்கு தெரியப்படுத்தினேன்.

இவ்வாறு தமிழ்மக்களுடைய பூர்வீக நிலங்களும், நீர்ப்பாசனக் குளங்களும் அபகரிக்கப்படுவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாதென்பதையும் சுட்டிக் காட்டினேன்.

இதன் போது அமைச்சர் கே.டீ.லால்காந்த பதிலளிக்கையில்,

எதிர்வரும் 23ஆம் திகதி பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் கிவுல் ஓயாத் திட்டம் தொடர்பான ஆலோசனைக் கூட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அதன் போது இந்த விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடலாம் எனத் தெரிவித்தார்.

எனவே எதிர்வரும் 23ஆம் திகதி இடம்பெறவுள்ள குறித்த கூட்டத்திலும் கலந்து கொண்டு, கிவுல் ஓயாத் திட்டத்தினால் தமிழர்களுக்கு ஏற்படவுள்ள பாதிப்புகள் தொடர்பில் சுட்டிக் காட்டுவதுடன், இத்திட்டத்திற்கு கடுமையான எதிர்ப்பினைத் தெரிவிப்பேன் – என்றார்.

கிவுல் ஓயா பெயரில் ஆக்கிரமிக்கப்படும் தமிழரின் பூர்வீக நிலங்கள் – சத்தியலிங்கம் எம்.பி

0

வவுனியா மாவட்டத்தின் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் கிவுல் ஓயா திட்டத்தின் பெயரால் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்கள் தொடர்ந்தும் ஆக்கிரமிக்கப்படுவதாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்கள் விசனம் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று (21.01.2026) இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

கிவுல் ஓயா திட்டமானது 2011ம் ஆண்டு திட்டமிடப்பட்டு நான்கு வருடங்களில் முடிப்பதற்கு திட்டமிடப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களால் பணிகள் கிடப்பில் போடப்பட்டன. ஆனால் தேசிய மக்கள் சக்தி அரசு இப்போது திட்டத்தை நடைமுறைப்படுத்த நேற்றைய தினம் அமைச்சரவை அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.

இத்திட்டத்தை செயல்படுத்த 23,456 மில்லியன் ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளதோடு இவ்வருட வரவு செலவு திட்டத்தில் 2500 மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

திட்ட முன்மொழிகளில் வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் நீர்த்தேவையை நிவர்த்திசெய்யும் திட்டம் என கூறப்பட்டாலும் 1983ம் ஆண்டு வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட சிங்களக் குடியேற்ற பகுதியான மகாவலி -எல் வலயத்தின் நீர்த் தேவைக்காகவே இத்திட்டம் கொண்டு வரப்படுகிறது.

மகாவலி -எல் வலயம் 480,000 ஏக்கர் நிலப்பரப்பை கொண்டது. இத்திட்டத்தை ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி ஆணையம்( UNDP) மற்றும் உணவு மற்றும் விவசாய நிறுவனம் (FAO) இணைந்து 1964-1968 காலப்பகுதியில் திட்டமிட்டிருந்தார்கள்.

இப்பிரதேசத்தில் குடியேற்றத்தை செய்து குடியேற்றவாசிகளிற்கான நீர்ப்பாசன ஆதாரங்களாக தண்ணி முறிப்புக்குளம் மற்றும் பதவியாக் குளங்களை பயன்படுத்துவதுடன் மேலதிக நீரை மகாவலி ஆற்றிலிருந்து வடமத்திய மாகாண கால்வாயினூடாக ( NCP-Canal) வழங்குவதாக திட்டமிடப்பட்டது.

ஆனால் அவ்வாறு மகாவலி ஆற்றின் நீரை கொண்டு வருவது சாத்தியமற்றது என அறிந்திருந்தாலும் அவர்களது உள்நோக்கம் வடக்கு மாகாணத்தில் இனப் பரம்பலை மாற்றுவதற்காக குடியேற்றம் செய்வதாகவே இருந்தது.

மகாவலி-எல் வலயத்தில் குடியேற்றம் செய்யப்படும் போது இந்தநாட்டில் வாழும் காணியற்ற அனைத்து இன மக்களையும் குடியேற்றியிருக்க வேண்டும், ஆனால் முழுமையான சிங்கள குடியேற்றமே அங்கு செய்யப்பட்டது. இவ்விடயத்தை நாம் சொல்லும்போது நீங்கள் இனவாதமாக சித்தரிக்கலாம்.

மகாவலி-எல் வலயத்தில் குடியேற்றப்பட்டவர்களின் குடிப்பெருக்கம் மற்றும் அதிகரித்த நீர் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில் செய்யப்பட்ட ஆய்வுகளின் பிரகாரம் மகாவலி ஆற்றிலிருந்து நீரை கொண்டு வருவது சாத்தியமற்றதாக இருப்பதால் கிவுல் ஓயா நீர் விநியோகத் திட்டத்தை முன்மொழிவதாக சொல்லப்படுகிறது.

மகாவலி-எல் வலயத்திற்கான நீரை வழங்கும் “கிவுல் ஓயா”திட்டத்திற்கான நீர் வரத்தானது வவுனியா வடக்கின் அடர்ந்த காடு மற்றும் நீர்ப்பாசன குளங்கள், வயல்களில் இருந்து சேகரிக்கப்படும் மழைநீரால் உருவாகும் சிற்றருவிகள் சேர்ந்து உருவாக்கிய ஆற்றை 4.41கி.மீ நீளமான அணைக்கட்டொன்றை கட்டுவதனூடாக நீரை தேக்குவதாகும்.

இவ்வாறு தேக்கப்படும் 3900 ஏக்கர் நீரேந்து பிரதேசம் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் வருவதுடன் இந் நீர்த்தேக்கத்தில் 64MCM அ-து 51,904 ஏக்கர் அடி நீர் சேகரிக்கப்படுவதோடு 13 கி.மீ நீளமான கால்வாயினூடாக 1700ஹெக்ரயர் ( 4100 ஏக்கர்) புதிய வயல் நிலத்திற்கு நீர் விநியோகம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் இதுகாலவரை குடியேற்றவாசிகள் பயன்படுத்திய 1700 ஏக்கர் வயலில் இரு போகம் விவசாயம் செய்வதற்கான மேலதிக நீரை வழங்கமுடியும்.

கிவுல் ஓயா திட்டத்தின் நீரேந்து பகுதியாகி பாதிக்கப்படும் வவுனியா வடக்கு பிரதேசத்திற்கு எந்தவிதமான பிரயோசனமும் இத்திட்டத்தினூடாக கிடையாது.

இத்திட்டத்தை செயல்படுத்துவதனூடாக திட்ட நன்மைகளாக 4372 ஏற்கனவே உள்ள விவசாயிகளும் 1628 புதிய விவசாயிகளுமாக 6000 விவசாய குடும்பங்கள் பயனடைவர். அத்துடன் ஏற்கனவே உள்ள 700ஹெக்ரேயர் (1700 ஏக்கர் )வயல் நிலங்களில் இரண்டு போகங்களிற்கான நீரை உறுதிப்படுத்தலுடன் 1700ஹெக்ரேயர் (4080 ஏக்கர்) புதிய நிலத்தில் புதிய குடியேற்றவாசிகள் குடியமர்த்தப்படுவர்.

அத்துடன் சுகாதாரம், கல்வி மற்றும் சந்தை வாய்ப்புகளை உறுதிப்படுத்தல், உள்ளூர் வீதிகள் மற்றும் ஏனைய வீதிகளை மேம்படுத்தி அயல் நகரங்கடன் இணைத்தல் ஆகியவற்றுடன் அங்கு வாழும் மக்களிற்கான குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு தேவையான நீர் வழங்கல் என்பனவாகும்.

கிவுல் ஓயா திட்டத்தை நடைமுறைப்படுத்துவதனால் வவுனியா மாவட்டம் பல சவால்களை சந்திக்க நேரிடும் என கருதுகிறேன்.

இத்திட்டத்தை நடைமுறைப்டுத்துவதற்காக ஏற்கனவே மகாவலி-எல் வலயத்திற்காக ஒதுக்கப்பட்ட 480,000 ஏக்கர் நிலத்திற்கு மேலதிகமாக கடந்த 2021ம் ஆண்டு மார்கழி மாதம் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலூடாக 13,000 ஏக்கருக்கு அதிகமான நிலம் வனவள திணைக்களத்தினால் மகாவலி அபிவிருத்தி அதிகார சபைக்கு விடுவிக்கப்பட்டுள்ளது.

விடுவிக்கப்பட்ட பிரதேசம் வெடிவைத்தகல் மற்றும் பட்டிக்குடியிருப்பு கிராம சேவையாளர் பிரிவுகளுக்கு சொந்தமான தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசமாகும். விடுவிக்கப்பட்ட பிரதேசத்தில் இதுவரை மனிதனால் அழிக்கப்படாத அடர்ந்த காடு, கடந்த கால இடம்பெயர்வுகளால் பாவிக்கப்படாத சிறு நீர்பாசன குளங்கள், வயல்கள் காணப்படுகிறது.

திட்ட நோக்கத்திற்காக பல ஆயிரம் ஏக்கர் காடுகள் அழிக்கப்படப் போகிறது. இவற்றுள் இலங்கையில் எங்கும் காணப்படாத தாவர மற்றும் விலங்கு வகைகள் அழிவடைவதுடன் அருகிவரும் தாவர, விலங்கினங்களின் முழுமையான அழிவும் ஏற்படும் எனவும் காடுகளில் வாழும் குறித்த பிரதேசத்திற்கு உரித்தான தாவர மற்றும் விலங்கினங்கள் அழிவடையும் என இத்திட்டத்திற்காக செய்யப்பட்ட சுற்றுச்சூழல் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் ஏற்கனவே உள்ள யானை-மனித மோதல் மேலும் மோசமடையும் எனவும் அங்கு காணப்படும் தொல்பொருள் சின்னங்கள் பாதிப்படையும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிவுல் ஓயா திட்டம், நாம் ஏன் அச்சமடைகிறோம்? , வவுனியா மாவட்டத்தில் வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவிலுள்ள வெடிவைத்தகல்லு கிராம அலுவலர் பிரிவு மற்றும் அதன் அயல் கிராமங்கள் தமிழ்மக்கள் பூர்வீகமாக வாழ்ந்து வந்த பாரம்பரிய பிரதேசம். இங்குள்ள மக்களின் பிரதான வாழ்வாதாரம் விவசாயம்.

1983 காலப் பகுதியில் ஏற்படுத்தப்பட்ட திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம் அதனை தொடர்ந்து நடைபெற்ற அசம்பாவிதங்கள் காரணமாக அங்கிருந்த மக்கள் இடம்பெயர்ந்து வேறு பிரதேசங்களில் குடியேறியிருந்தனர். இதனால் நீண்காலமாக அங்கிருந்த தமிழ் மக்களுக்கு சொந்தமான விவசாய நிலங்கள் பயிர்ச்செய்கை செய்யப்படாது பராமரிப்பின்றி இருந்தது.

“திரிவச்சகுளம்”; வெடிவைத்தகல்லு கிராமத்திலுள்ள தமிழ் மக்களால் நீண்டகாலமாக கைவிடப்பட்டிருந்த மூன்று சந்ததிக்கு முற்பட்ட வரலாற்றை கொண்ட கைவிடப்பட்ட குளமும் ஏறத்தாள 150 ஏக்கரிற்கு மேற்பட்ட வயற்காணிகளையும் கொண்டது.

இறுதி யுத்தத்திற்கு பின்னராக மக்கள் மீள்குடியேறிய நிலையில் காணி சொந்தக்காரர்கள் சிலர் 2019 காலப் பகுதியில் தமது மூதாதையரின் காணிகளை பயிச் செய்கைக்காக துப்பரவு செய்தபோது வனப் பாதுகாப்பு திணைக்களத்தினரால் கைதுசெய்யப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டதுடன் நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கலும் செய்யப்பட்டது.

வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் காணி உரிமையாளர்கள் தமது காணிக்குள் செல்வதற்கு தடையும் விதிக்கப்பட்டிருந்தது.

5 வருடங்கள் நீடித்த வழக்கு 2024ல் போதுமான ஆதாரங்களை வனப்பாதுகாப்பு திணைக்களத்தினரால் சமர்ப்பிக்க முடியாத காரணத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.

ஆனாலும் இந்த காலப்பகுதியை தமக்கு சாதகமாக்கி கொண்ட அயற்கிராமத்தில் குடியேற்றப்பட்ட பெரும்பான்மையின விவசாயிகள் மகாவலி அதிகாரசபையின் துணையுடன் குத்தகை அடிப்படையில் தமிழ் மக்களால் துப்பரவு செய்யப்பட்ட காணிகளில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆரம்பத்தில் 10 விவசாயக் குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட காணிகள் தற்போது 25 குடும்பங்களாக அதிகரித்துள்ளதுடன், நெடுங்கேணி கமநலசேவைகள் நிலையத்தில் “அந்தரவெவ கமக்காரர்அமைப்பு” என்று பதிவு செய்துள்ளனர்.

வனப் பாதுகாப்பு திணைக்களத்தால் நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் காணி உரிமையாளர்களுக்கு காணிக்குள் செல்வதற்கு தடைவிதித்துள்ள காலப்பகுதியில் எவ்வாறு மகாவலி அதிகாரசபை அந்தக் காணிகளை குத்தகைக்கு வழங்க முடியும்?

புதிய பெயரில் கமக்கார் அமைப்பாக பதிவு செய்ய முடியும் என்றால் இதற்கு அரசாங்க அதிகாரிகளும் பக்கச்சார்பாக செயற்பட்டுள்ளார்கள் என்பது தெளிவாக தெரிகின்றது.

இது இவ்வாறு இருக்க ஓரிரு மாதங்களிற்கு முன்னர் அந்தப் பிரதேசத்தில் 200 ஏக்கரிற்கு அதிகமான பிரதேசம் (1000 ஏக்கர் என்று சிலர் கூறுகின்றனர்) திட்டமிட்ட வகையில் காடழிப்பு செய்யப்பட்டுள்ளது.

அங்குள்ள மக்களின் தகவலின்படி சுமார் 1½ மாதங்களிற்கு மேலாக 5 டோசர்களும் 2 ஜேசீபி இயந்திரங்களும் காடழிப்பில் ஈடுபட்டதாக கூறுகின்றனர்.

தமிழ் மக்கள் தமது விவசாயத் தேவைக்காக வேலி அடைப்பதற்காக தடிகளை வெட்டினால் சிறையில் அடைக்கும் வனப்பாதுகாப்பு திணைக்களம் மற்றும் பொலிசாருக்கு 1½ மாதங்கள் அதுவும் பாரிய இயந்திரங்களைக் கொண்டு காடழிப்பு செய்யப்பட்டமை தெரியாது போனமை ஆச்சரியமாக இருக்கின்றது.

அத்துடன் தற்போதைய விலைவாசியில் ஒரு ஏக்கர் காணி துப்பரவாக்குவதற்கே குறைந்தது ரூபா ஒரு இலட்சம் தேவைப்படுமென்றால் 200 ஏக்கரிற்கு மேற்பட்ட காடுகள் துப்பரவு செய்வதற்கு எத்தனை மில்லியன் தேவைப்பட்டிருக்கும்? அப்படியென்றால் இதனை சாதாரணமாக பொதுமக்களால் செய்ய முடியுமா? இதன் பின்னணியில் யார் உள்ளார்கள்?

அண்மையில் செய்தியில் பார்த்தேன், அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் இந்த பிரதேசத்திற்கு சென்று விசாரித்ததில் இந்தக் காடழிப்பு பற்றி பொலிசாரோ வனப்பாதுகாப்பு திணைக்களத்தினரோ அறிந்திருக்கவில்லை என்று கூறப்பட்டது. இதனை நம்பக்கூடியதாக உள்ளதா?

ஆக தமிழ் மக்கள் மீதான ஆக்கிரமிப்பு கொள்கைளில் எந்த ஆட்சியிலும் எந்த விதமான மாற்றத்தையும் காணவில்லை. சுதந்திரத்திற்கு பின்னராக ஆட்சி பீடமேறிய அனைத்து அரசாங்கங்களும் இந்த விடயத்தில் ஒரே நிலைப்பாட்டையே கொண்டுள்ளமை தெளிவாக தெரிகின்றது. இதற்கு தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் விதிவிலக்கல்ல என்பது தெளிவாகின்றது.

பின்வரும் கேள்விகளை உங்களிடம் கேட்க விரும்புகிறேன்.

ஜனாதிபதி தேர்தலில் நீங்கள் முன்வைத்த தேர்தல் அறிக்கையில் “இனப்பரம்பலை மாற்றும் செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்” என்ற உங்கள் வாக்குறுதியை மீறஎண்ணுகிறீர்களா?

மேலும் கடந்த அரசாங்கங்கள் எண்ணிக்கையில் சிறுபான்மையாக இருந்த மக்களின் வாழ்வுரிமையை பறிக்க எடுத்த நடவடிக்கைகளை நீங்களும் தொடர விரும்புகிறீர்களா?

அத்துடன் நாட்டின் உற்பத்திப் பொருளாதாரத்தில் சிறுபன்மை மக்களின் பங்களிப்பு வேண்டாம் என என்னுகிறீர்களா?

மேலும் பாரிய நீர்பாசன திட்டங்களை நடைமுறைப்படுத்தும்போது சிறுபான்மை மக்கள் புறக்கணிக்கப்பட்டு சிங்கள மக்கள் மட்டும் குடியேற்றப்பட்டதை நீங்களும் தொடர விரும்புகிறீர்களா?

மேலும் எமது மாவட்டத்தில் அறவே வயற்காணியற்றவர்களுக்கு போரினால் கைவிடப்பட்ட குளங்களையும் வயல்க் காணிகளையும் விடுவிக்க முடியாத வனவளத் திணைக்களம் எவ்வாறு 13,000 ஏக்கர் காணியை யாருடைய அனுமதியின் பேரில் விடுவித்தார்கள்?

மேலும் வவுனியா மாவட்டத்தில் மகாவலி-எல் வலயத்திற்கு வெளியே வாழும் மக்களின் வாழ்வாதாரத்திற்கான நீர்த்தேவை இல்லையா?

மேலும் இந்த நாட்டின் சாபமான இனவாதமும் மதவாதமும் ஊழலும் போதைப் பாவனையும் இல்லாத ஒரு நாட்டை நீங்கள் படைப்பீர்கள் என்ற என்னைப் போன்றவர்களின் நம்பிக்கையை நிறைவேற்ற வாய்ப்பே இல்லையா?

அத்துடன் கடந்த கால அரசுகளால் கொண்டு வரப்பட்ட சிறுபான்மை மக்களுக்கு பாதகமான திட்டங்களை துளியளவேனும் சீர்தூக்கிப் பார்க்காமல் நடைமுறைப் படுத்த ஆயத்தமாவதை என்னவென்று சொல்வது?

உங்களின் தூரநோக்கற்ற அரசியல் மேலாதிக்க சிந்தனை, கடந்த 3 தசாப்தங்களாக நடைபெற்ற கொடிய யுத்தம், இத்தனை இழப்புக்கள், பொருளாதார வீழ்ச்சி, இத்தனைக்கும் பின்பும் உங்கள் மனங்களில் தமிழ் மக்களும் இந்த நாட்டின் பிரஜைகள் என்ற மனமாற்றம் வரும்வரை இந்தநாடு ஒருபோதும் உருப்படப் போவதில்லை என தெரிவித்தார்.

வடக்கின் கல்வியை அழிக்கும் பற்றிக் டிறஞ்சனை மற்றுங்கள் – வைத்தியர் திலகநாதன் கோரிக்கை

0

வடக்கினதும், வன்னியினதும் கல்வியை அழிக்கும் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் பற்றிக் டிறஞ்சன் அவர்கள் குறித்த பதவிக்கு பொருத்தமற்று இருப்பதால் அவரை நீக்கி பொருத்தமான ஒருவரை நியமித்து இறுதி நிலையில் உள்ள வடக்கு மாகாணத்தை பாதுகாக்குமாறு பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.

தமது வேலைக்கு ஆபத்து; இழப்பீடு வழங்கும் பணிகளிலிருந்து GS விலகல்..!

0

‘டித்வா’ (Ditwa) சூறாவளியினால் பகுதியளவில் சேதமடைந்த வீடுகளுக்கு 5 இலட்சம் ரூபா இழப்பீடு வழங்கும் பணிகளிலிருந்து கிராம உத்தியோகத்தர்கள் நேற்று (ஜனவரி 19) முதல் விலகியுள்ளதாக இலங்கை ஐக்கிய கிராம உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர் நந்தன ரணசிங்க தெரிவித்துள்ளார்.

கொடுப்பனவு நடவடிக்கைகளில் ஒரு முறைமையை ஏற்படுத்துதல், வழிகாட்டல்களைத் தயாரித்தல் மற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களின் மதிப்பீட்டின் கீழ் இழப்பீடு வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்படும் வரை இந்த தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்படமாட்டாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வீடுகளை முறையாக மதிப்பீடு செய்யாமல் 5 இலட்சம் ரூபா இழப்பீட்டை வழங்குவதற்கும், அநாவசியமாக குடியிருப்பவர்களுக்கும் அந்த இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுக் கொடுப்பதற்கும் அரசாங்கம் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளதாகக் குறிப்பிட்ட தலைவர், இந்த சுற்றறிக்கையின் அறிவுறுத்தல்களை நடைமுறைப்படுத்தினால் எதிர்காலத்தில் கிராம உத்தியோகத்தர்கள் பல கணக்காய்வுப் (Audit) பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க நேரிடும் எனத் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் வீட்டு இழப்பீடு வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த முற்படும் போது கிராம உத்தியோகத்தர்களுக்கு கிராம மட்டத்தில் பலத்த அழுத்தம் பிரயோகிக்கப்படுவதாகவும், தொழில்நுட்ப உத்தியோகத்தர் ஒருவரால் மதிப்பீடு செய்யப்படாத வீடொன்றுக்கு இழப்பீடு வழங்கினால், அதற்கான பொறுப்புக்கூறல் கிராம உத்தியோகத்தர் மீதே சுமத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

சுற்றறிக்கையில் பகுதியளவான சேதங்களுக்குரிய மதிப்பீடு அல்லது அளவுகோல்கள் முன்வைக்கப்படாததால், சுவரில் ஒரு விரிசல் ஏற்பட்டிருந்தாலும் அல்லது ஒரு தகரம் சேதமடைந்திருந்தாலும் 5 இலட்சம் ரூபாவை வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

சட்டமா அதிபரை பதவியிலிருந்து நீக்குமாறு வலியுறுத்தி நாளை போராட்டம்..!

0

சட்ட மா அதிபர் பாரிந்த ரணசிங்கவை பதவியிலிருந்து நீக்குமாறு வலியுறுத்தி, கொழும்பு மேல் நீதிமன்ற வளாகத்திற்கு முன்னால் நாளை

(21) காலை 10 மணிக்கு அமைதிவழிப் போராட்டமொன்றை முன்னெடுக்கப் பல சிவில் அமைப்புகள் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

திருகோணமலையில் சட்டவிரோதக் கட்டுமானம் தொடர்பாக நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களுக்குப் பிணை வழங்குவதற்காக, சட்டமா அதிபர் மேற்கொண்ட அத்துமீறிய தலையீடே இந்தப் போராட்டத்திற்கு உடனடி காரணமாக அமைந்துள்ளது.

பாரிந்த ரணசிங்க சட்டமா அதிபராகப் பதவியேற்றது முதல், அந்தப் பதவிக்குப் பொருத்தமற்ற 20-க்கும் மேற்பட்ட செயல்களில் ஈடுபட்டுள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய லசந்த விக்ரமதுங்க கொலை வழக்கின் மூன்று சந்தேகநபர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை மீளப் பெற்றமையும் இதில் உள்ளடங்கும்.

சட்டமா அதிபர் தொடர்ந்து முன்னெடுத்து வரும் அதிகார துஷ்பிரயோகத்திற்கு எதிராக இந்த அமைதிப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், அவரைப் பதவியிலிருந்து நீக்குமாறு வலியுறுத்திப் பலமான எதிர்ப்புக்கள் உருவாகியுள்ளன.

11ஆம் வகுப்பு மாணவியாகிய காதலியை தனது நண்பர்களுக்கு விருந்தாக்கிய காதலன்..!

0

11ஆம் வகுப்பில் கல்வி பயிலும் பாடசாலை மாணவி ஒருவரை பல தடவைகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட மாணவி, கினிகத்தேன – கோணவல பகுதியைச் சேர்ந்த இளைஞரொருவருடன் காதல் தொடர்பில் இருந்துள்ளார்.

காதலனை சந்திக்கச் சென்ற சந்தர்ப்பங்களில் அவர் தனது நண்பரின் வீட்டிற்கு அழைத்துச் சென்றதாகவும், அங்கு காதலனும் அவரது நண்பனும் இணைந்து தன்னை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகவும் பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

இந்த மாணவி தனது பாட்டியின் பாதுகாப்பில் வசித்து வருவதாகவும், கடந்த 17ஆம் திகதி காலை வீட்டைவிட்டு வெளியேறி இரவு தாமதமாக வீடு திரும்பியதைத் தொடர்ந்து சந்தேகமடைந்த பாட்டி கினிகத்தேன பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், மாணவி பல தடவைகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளானது உறுதிப்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து, மேலதிக வைத்திய பரிசோதனைக்காக மாணவி நாவலப்பிட்டிய மாவட்ட பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களும் 16–17 வயதுக்கிடைப்பட்டவர்கள் எனவும், அவர்கள் 19ஆம் திகதி அட்டன் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தப்பட்டதை அடுத்து, 2026 பெப்ரவரி 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க அட்டன் மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தின் நீதவான் பீட்டர் போல் உத்தரவிட்டுள்ளார்.

பெற்றோர்களுக்கான விழிப்புணர்வுப் பதிவு

யாழில் இருவருக்கு மரணதண்டனை விதித்து அதிரடித் தீர்ப்பு..!

0

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற படுகொலை சம்பவம் தொடர்பில் குற்றவாளிகளாக காணப்பட்ட இருவருக்கு யாழ் மேல் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியுள்ளது.

கொடிகாமம் மந்தைவெளி பகுதியில் கடந்த 2010ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அப்பகுதியை சேர்ந்த 60 வயதுடைய முதியவர் ஒருவர் கோடாரி மற்றும் பொல்லுகளால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

கொலை சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் யாழ் . மேல் நீதிமன்றில் நடைபெற்று வந்த நிலையில் ,இன்றைய தினம் (20) வழக்கு தீர்ப்புக்காக திகதியிடப்பட்டிருந்தது.

தீர்ப்புக்காக வழக்கு மன்றில் நீதிபதி டி.எஸ் சூசைதாஸ் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது, எதிரிகளான இருவரையும் மன்று நியாமான சந்தேகங்களுக்கு அப்பால் குற்றவாளிக்காக கண்டு இருவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

ஜனாதிபதியால் தீர்மானிக்கப்படும் திகதியில் நிர்ணயிக்கப்படும் இடத்தில் குற்றவாளியின் உயிர் பிரியும்வரை தூக்கிலிடுமாறு இந்த மன்று பரிந்துரைக்கிறது என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.

பதிலீடுகளற்ற ஆசிரியர் இடமாற்றங்களால் முல்லைத்தீவு மாணவர்களின் கல்வி அழிக்கப்படுகிறது..!

0

பதிலீடுகளற்ற ஆசிரியர் இடமாற்றங்களால் முல்லைத்தீவு மாணவர்களின் கல்வி மிகவும் பாதிப்படைந்துள்ளதாக ஆளுங்கட்சி வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழு உறுப்பினருமான செ.திலகநாதன் குற்றம் சுமத்தியுள்ளார்

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 27 கிராம அலுவலர் பிரிவுகளிலும் இருந்தும் தெரிவுசெய்யப்பட்ட பிரஜாசக்தி வறுமை ஒழிப்பின் சமூக அபிவிருத்திக் குழு தலைவர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று (19) ஒட்டுசுட்டான் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றபோது கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குற்றச்சாட்டை முன்வைத்தார்

இங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

நாங்கள் செல்லுமிடமெங்கும் பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுவதாக பெற்றோர்கள் தொடர்ச்சியாக முறையிடுகிறார்கள் , கடந்த வருடம் வன்னி மாவட்டத்திலிருந்து ஆசிரியர்கள் யாழ் மாவட்டத்திற்கு பதிலீட்டில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது, அங்கே பெரும் தவறு நடந்துள்ளது

வன்னி மாவட்டத்திலிருந்து ஆசிரியர்களை யாழ் மாவட்டத்திற்கு அனுப்பிய பின்னர் வன்னி மாவட்டத்திற்கு ஆசிரியர்கள் நியமிக்காமல் ஏமாற்று நாடகம் நடந்துள்ளது , இதனை சட்டத்தின் அடிப்படையில் பார்த்தால் வன்னி மாவட்டத்திற்கு ஆசிரியர்களை வழங்கிய பின்னரே யாழ் மாவட்டத்திற்கு எடுத்திருக்கவேண்டும் எனவும், இது தவறான செயற்பாடு எனவும், தவறு செய்தவர்கள் குற்றவாளிகள் எனவும் தெரிவித்தார்.

தொடர்ந்து இவ்வாறான குற்றவாளிகள் வடக்கு மாகாணத்திலிருந்து எமது வன்னிப் பிரதேசத்தின் கல்வியையும் வடக்கு மாகாணத்தின் கல்வியையும் சீரழித்துக் கொண்டிருக்கும் செயற்ப்பாடு கடந்த காலங்களில் நடைபெற்றுள்ளது

எதிர்வரும் காலங்களில் ஜனாதிபதியின் வழிகாட்டலின் கீழ் இவ்வாறான தவறுகள் இடம்பெறாது செய்வதற்கு பிரஜாசக்தி வறுமை ஒழிப்பின் சமூக அபிவிருத்தி தலைவர்களை நியமிப்பதன் ஊடாகவும், பல்வேறு குழுக்களை அமைப்பதன் ஊடாகவும், பல புத்திஜீவிகளை கொண்ட அமைப்புகளை உருவாக்குவதன் மூலமும் இவ்வாறான தவறுகளை எமது மண்ணில் இடம்பெறாது மேற்கொள்ளவுள்ளதாகவும், அதன் ஆரம்ப பணியாகவே இன்று பிரஜாசக்தியினுடைய தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள் எனவும் குறித்த நியனம் ஊடாக பாரிய பொறுப்புக்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் இதனை செவ்வனே செய்து எமது பிரதேசத்தை அபிவிருத்தி செய்வீர்கள் எனவும் தெரிவித்தார்.

error: Content is protected !!