Sunday, June 7, 2026
Huis Blog

மயிலிட்டியில் மக்களின் காணிகளில் பங்களா அமைத்து படையினர் உல்லாசம் – ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு

0

யாழ் – வலிகாமம் வடக்கு, மயிலிட்டிப் பகுதியில் இராணுவத்தினர் மக்களின் காணிகளை ஆக்கிரமித்து பங்களாக்களை அமைத்து உல்லாசமாக இருக்கும் நிலையில், காணிகளுக்குரிய மக்கள் வீதிகளில் இறங்கி போராடும் அவலநிலை ஏற்பட்டுள்ளதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது அந்த அந்த மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமை எனத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர், தமிழ் மக்களுக்கு தொடர்ந்தும் இவ்வாறான கொடுமைகள் இழைக்கப்பட்டால், அரசிற்கும் கொடுமையான நிலைகளே ஏற்படுமெனவும் எச்சரித்துள்ளார்.

மயிலிட்டி மக்களால் தமது காணிவிடுவிப்பை வலியுறுத்தி முன்னெடுக்கப்படும் கவனயீர்ப்பு நடவடிக்கையில் பங்கேற்று கருத்துத் தெரிவிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன் போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

கடந்த 1986ஆம் ஆண்டு வலிகாமம் வடக்கு, மயிலிட்டியில் வாழ்ந்த இந்த மக்களை இராணுவத்தினர் வலுக்கட்டாயமாக வெளியேற்றினர்.

இவ்வாறு தமது பூர்வீக வாழ்விடங்களிலிருந்து இராணுவத்தினரால் வெளியேற்றப்பட்ட மக்களை மீள்குடியமர்த்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை.

இந்நிலையில் அந்த மக்கள் தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி வீதிகளில் இறங்கி போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கை அரசானது எமது மக்களுக்கு செய்யும் கொடுமையிலும் கொடுமையான செயற்பாடாகவே இதனைக் காண்கின்றோம்.

கடந்த கால அரசாங்கங்கள் இந்த மக்களை மீள்குடியமர்துவது தொடர்பில் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. எனவே தற்போதைய ஆட்சியாளர்களாவது தங்களை தமது பூர்வீக வாழ்விடங்களில் மீள்குடியமர்த்துவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டுமென்பதே இந்த மக்களின் கோரிக்கையாகவுள்ளது.

அண்மையில் அனுராதபுரத்தில் இடம்பெற்ற ‘ஹிரிகம’ என்னும் காணி அனுமதிப்பத்திரங்கள் வழங்கும் நிகழ்வில் பங்கேற்ற ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க சிங்கள மக்கள் மத்தியில் உரையாற்றும் போது ” நிலம் என்பது உங்களுடைய உரிமை, உங்களுடைய சொத்து, அதனை நீங்கள் பேணிப்பாதுகாக்கவேண்டும்” என கருத்துத் தெரிவித்திருந்ததை ஊடகங்களின் ஊடாகப் பார்வையிட்டிருந்தோம்.

ஜனாதிபதி குறிப்பிட்ட அதே விடயத்தைத்தான் நாமும் கோருகின்றோம்.

நிலம் என்பது எமது உரிமை, எமது சொத்து, எங்களுடைய நிலத்தை எமக்குத்தாருங்கள் என்பதைத்தான் எமது மக்களும் நாங்களும் கோருகின்றோம்.

இந்த மக்கள் ஏறத்தாள 3500 ஏக்கருக்கும் மேற்பட்ட பூர்வீகக் காணிகளை இழந்துள்ளனர். எனவேதான் அந்த மக்கள் வீதி ஓரங்களில் நின்று தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுகின்றனர்.

எனவே தற்போதைய ஆட்சியாளர்கள் இந்த மக்களின் பூர்வீக காணிகளை விடுவிப்பதற்கு விரைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.

இந்தப் பகுதியில் மக்களின் காணிகளை ஆக்கிரமித்து இராணுவத்தினரால் ஒரு கொமாண்டோ பங்களா அமைக்கப்பட்டுள்ளது. எப்போதாவது இங்கு வந்து இராணுவத்தினர் தங்கிவிட்டுச் செல்வதற்காகவே அந்த பங்களா அமைக்கப்பட்டுள்ளதாக எம்மால் அறிய முடிகின்றது.

அந்த கொமாண்டோ பங்களா அமைக்கப்பட்டுள்ள பகுதியில் 200இற்கும் மேற்பட்ட குடும்பங்களின் காணிகள் காணப்படுகின்றன.

இவ்வாறு அந்த காணிகளுக்குரிய குடும்பங்கள் வீதிகளிலிருந்து தொடர்ச்சியாகப் போராடிக்கொண்டிருக்க, அந்த மக்களின் பூர்வீகக் காணிகளை ஆக்கிரமித்து அவற்றை அலங்கரித்து பங்களா அமைத்து இராணுவத்தினர் சுகபோகம் காண்கின்றனர். எனவேதான் நாம் எமது மக்களுக்கு கொடுமை இழைக்கப்படுகின்றது எனச் சுட்டிக்காட்டுகின்றோம்.

இதேபோன்ற கொடுமைகள் முல்லைத்தீவில் கேப்பாப்புலவு, கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி, வட்டுவாகல் உட்பட பல இடங்களில் இடம்பெறுகின்றது. மான்னாரில் முள்ளிக்குளத்திலும் இதேபோன்ற கொடுமைகள் இடம்பெறுகின்றது. அந்த மக்களும் தமது காணிகளை விடுவிப்பதற்கு தொடர் போராட்டங்களை மேற்கொண்டுவருகின்றனர்.

இந்த நாட்டில் தமிழ் மக்களாக நாம் பிறந்தது குற்றமா? தமிழ் மக்களை இவ்வாறாக வதைக்க வேண்டாம் என்றே நாம் கூறுகின்றோம்.

எமது மக்களுக்கு தொடர்ந்தும் இவ்வாறான கொடுமைகள் இழைக்கப்பட்டால், உங்களுக்கும் கொடுமையான நிலைகள் ஏற்படுமெனத் தெரிவித்துக் கொள்கின்றேன் – என்றார்.

இலங்கையின் மிகப்பெரிய மனிதப் புதைகுழி: எலும்புக் கூடுகள் 300-ஐத் தாண்டியது..!

0

இலங்கையின் இரண்டாவது மிகப்பெரிய மனிதப் புதைகுழியில், 72 நாட்களாக நடைபெற்ற அகழ்வாய்வின் போது கண்டறியப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 300-ஐத் கடந்துள்ளது.

செம்மணி சித்துப்பதிப்பாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை அடையாளம் காணப்பட்ட 302 மனித எலும்புக் கூடுகளில் 298 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாக ஒரு வருடத்திற்கும் மேலாக அகழ்வாய்வைக் கண்காணித்து வரும் பாதிக்கப்பட்டவர்கள் சார்பான சட்டத்தரணிகள் கூறுகின்றனர்.

புதைகுழியில் அகழ்வாய்வின் 72-வது நாளான இன்று (ஜூன் 7), மேலும் எட்டு எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டன. அவற்றில் இரண்டு சிறுவர்களுடையது என அவர்கள் மேலும் தெரிவித்தனர். இன்று கண்டறியப்பட்ட 6 எலும்புக்கூடுகளுடன் சேர்த்து மொத்த எண்ணிக்கை 302-ஆக அதிகரித்தது.

மனிதப் புதைகுழியின் மேலதிக அகழ்வாய்வுப் பணிகளை மேற்கொள்வதற்காக அரசாங்கத்திடமிருந்து 2.1 மில்லியன் ரூபாய் நிதி கிடைக்கப் பெற்றுள்ளமையை தொடர்ந்து, ஏழு மாதங்களின் பின்னர் புதைகுழியின் அகழ்வாய்வுப் பணிகள் 2026 ஏப்ரல் 27 திங்கட்கிழமை முற்பகல் யாழ்ப்பாணம் நீதவான் செல்வநாயகம் லெனின்குமார் முன்னிலையில் ஆரம்பமாகின.

செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வாய்வுப் பணிகள் தொடர்ச்சியாக 12 நாட்கள் மேற்கொள்ளப்பட்டதன் பின்னர், அகழ்வாய்வுப் பணியாளர்களுக்கு ஓய்வு வழங்குவதற்காக மே 9 சனிக்கிழமை அன்று பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட போது 261 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டிருந்தன. மூன்று வார கால ஓய்வின் பின்னர், இதன் அகழ்வாய்வுப் பணிகள் மீண்டும் 2026 ஜூன் முதலாம் திகதி ஆரம்பமாகின.

நீதிமன்ற உத்தரவின் பேரில், தடயவியல் தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவ மற்றும் யாழ்ப்பாண சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ், யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியின் அகழ்வாய்வுப் பணிகள் முதன் முதலாக 2025 மே 15 ஆம் திகதி ஆரம்பமாகின.

மனிதப் புதைகுழியிலிருந்து இதுவரை கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புகளுக்கு மேலதிகமாக, கண்டெடுக்கப்பட்ட 100 இற்கும் மேற்பட்ட பிற பொருட்களில், குழந்தைகளின் பால் போத்தல்கள், பொம்மை உள்ளிட்ட விளையாட்டுப் பொருட்கள், சிறுவர்களின் காலணிகள், பாடசாலைப் பைகள் மற்றும் சில நாணயங்களும் அடங்குகின்றன.

முன்னாள் அரச புலனாய்வுத் துறைத் தலைவர் சுரேஷ் சலே மருத்துவ மனையில் சேர்ப்பு..!

0

முன்னாள் அரச புலனாய்வுத்துறைத் தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே சற்று நேரத்திற்கு முன்பு கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

ஈஸ்டர் விசாரணை இறுதிக் கட்டத்தில்; பீதியில் தடுமாறும் ராஜபக்ஸ குடும்பம் – ஜெகதீஸ்வரன் எம்.பி

0

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் விசாரணை இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது. இந்நிலையில் ராஜபக்ஸ குடும்பம் என்ன செய்வது என்று பீதியடைந்த நிலையில் தடுமாறுகின்றனர். எதிர்கட்சியினரும் அவர்களுக்கு உடந்தையாக மௌனிகளாக இருக்கின்றனர் என தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஈஸ்டர் குண்டு தாக்குதலன் விசாரணை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்தச் சூழ்நிலையில், ராஜபக்ச குடும்பத்தினர் பீதியடைந்த நிலையில் என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறுகின்றனர். மேலும் அவர்கள் குறுக்கு வழியிலாவது தங்களை காப்பாற்றிக் கொள்ள முயற்சித்து வருகின்றனர்.

இதற்கும் மேலாக, ரஞ்சித் மத்தும பண்டார, ஞானசார தேரர் உட்பட பலரும் இணைந்து ஒன்றிணைந்து எதிர்க்கட்சியினர் என இணைந்து கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களால் எதுவுமே செய்ய முடியாது என்பது அவர்களுக்கே தெரியும். இருந்தாலும், மக்களிடையே ஒரு சினிமா பாணியிலான நடிப்பைக் காட்டுவதற்காகவே இத்தகைய செயல்பாடுகளைச் செய்கிறார்கள்.

குறிப்பாக தங்களுடைய அரசியல் நாடகத்தை அரங்கேற்றும் தற்காக மேற்கெள்ளப்பட்ட ஈஸ்டர் குண்டு தாக்குதல் மூலமாக நூற்றுக்கணக்கான உயிர்கள் பலியாகின. அத்தோடு இதன் விசாரணையானது நீண்ட காலமாக இழுத்தடிக்கப்பட்டது. இந்த அநீதிக்கு நிச்சயமாக எங்களது அரசாங்கம் மற்றும் சட்ட ரீதியாகத் தீர்ப்பு வழங்க இருக்கின்றோம்.

அதேவேளையில், பீதியடைந்த இக்குழுவினர் குறித்த விசாரணையைக் குழப்பும் வகையில் பல்வேறுபட்ட முயற்சிகளைச் செய்து வருகின்றார்கள். நிச்சயமாக அவர்களது முயற்சிகள் பலனளிக்கப் போவதில்லை.

எதிர்க்கட்சியினருக்கு எழுப்பப்படும் கேள்விகள் நான் ஒன்றைக் கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன். நீங்கள் மக்களுக்காக அரசாங்கத்தை அமைக்க முற்படுகிறீர்களா? அல்லது உங்களைத் தாங்களே காப்பாற்றிக் கொள்வதற்காக, உங்களுடைய கூட்டாளிகளையும், கடந்த காலங்களில் மக்களுக்கு எதிராக அநீதி இழைத்தவர்களையும் காப்பாற்றுவதற்காகக் கூடுகிறீர்களா? நிச்சயமாக மக்கள் அனைத்தையும் அறிவார்கள்.

உங்களுடைய போலி நாடகங்கள் எடுபடப் போவதில்லை. விரைவாக இந்த விசாரணைக்குரிய தீர்ப்புகள் வெளிவரும் போது, வெட்டவெளிச்சமாக அனைத்துக் குற்றவாளிகளும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, அவர்களுக்குரிய தண்டனையை எங்களது அரசாங்கம் வழங்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இவர்கள் அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்காக இப்படிச் சூழ்ச்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.

வடகிழக்கில் இருக்கின்ற தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல்வாதிகள், இந்த ஈஸ்டர் குண்டு தாக்குதல் விசாரணை தொடர்பாக எதிர்க்கட்சியினர் விசாரணையைக் குழப்புகின்ற நடவடிக்கையை ஏற்படுத்துகின்ற போதும், வாய்மூடி மௌனிகளாக இருக்கின்றார்கள். நான் அவர்களிடம் கேட்க விரும்புவது.

இவர்களும் அந்தத் தாக்குதலை ஏற்றுக் கொள்கின்றார்களா? அல்லது இவர்களும் அந்தத் தாக்குதலுக்கு உடந்தையாக, ஆதரவாக இருக்கின்றார்களா? என்ற சந்தேகம் எங்களுக்கு எழுந்துள்ளது.

எத்தனையோ சிறிய சிறிய விடயங்களுக்கெல்லாம் ஆர்ப்பாட்டம் செய்கின்ற இவர்கள், பாரிய அளவில் ஒரு அநீதி நடந்திருக்கின்ற போது குறிப்பாக வட- கிழக்கு பகுதியில் கூடுதலாகக் கிறிஸ்தவ மக்கள் இருக்கின்றார்கள்.

அவர்களுடைய மனங்களில் ஆறாத வடுவாக இருப்பது இந்த ஈஸ்டர் குண்டு தாக்குதல் தான் ஏன் உங்களுடைய ஆர்ப்பாட்டங்கள் இல்லை? ஏன் இந்த அநீதிக்கு எதிராக உங்களால் குரல் கொடுக்க முடியவில்லை? வாய்மூடி மௌனிகளாக இருக்கின்றீர்கள். இதன் மூலமாக அநீதி இழைக்கப்பட்ட இந்த மக்களுக்கு நீங்கள் என்ன விடயத்தை வெளிப்படுத்துகிறீர்கள்?

நவீன் திஸாநாயக்கவின் கருத்து மற்றும் வடிவேலு பாணி நகைச்சுவை இதற்கும் மேலாக, வடிவேலு பாணியில் கூறுவதாக இருந்தால், ஸ்பெஷல் ஐட்டம் ஒன்றாக நவீன் திஸாநாயக்க ஒரு கனவு கண்டிருக்கின்றார்.

இந்த நாட்டை மீட்டெடுப்பதற்கு அல்லது இந்த நாட்டைச் சொர்க்க புரியாக மாற்றுவதற்காக, ரணில் விக்ரம சிங்கவின் மூளையும் சஜித் பிரேமதாசவின் உடலும் இணைய வேண்டும் என்று கூறியிருக்கின்றார். ஒட்டு மொத்தத்தில் இதிலிருந்து ஒன்று தெளிவாகிறது. சஜித் பிரேமதாசவுக்கு மூளை இல்லை என்ற வகையில், அவரால் தனித்துச் செயல்பட முடியாது.

அதேபோல் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆரோக்கியமான உடல் இல்லை என்ற வகையில் அதாவது அந்த வடிவேலு பாணியில் மீண்டும் சொல்வதானால் ‘பில்டிங் ஸ்ட்ராங் பேஸ்மெண்ட் வீக்’ என்ற வகையில் இருக்கின்றது. இவர்களுடைய இந்தக் கற்பனைகளும் யதார்த்தத்திற்குப் பொருத்தமில்லாத விடயங்களும் நிச்சயமாக ஒரு வேடிக்கையான வினோதமான ஒன்றாக இருக்கின்றது.

இவர்கள் எந்தத் தந்திரோபாய ரீதியில் இந்த மக்களை அணுகலாம் அல்லது மக்களை எவ்வாறு ஏமாற்றலாம் என்று நினைக்கிறார்களே தவிர, இவர்களிடம் முறையான திட்டம் இல்லை. இவர்களுக்கு யோசனைகளும் இல்லை. சிந்தனைச் சக்தியும் இல்லை. இவ்வாறான வேடிக்கையான அறிக்கைகளை விட்டுச் சமூகத்திலே மிகவும் கேலிக்குள்ளானவர்களாக இருக்கின்றார்கள்.

அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கை மற்றும் பொருளாதார நிலை எங்களைப் பொறுத்த வரையில், எங்களது அரசாங்கம் மக்களின் வரப்பிரசாதத்தைப் பெற்ற அரசாங்கம் என்ற ரீதியில், மக்கள் எங்கள் மீது பூரண நம்பிக்கை வைத்திருக்கின்றார்கள்.

இந்த நாட்டில் மக்களுக்கு எதிராக ஏற்பட்ட அநீதி, அத்துமீறல்களுக்கு நிச்சயமாகப் படிப்படியாகத் தண்டனைகள் வழங்கப்படும். ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்படுவார்கள். அவர்களுக்குரிய விசாரணைகள் படிப்படியாக இடம்பெறும்.

இப்போது சிறைச்சாலை சென்றிருப்பவர்கள். தங்களுடைய அனுபவங்களைப் பெற்றுத் தாங்களாகவே திருந்துவதற்குரிய வழிவகைகளைத் தேடிக்கொள்ள வேண்டும். நாங்கள் சலசலப்புகளுக்கெல்லாம் அஞ்சப் போவதில்லை.

‘பணங்காட்டு நரி’ என்ற பாணியில், நாங்கள் எதற்கும் அஞ்சாத வகையில் எங்களது நியாயமான அரசாங்கத்தை, மக்கள் விரும்புகின்ற அரசாங்கத்தை, நீதியான முறையில் கொண்டு செலுத்துவோம்.

இப்பிரச்சினைகளால் வேதனை அடைந்து, துன்புற்று இருக்கின்ற இந்த மக்களுக்கு ஆதரவாகவும், அவர்களை ஆசுவாசப்படுத்துகின்ற அரசாங்கமாகவும் தொடர்ச்சியாக எங்களது அரசியல் பயணத்தை மேற்கொள்வோம்.

எனவே, இவர்களது வேடிக்கை விளையாட்டுகளுக்கு இங்கே இடமில்லை. இவை அவ்வப்போது வந்து செல்லும் மழைத்தூறல் போன்றது தான். மக்கள் மத்தியில் இவை எடுபடப் போவதில்லை என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம்.

ஈஸ்டர் புனித தினத்தில் மக்களுக்கு இழைக்கப்பட்ட துரோகத்திற்குரிய தண்டனைகளை நிச்சயமாக நாங்கள் பெற்றுக் கொடுக்கத் தான் போகிறோம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

எனவே, எஞ்சியிருப்பவர்களும் தங்களைத் தாங்கள் திருத்திக் கொண்டு மக்கள் பணியைச் சரியான முறையில் செய்ய முயற்சி செய்ய வேண்டும் எனத் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் விசாரணையில் முக்கிய திருப்புமுனை..!

0

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் முக்கிய சூத்திரதாரியான சஹ்ரான் ஹாஷிமுடன் இணைந்து பல பயிற்சி முகாம்களில் தற்கொலைத் தாக்குதல்களை நடத்துவதற்கு உறுதியளித்திருந்த முக்கிய சந்தேகநபர் ஒருவர், தற்போது இந்த வழக்கில் அரசுத் தரப்பு சாட்சியாக மாறி (State Witness) நீதிமன்றத்தில் அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

200 நாட்களுக்கும் மேலாக நீடித்து வரும் இந்த வழக்கு விசாரணையின் போது, தானும் சஹ்ரானுடன் இணைந்து தற்கொலைத் தாக்குதல் நடத்த சத்தியப் பிரமாணம் செய்திருந்ததை நீதிமன்றில் ஏற்றுக் கொண்ட அவர், தாக்குதலின் பின்னணி மற்றும் வலையமைப்புகள் குறித்த பல இரகசியங்களை வெளிப்படுத்தியுள்ளார்.

​நள்ளிரவு 12 மணி வரை நீண்ட இந்த நீதிமன்ற விசாரணையின் போது, சாட்சியாளரின் உயிருக்கு இருக்கும் அச்சுறுத்தலைக் கருத்திற்கொண்டு அவரது பெயரைப் பகிரங்கப்படுத்த வேண்டாம் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதுடன், பலத்த பாதுகாப்புடன் அவர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டு ரகசியமான முறையில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

இந்தத் திடீர் வாக்குமூலமானது உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள ஏனைய நபர்களைக் கண்டறிவதில் சட்டப் பிரிவினருக்குக் கிடைத்துள்ள மிக முக்கிய திருப்புமுனையாகக் கருதப்படுகிறது.

திங்கட் கிழமைகளில் கூட்டங்களைப் புறக்கணிக்க பிரதேச செயலாளர்கள் முடிவு..!

0

நாளை (08) முதல், பொதுமக்கள் தினமாக ஒதுக்கப்பட்டுள்ள திங்கட்கிழமைகளில் நடத்தப்படும் எந்தவொரு கூட்டத்திலும் தங்களால் கலந்துகொள்ள முடியாது என இலங்கை பிரதேச செயலாளர்கள் மற்றும் உதவி பிரதேச செயலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பொதுமக்கள் தினமான திங்கட்கிழமைகளில் பல்வேறு அமைச்சகங்கள், அரச நிறுவனங்கள் மற்றும் அரசியல் தலைமைகள் மூலம் நேரடி அல்லது இணைய வழியாகக் கூட்டங்கள் நடத்தப்படுவதால்,

பிரதேச செயலகங்களின் அன்றாடப் பணிகளுக்கும் அங்கு வரும் பொதுமக்களுக்கும் ஏற்படும் அசௌகரியங்களைக் கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அரசு நிர்வாக சுற்றறிக்கை இலக்கம் 27/2023 இன் படி, பொதுமக்கள் தினமாக அறிவிக்கப்பட்டுள்ள நாளில் தங்களைச் சந்திக்க வரும் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக அதிகாரிகள் தங்களது அலுவலகங்களில் தங்கியிருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன், அந்நாளில் எந்தவொரு உத்தியோகபூர்வ கூட்டங்களையும் நடத்தக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே, இந்த அனைத்துக் காரணிகளையும் கருத்தில் கொண்டு நாளை முதல் இந்தத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்த முடிவு செய்துள்ளதாக இலங்கை பிரதேச செயலாளர்கள் மற்றும் உதவி பிரதேச செயலாளர்கள் சங்கத்தின் தலைவர் ஆர். செந்தில் தெரிவித்துள்ளார்.

தனியார் பஸ் சேவைகள் குறைக்கப்படும்; அரசுக்கு கடும் எச்சரிக்கை – கெமுனு விஜேரத்ன

0

இலங்கையில் நிலவும் தற்போதைய பொருளாதாரப் பின்னணி மற்றும் டீசல் விலை அதிகரிப்பு அபாயம் காரணமாக, தனியார் பேருந்து சேவைகளை 50% இனால் குறைக்கத் தீர்மானித்துள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

நுகேகொடையில் இன்று (07) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.

பேருந்துகளை நட்டத்துடன் தொடர்ந்து இயக்க முடியாது என்பதால், பேருந்து கால அட்டவணைகளை மாற்றி, பயண முறைகளை குறைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வருடாந்த பேருந்து கட்டண திருத்தம் தொடர்பாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவோ அல்லது பொறுப்பான அமைச்சரோ இதுவரை எந்தவொரு பதிலும் வழங்கவில்லை.

இந்த மாத இறுதியில் டீசல் விலை மீண்டும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு வருடாந்த பேருந்து கட்டண திருத்தம் மேற்கொள்ளப்பட்டால் பேருந்து கட்டணங்கள் 20% முதல் 25% வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இதனால் மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு அரசாங்கமே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் எனவும், இதனால் பொது மக்களுக்கு ஒருபோதும் எவ்வித நிவாரணமும் கிடைக்கப் போவதில்லை எனவும் கெமுனு விஜேரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.

ஓமந்தையில் பூசை செய்ய முற்பட்டவர்களை தட்டிக் கேட்ட தாய் படுகாயம்; மகன் கொலை..!

0

வவுனியா ஓமந்தை நாவற்குளத்தில் கோயில் பூசை தொடர்பான சம்பவத்தில் 32 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான சேதுபதி நிரோஜன் என்பவர் பலியாகியுள்ளதுடன், அவருடைய தாய் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் பற்றி தெரிய வருவதாவது,

வவுனியா, ஓமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குளம் பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றின் கதவை உடைத்து, ஆறு பேர் கொண்ட குழுவொன்று வலுக்கட்டாயமாக பூசை செய்வதற்கு முற்பட்டுள்ளது.

குறித்த சட்டவிரோதமான செயலை அந்த இடத்திலிருந்த கொலையுண்டவரின் தாய் தட்டிக்கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அக்குழுவினர் தாய் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இது தொடர்பாக மகன் அவர்களிடம் கேட்கச் சென்றுள்ளார். இதன் போது ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக மாறிய நிலையில் அக் குழுவினர் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரை குத்தியுள்ளனர்.

இதனால் பலத்த காயமடைந்த இளைஞனை அங்கிருந்தவர்கள் மீட்டு உடனடியாக வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற போதிலும், அவர் கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இக் கொலைச் சம்பவம் தொடர்பாக ஓமந்தைப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டதை அடுத்து, உடனடியாகச் செயற்பட்ட பொலிஸார் சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்துள்ளனர்.

சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக வவுனியா பொது வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளையும், ஏனைய சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளையும் ஓமந்தைப் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

யாழில் நீண்ட நாட்களுக்கு பின்னர் பெருந் தொகையாக சிக்கிய கஞ்சா..!

0

அச்சுவேலி காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட வளலாய் பகுதியில் இன்றைய தினம்(07) அதிகாலை வேளை 230கிலோ கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

குறித்த கஞ்சா பொதியினை வாகனத்தில் ஏற்றி வந்து ஒரு பகுதியில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் இரணுவ புலனாய்வுத் துறைக்கு கிடைத்த இரகசிய தகவலின்படி விசேட அதிரடி படையினரால் இந்தசுற்றி வளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சுற்றி வளைப்பின் போது கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட கஞ்சா பொதி அச்சுவேலி காவல் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் விசேட அதிரடிப் படையினர் வருவதாக தெரிந்து தப்பி சென்றுள்ளதாக விசேட அதிரடிப் படையினர் தெரிவித்துள்ளனர்

டித்வாவினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளின் திருத்த வேலைகளைத் துரிதப்படுத்துமாறு வலியுறுத்து..!

0

டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளின் திருத்த வேலைகளைத் துரிதப்படுத்துமாறு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளின் விபரங்கள் மத்திய அரசிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான நிதி கிடைத்தவுடன் பாடசாலைகளின் திருத்த வேலைகள் விரைவாக அரம்பிக்கப்படுமெனவும் வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் வை.ஜெயச்சந்திரன் பதிலளித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலேயே இவ் விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதன் போது நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

புயலினால் முல்லைத்தீவு கல்வி வலயத்தில் 32பாடசாலைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தரவுகளிலிருந்து அறியக்கூடியதாகவுள்ளது.

அதில் 09 பாடசாலைகளின் திருத்த வேலைகள் 2025இல் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அத்தோடு இந்த ஆண்டில் 15பாடசாலைகள் திருத்த வேலைகளுக்காக உள்ளீர்க்கப்பட்டிருந்தன. அதாவது சிறு திருத்த வேலைகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில்தான் அந்த 15பாடசாலைகளிலும் திருத்த வேலைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. அந்த திருத்த வேலைகளுக்கு மேலதிக நிதிகளும் வழங்கப்படவில்லை.

அதேவேளை முல்லைக் கல்வி வலயத்தில் தித்வா புயலினால் பாதிக்கப்பட்ட 08பாடசாலைகளுக்கான திருத்தவேலைகளுக்கு இதுவரை நிதி ஒதுக்கீடுகள் செய்யப்படவில்லை.

குறிப்பாக முறிப்பு தமிழ் வித்தியாலயம், மந்துவில் அரசரட்ணம் வித்தியாலயம், கொகிளாய் அ.த.க பாடசாலை, முள்ளிவாய்க்கால் கிழக்கு அ.த.க பாடசாலை, புதுக்குடியிருப்பு றோமன் கத்தோலிக்க வித்தியாலயம், இரணைப்பாலை றோமன் கத்தோலிக்க வித்தியாலயம், சுதந்திரபுரம் தமிழ் வித்தியாலயம், கோம்பாவில் விக்கினேஸ்வரா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளுக்கே இதுவரை திருத்த வேலைகளுக்காக நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்படவில்லை.

எனவே டித்வா புயலால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளுக்கான திருத்த வேலைகளுக்கு எப்போது நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்படுமென அறிய விரும்புகின்றேன். எனவே உரிய தரப்பினர் இதற்குரிய பதிலை வழங்க வேண்டும் – என்றார்.

இந்நிலையில் டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளின் விபரங்களை, தாம் மத்திய அரசிற்கு அனுப்பி வைத்துள்ளதாகத் தெரிவித்த வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் வை.ஜெயச்சந்திரன் அதற்கான நிதி கிடைத்தவுடன் பாடசாலைகளின் திருத்த வேலைகள் ஆரம்பிக்கப்படுமெனவும் தெரிவித்தார்.

error: Content is protected !!