Saturday, August 2, 2025
Huis Blog

வவுனியாவில் பொலிஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்ட பிரதேச சபை உறுப்பினர்..!

0

பொலிஸ் பாதுகாப்புடன் சிறைச்சாலை வாகனத்தில் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை அமர்வுக்கு உறுப்பினர் ஒருவர் அழைத்து செல்லப்பட்ட சம்பவம் ஒன்று வவுனியாவில் இடம்பெற்றுள்ளது.

தமிழ் மக்கள் கூட்டணியின் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினர் ஒருவரே இவ்வாறு அழைத்து வரப்பட்டிருந்தார்.

கடந்த 11ஆம் திகதி வவுனியா, கூமாங்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்து ஒன்றினைத் தொடர்ந்து ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக சில பொலிஸாார் காயமடைந்தனர்.

பொலிஸாரின் இரு மோட்டர் சைக்கிள்கள், கப் ரக வாகனம் ஒன்றும் சேதமானது. இந்தச் சம்பவம் தொடர்பில் 7 பேர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவத்தின் போது, அந்தப் பகுதியில் மக்களுடன் நின்ற தமிழ் மக்கள் கூட்டணியின் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினரும் கூமாங்குளம் கிராம அபிவிருத்திச் சங்க நிர்வாக உறுப்பினருமான விக்டர்ராஜ் வாக்கு மூலம் பெறுவற்காக வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்ட நிலையில், கடந்த 14ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார்.

அவரை எதிர்வரும் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அவர் வவுனியா சிறைச் சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் சபை அமர்வுக்காக நீதிமன்ற அனுமதி பெற்று பொலிஸார் மற்றும் சிறைக் காவலர்களின் பாதுகாப்புடன் சிறைச்சாலை வாகனத்தில் அமர்வுக்காக அழைத்து வரப்பட்டு அமர்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டார்.

அமர்வு முடிந்ததும் மீண்டும் அதே வாகனத்தில் அழைத்து சென்று சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

ஒரு பொது விடயம் தொடர்பில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள அவரின் விடுதலைக்காக அனைவரும் குரல் கொடுக்க முன்வர வேண்டும்.

இலங்கை மீதான தீர்வை வரியை மேலும் குறைத்தது அமெரிக்கா..!

0

இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தீர்வை வரி 20 வீதமாக குறைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

புதிய வரி வீதங்கள் தொடர்பான நிறைவேற்று உத்தரவில் ஜனாதிபதி ட்ரம்ப் கைச்சாத்திட்டுள்ளதாக வௌ்ளை மாளிகை தெரிவித்தது.

அமெரிக்க ஜனாதிபதி கைச்சாத்திட்டுள்ள நிறைவேற்று உத்தரவில் பல்வேறு நாடுகளுக்கான வரிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த உத்தரவு ஜனாதிபதி கைச்சாத்திட்ட தினத்திலிருந்து 7 நாட்களின் பின்னர் அமுல்படுத்தப்படும் என வௌ்ளை மாளிகை கூறியுள்ளது.

ஏற்கனவே இலங்கை மீது கடந்த ஏப்ரல் 02 ஆம் திகதி 44 வீத தீர்வை வரி அறிவிக்கப்பட்டது.

குறித்த வரியைத் தளர்த்துவது தொடர்பாக அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகள் அலுவலகத்துடன் அரசாங்கத்ம் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைகளை நடத்திவந்ததுடன் அந்த வரி 30 வீதமாக குறைக்கப்பட்டது.

இந்நிலையில் இலங்கைக்கான தீர்வை வரியை 20 வீதமாக குறைப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளதுடன் இந்தத் தகவல் இன்று அதிகாலை இலங்கைக்கு கிடைத்தது.

இதற்காக இலங்கை பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை கடந்த சில நாட்களாக அமெரிக்காவுடன் நடத்தி வந்ததுடன் இது அதன் பலனாக கிடைத்த வெற்றி என இன்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் அரசாங்கம் மகிழ்ச்சி வெளியிட்டது.

குறைவான புள்ளி எடுத்த மாணவி – கண்டித்த ஆசிரியர்; மாணவி தற்கொலை..!

0

பிரபலமான பாடசாலையை சேர்ந்த 15 வயது மாணவி ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தவணை பரீட்சையில் குறைந்த புள்ளிகளைப் பெறுவதால் தனது வகுப்பு ஆசிரியர் தொடர்ந்து அளித்த அழுத்தத்தை தாங்க முடியாமல் குறித்த மாணவி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

4 பேர் கொண்ட குடும்பத்தில் அவர் இளையவர் எனவும் மாணவியின் தந்தை அதே பகுதியில் உள்ள மற்றொரு பாடசாலையின் அதிபர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

உயிரிழந்த மாணவி ஹோமாகம பகுதியை சேர்ந்த 15 வயதாய மாணவி என பொலிஸார் தெரிவித்தள்ளனர். சிறுமி பாடசாலையில் நடைபெறும் தவணை பரீட்சைக்கு முகம் கொடுத்துள்ளார்.

குறைந்த புள்ளிகளைப் பெற்றதால், வகுப்பு ஆசிரியர் தொடர்ந்து மாணவிக்கு ஆலோசனை வழங்கி வந்துள்ளார். மற்ற மாணவர்கள் முன்னிலையில் தொடர்ந்து திட்டியதால் மன அழுத்தத்தில் இருந்த மாணவிக்கு சமீபத்தில் தலைவலி ஏற்பட்டுள்ளது.

பின்னர், மருத்துவ சிகிச்சை காரணமாக பாடசாலை செல்ல முடியாததால், மருத்துவ பரிந்துரையை கொண்டு வருமாறு பாடசாலை அறிவுறுத்தியது.

எனினும் பரிந்துரையுடன் கூடிய மருத்துவ அறிக்கையை அவரால் கொண்டு வர முடியாததால், அன்றைய தினம் வகுப்பு ஆசிரியர் மாணவியை பாடசாலையின் ஒழுக்காற்று அதிகாரியிடம் ஒப்படைத்து, மாணவிக்கு சில தண்டனைகள் விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் வருத்தமடைந்த மாணவி வீட்டிற்குச் சென்று உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் அவர் உயிரிழந்து விட்டார். இந்த நிலையில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதேவேளை நாட்டில் பரீட்சை மையக் கல்வியே காணப்படுவதால் பிரச்சினைகளை எதிர் கொள்ளத் தெரியாத புத்தகப் பூச்சிகளாக மாணவர்கள் மாறி வருகின்றனர்.

இந்த நிலையில் மாணவர்களைப் பேசுவதையோ, அடிப்பதையோ, ஆலோசனை வழங்குவதையோ அதிபர், ஆசிரியர்கள் தவி்த்து தமது கற்பித்தல் செயலில் மட்டும் ஈடுபடுவதே தற்போது நடைமுறையில் உள்ள சட்டத்தின் படி அதிபர், ஆசிரியர்களுக்கு ஆரோக்கியமானது.

அர்ச்சுனாவின் எம்.பி. பதவி; மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு..!

0

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் உறுப்புரிமையை இரத்து செய்யுமாறு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியுள்ளது.

இந்த மனு, 01.08.2025 அன்று மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான மாயாதுன்ன கொரயா மற்றும் மஹேன் கொபல்லவ ஆகியோர் அடங்கிய ஆயம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

பிரதிவாதியான இராமநாதன் அர்ச்சுனா சார்பில் முன்னிலையான சட்டத்தரணி செனானி தயாரத்ன, இந்த மனு மீதான ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்யக் கால அவகாசம் வழங்குமாறு கோரிக்கை விடுத்தார்.

அதன்படி, நான்கு வாரங்களுக்குள் ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்ய நீதியரசர்கள் அமர்வு கால அவகாசம் வழங்கியதுடன், அதில் ஏதேனும் ஆட்சேபனைகள் இருந்தால் இரண்டு வாரங்களுக்குள் தாக்கல் செய்யுமாறு மனுதாரருக்கு அறிவித்தது.

இதேவேளை இந்த வழக்கு விசாரணை எதிர்வரும் செப்டம்பர் 26 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

அத்துடன் தற்போதய கால கட்டத்தில் ஊழல் மோசடிகளுக்கு எதிராக அர்ச்சுனா போன்றவர்களின் பிரதிநிதித்துவம் பாராளுமன்றத்தில் அவசியமாகக் காணப்படுகின்றது.

மட்டக்களப்பில் மீட்கப்பட்ட ரி56 ரக துப்பாக்கி; உடன் செயற்பட்ட அதிரடிப் படை..!

0

மட்டக்களப்பு நகர் பிரதேசத்தில் நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் ரி56 ரக துப்பாக்கி ஒன்று மற்றும் ரவைகள், மகசீன் என்பவற்றை விசேட அதிரடிப்படையினர் மீட்டுள்னர்.

மீட்கப்பட்ட ஆயுதங்களானது, நேற்று(01) இரவு மட்டக்களப்பு தலைமையகத்தில் ஒப்படைக்கப்பட்டதாக பொறுப்பதிகாரி பிரியந்த பண்டார தெரிவித்துள்ளார்.

லயன்ஸ் கிளப் வீதியில் உள்ள காணி ஒன்றில் புதிதாக வீடு கட்டுமானப்பணி இடம்பெற்று வருகின்ற நிலையில் சம்பவ தினமான நேற்று இரவு 10.00 மணியளவில் அங்கு மலசல கூடத்திற்கு குளி அமைப்பதற்கான நிலத்தை தோண்டும் போது புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பொலித்தீன் பையில் சுற்றப்பட்ட நிலையில் துப்பாக்கி இருப்பதை கண்டு விசேட அதிரடிப்படையினருக்கு அறிவித்துள்ளனர்.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற விசேட அதிரடிப்படையினர் ரி56 ரக துப்பாக்கி ஒன்றும் 50 துப்பாக்கி ரவைகள், 2 மகசீன்களை மீட்டனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவின் உண்மை நிலையை அறிய களப் பயணத்தில் இறங்கிய வடக்கு ஆளுநர்..!

0

வவுனியா வடக்கு பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட எல்லைக் கிராமங்களில் மீளக்குடியமர்த்தப்பட்ட மக்கள் அங்கிருந்து இடம்பெயர்ந்து செல்லுகின்ற நிலையில் அவர்களை நிரந்தரமாக அங்கு குடியமர்த்துவதற்கான சாத்தியப்பாடுகள் தொடர்பில் ஆராயும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களால் ஒழுங்குபடுத்தப்பட்ட களப்பயணம் இன்று வெள்ளிக்கிழமை (01.08.2025) இடம்பெற்றது.

முதலில் காஞ்சிரமோட்டைக்குச் சென்ற ஆளுநர் தலைமையிலான குழுவினர் அங்கு தற்போது வசிக்கும் 23 குடும்பங்களையும் சந்தித்தனர். அந்தப் பகுதி மக்கள், யானை வேலி அமைத்துத்தருமாறு, கிணறுகளை புனரமைத்துத்தருமாறும் கோரினர். கடந்த காலங்களில் வழங்கப்பட்ட வீட்டுத்திட்டங்கள் ஊடாக அமைக்கப்பட்ட வீடுகள் அரை குறையாக உள்ளமையால் அவற்றை முழுமைப்படுத்தி தருமாறும் கேட்டுக் கொண்டனர்.

அத்துடன் தமக்கான காணி ஆவணங்கள் இல்லை எனவும் தெரிவித்தனர். அந்தப் பகுதியைச் சேர்ந்த மாணவர்களுக்கான போக்குவரத்து வசதி சீரில்லை என்பதையும் தெரியப்படுத்தினர். தாம் மீளக்குடியமர்ந்த பின்னர் வனவளத் திணைக்களத்தால் குடிமனைக்கு அண்மையாக எல்லைக்கல்லுகள் நடுகை செய்யப்பட்டுள்ளன எனவும் குற்றம் சுமத்தினர்.

மருதோடை – காட்டுப்பூவரசன்குளம் வீதியிலிருந்து நாவலர் பண்ணை வரையிலான 5.5 கிலோ மீற்றர் நீளமான வீதியை துரிதமாகப் புனரமைப்பதற்கும், அதன் ஊடாக போக்குவரத்துச் சேவையை சீராக்குவதற்கும் ஆளுநர் அறிவுறுத்தினார். மேலும், அந்தப் பகுதியிலுள்ள முன்பள்ளிக்கு ஆசிரியரை அடையாளம் கண்டு விரைவில் நியமிக்கவும், அந்தப் பகுதி மக்களுக்கான மேட்டுக்காணியை விரைந்து வழங்கவும் ஆளுநர் பணிப்புரை விடுத்தார்.

அதனைத் தொடர்ந்து வெடிவைத்தகல்லு கிராம மக்களை ஆளுநர் சந்தித்தார். யானைவேலி அமைக்கப்படாமல் தம்மால் மீளக்குடியமர முடியாது என மக்கள் இதன்போது தெரிவித்தனர். உயிரிழப்புக்களைக் கூட யானைகளால் தாம் சந்தித்துள்ளதாகவும், பயிரழிவு கூட ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டனர். மாடுகள் உள்பட தமது பொருட்களும் களவாடப்படுவதாகவும் மக்கள் தெரிவித்தனர்.

அத்துடன் வனவளத் திணைக்களம் பாரபட்சமாக நடந்து கொள்வதாகவும் தமது காணிகள் வனவளத் திணைக்களத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டனர்.

மிக அடர்ந்த காடுகள் ஏக்கர் கணக்கில் அருகிலுள்ள பிரதேசங்களில் பெரும்பான்மையின மக்களால் அழிக்கப்பட்டுள்ள போதும் அது தொடர்பில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காத வனவளத் திணைக்கள அதிகாரிகள், தாம் சிறிய விறகுத் தடியை வெட்டினால் கூட வழக்குத் தொடுப்பதாகவும் ஆளுநரிடம் முறையிட்டனர். வனவளத் திணைக்களத்தினரால் தற்போதும் இனப்பாகுபாடு காட்டப்படுவதாக குற்றம்சுமத்தினர்.

மேலும், திரிவைத்தகுளத்தில், 1983ஆம் ஆண்டு வழங்கப்பட்ட காணிகளில் விவசாயம் மேற்கொண்ட நிலையில் இடம்பெயர்ந்து சென்று மீள்குடியமர்ந்த பின்னர், 2019ஆம் ஆண்டு காணிகளைத் துப்புரவு செய்தபோது வனவளத் திணைக்களத்தால் தடுக்கப்பட்டதாகவும், தற்போது காணிகள் வனவளத் திணைக்களத்திடமிருந்து மகாவலி அபிவிருத்தி அதிகார சபைக்கு கையளிக்கப் பட்டுள்ளதாகவும் மக்கள் தெரிவித்தனர். தமக்கு காணி வழங்கப்பட வேண்டும் எனக் கோரினர்.

மக்களின் கோரிக்கைக்குரிய நடவடிக்கைகளை எடுக்கலாம் எனத் தெரிவித்த ஆளுநர், நீங்களும் மீள்குடியமர்வுக்கான முயற்சிகளை முன்னெடுக்கவேண்டும் எனவும் குறிப்பிட்டார். உங்களின் மீள்குடியமர்வு முயற்சியில்தான் நாமும் உற்சாகமாக உங்களுக்கான உதவிகளைச் செய்ய முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதன் பின்னர் மருதோடைப்பகுதியைப் பார்வையிட்ட ஆளுநர், கடந்த கொரோனாப் பெருந்தொற்றுக் காலத்துடன் மூடப்பட்ட ஊஞ்சல்கட்டி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையையும் பார்வையிட்டார்.

அதனைத் தொடர்ந்து பெரிய கோரமோட்டைக் குளத்தையும் பார்வையிட்டார். குளத்தின் கீழான பயிர்ச்செய்கை கைவிடப் பட்டுள்ளமையையும் ஆளுநர் அவதானித்தார். இது தொடர்பில் கமநலசேவைத் திணைக்களத்தினருக்கு, குளத்தை புனரமைப்பதற்கான அறிவுறுத்தலையும் வழங்கினார்.

நெடுங்கேணி மருதோடை அ.த.க. பாடசாலைக்கு மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடையில் நிதி வழங்கப்பட்டு அங்கு கட்டடம் அமைக்கப்படவுள்ள நிலையில், பாடசாலையையும் ஆளுநர் சென்று பார்வையிட்டார்.

வவுனியா வடக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் மக்களையும் ஆளுநர் சந்தித்தார். இதன் போது, கோவில் புளியங்குளம் மக்களால், யானைவேலி அமைத்தல், வெடிவைத்த கல்லு வரையிலான வீதிப் புனரமைப்பு, வீதி விளக்குகள் பொருத்துதல், மருதங்குளம் புனரமைப்பு ஆகிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. மேலும், மாமடுக் குளம் புனரமைப்புச் செய்யப்பட வேண்டும் என்ற வேண்டுகோளும் முன்வைக்கப்பட்டது.

அத்துடன், சம்பளம்குளத்திலிருந்து பனைநின்றான் செல்லும் வீதியை புனரமைத்து தரவேண்டும் எனவும் மக்கள் கேட்டுக் கொண்டனர்.

வனவளத் திணைக்களத்தினர் பாரபட்சமாக நடந்துகொள்வது தொடர்பாக மக்களின் முறைப்பாடுகள் தொடர்பில் வனவளத் திணைக்கள பிரதிநிதிகளிடம் ஆளுநர் தெரியப்படுத்தினார். அவ்வாறு செயற்படுவது தவறு எனவும் சுட்டிக் காட்டினார்.

மேலும், வனவளத் திணைக்களத்தால் எல்லையிடப்பட்ட காணிகள் விடுவிக்கப் படுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில் காணிகளை அடையாளம் காண்பதற்கு பிரதேச செயலரையும் உள்ளடக்கிய குழுவை நியமித்து செயற்படுமாறு ஆளுநர் ஆலோசனை வழங்கினார்.

கால்நடை வைத்தியர்கள் தொடர்பாக மக்கள் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக, வைத்தியருக்குரிய வாகன வசதியை ஏற்படுத்திக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் ஆளுநர் பதிலளித்தார். அதேபோல காணிக் கச்சேரிகள் விரைவில் நடத்தப்பட்டு காணி ஆவணங்கள் வழங்குவதற்கான நடவடிக்கையும் எடுக்கப்படும் என ஆளுநர் குறிப்பிட்டார்.

ஆளுநரின் இந்தப் பயணத்தின் போது, கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர்களான ம.ஜெகதீஸ்வரன், செ.திலகநாதன், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், விவசாய அமைச்சின் செயலாளர், வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர், வவுனியா மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர், வவுனியா வடக்கு பிரதேச சபை உறுப்பினர் அகிலன் ஆகியோரும் இணைந்திருந்தனர்.

எரிபொருள் விலையில் திருத்தமில்லை – பெற்றோலிய கூட்டுத்தாபனம்

0

இந்த மாதம் எரிபொருள் விலையில் திருத்தம் இல்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 305 ரூபாவாகும்.

ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 341 ரூபாவாகும்.

சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 325 ரூபாவாகும்.

ஒட்டோ டீசல் ஒரு லீற்றர் 289 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும்.

அதேபோல் ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் 185 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

மாரீசன் திரைப்படம் – திரை விமர்சனம்

0

தயாரிப்பு : சூப்பர் குட் பிலிம்ஸ்
இயக்கம் : சுதீஷ் சங்கர்
நடிப்பு : வடிவேலு, பஹத் பாசில், விவேக்பிரசன்னா, சித்தாரா, கோவை சரளா
இசை : யுவன்சங்கர்ராஜா
ஒளிப்பதிவு : கலைச்செல்வன் சிவாஜி
வெளியான தேதி : ஜூலை 25.20.25
நேரம் : 2 மணிநேரம் 34 நிமிடம்
ரேட்டிங் : 3 / 5

அல்சைமர் என்ற ஞாபக மறதிநோயால் அவதிப்படும் வடிவேலுவின் வங்கி கணக்கில் ரூ 25 லட்சம் இருப்பதை அறிந்த திருடனான பஹத் பாசில், அதனை அபகரிக்க அவர் பின்னாலேயே சுற்றுகிறார். வடிவேலு வைத்திருக்கும் ஏ.எடி.எம் இலக்கத்தை பஹத் பாசில் தெரிந்து கொண்டாரா? பணத்தை வடிவேலு இழந்தாரா என ஆரம்பிக்கிறது கதை. ஆனால், இடைவேளைக்குபின் வடிவேலு கதாபாதிரத்தில் அதிரடி மாற்றங்கள். சில ‘சம்பவங்களை’ செய்கிறார். உண்மையில் வடிவேலு யார்? வடிவேலு, பஹத் பாசில் உறவு எப்படி முடிகிறது என்பது மாரீசன் கதை.

இத்திரைப்படத்தை சுதீஷ் சங்கர் இயக்கி இருக்கிறார். கிருஷ்ண மூர்த்தி இத் திரைப்படத்திற்கு கதை, திரைக்கதை வசனம் எழுதியிருக்கிறார்.

பாளையங்கோட்டை ஜெயிலில் இருந்து விடுதலையாகும் திருடனான பஹத் பாசில், நாகர்கோவிலில் ஒரு வீட்டில் திருட நினைக்கிறார். அங்கே இருக்கும் ஞாபக மறதிக்காரரான வடிவேலு வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை அபகரிக்க நினைக்கிறார். அதற்கு அவரின் ஏடிஎம் அட்டையின் இரகசிய இலக்கம் தேவைப்படுகிறது. அதை தெரிய வடிவேலு சொல்படி திருவண்ணாமலை, கோவை என அவருடன் மோட்டார் சைக்கிளில் சுற்றுகிறார். இப்படி பயணத்திலேயே முதற்பாதி முடிந்துவிடுகிறது.

அடுத்த பாதி கதை வேறு மாதிரி நகர்கிறது. வடிவேலுவின் உண்மையான குணம், அவர் நோக்கம் வெளிப்படுகிறது. பின்னர் திரைப்படத்தின் இறுதியில் இன்னொரு டிவிஸ்ட் என ரசிகர்களை ஈர்க்க வைத்துள்ளது மாரிசன்.

சற்றே வயதான வேடத்தில், தனக்கே உரிய, வழக்கமான உடல் பாவனை, டயலாக் டெலிவரி, நகைச்சுவை என எதையும் வெளிப்படுத்தாமல் கதைக்கு தக்கபடி நடித்து இருக்கிறார் வடிவேலு. கலகலவென, காமெடி செய்யும் வடிவேலுவை இப்படி பார்ப்பது முதலில் வித்தியாசமாக இருக்கிறது.

ஒரு கட்டத்தில் அவரின் கதாபாத்திரத்துடன் ஒன்றி விட, நாமும் அவரை பக்கத்து வீட்டுக்காரர் மாதிரி பார்க்க ஆரம்பித்துவிடுவோம். குறிப்பாக, வடிவேலு ஞாபகமறதியால் அவர் தவிக்கும் காட்சிகள் , இடைவேளைக்குபின் வேறு மாதிரி மாறும் காட்சிகள் சிறப்பாக அமைந்திருக்கும்.

வடிவேலுவுக்கும், அவர் மனைவியாக வரும் சித்தாராவுக்குமான பாசப்பிணைப்பு அருமையாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. கடைசியில் பெண் குழந்தைகள் மீதான பாசம், பரிதவிப்பில் அவர் பேசும் வசனங்களும், செயல்களும் இயக்குனரின் சமூக அக்கறையை காண்பிக்கின்றன. மனைவிக்காக வடிவேலு எடுக்கும் முயற்சிகள் உணர்ச்சி பூர்வமானவை, கொஞ்சம் கோபமானவை.

திருடனாக வரும் பஹத் பாசில் நடிப்பு தான் படத்தின் பெரிய தூண் எனக் கூறலாம். முதற்பாதி முழுக்க அவர் கலகலப்பாக படத்தை நகர்த்தி இருக்கிறார். அவ்வளவு உற்சாகமாக இருக்கிறார் பஹத். என்ன, இன்னுமும் அவர் பேச்சில் அதிக மலையாள வாடை. சில வார்த்தைகள் புரிய கஷ்டமாக இருக்கிறது. வடிவேலுவை ஏமாற்ற அவர் நடிப்பதும், ஒரு கட்டத்தில் அவர் யார் என்பதை உணர்ந்து தவிப்பதும் சிறப்பாக காட்சியமைக்கப்பட்டுள்ளன.

வடிவேலு மனைவியாக சில காட்சிகளில் மாத்திரம் வந்தாலும் ‛புது வசந்தம்’ சித்தாரா மனதில் நிற்கிறார். இவர்களை தவிர, பஹத் அம்மாவாக வரும் ரேணுகா, பொலிஸ் அதிகாரியாக வரும் கோவை சரளாவுக்கு அந்த கதாபாத்திரம் அவ்வளவு பொருத்தமாக அமையவில்லை. நடிப்பில் அவ்வளவு செயற்கைதனம். வடிவேலு நண்பராக வரும் லிவிஸ்டனும் நடித்து கொட்டுகிறார். சின்ன கதாபாத்திரமாக அறிமுகம் ஆகி, இறுதியில் மிரட்டியிருக்கிறார் விவேக் பிரசன்னா. யுவன் சங்கர் ராஜா பின்னணி இசை கொண்டாடும் அளவுக்கு இல்லை.

படத்தின் நீளத்தை கொஞ்சம் குறைத்து இருக்கலாம். வில்லனாக காட்டப்படும் சிலரின் பின்னணி குறித்து விரிவான காட்சிகள் இல்லை. சில வசனங்களின் மூலம் அவர்கள் பிளாஷ்பேக்கை சொல்கிறார்கள், ஒருவகையில் அது குடும்பத்தினருடன் பார்க்க வைக்ககூடிய வகையில் தான் அமைந்துள்ளது.

முதற்பாதி நகைச்சுவை, பிற்பாதி திருப்பங்கள், திரில்லர் என வேறு திசைக்கு நகர்கிறது. பொலிஸ் விசாரணையில் பல லாஜிக் சொதப்பல்கள். படத்தின் தலைப்புக்கும், கதைக்குமான தொடர்பு பலருக்கு பிடிபடவில்லை.

ஞாபக மறதி விஷயத்தில் வரும் டுவிஸ்ட், வடிவேலுவின் கிளைமாக்ஸ் செயல்பாடுகள், சித்தாரா போர்ஷன் ஆகியவை டச்சிங் என்றாலும், அந்த பயணம் இழுத்துக்கொண்டே போவதை எடிட் செய்து இருக்கலாம். பல கசாட்சிகளில் பஹத் பாசில், வடிவேலு போட்டி போட்டு நடித்து இருக்கிறார்கள்.

நகைச்சுவை திரைப்படத்தை எதிர்பார்த்துச் சென்றால் ஏமாற்றமாக இருக்கும், கதையை நம்பி வந்தால் ஏமாற்றம் கிடைக்காது. ஒட்டு மொத்தத்தில் அழுத்தமான மலையாள படம் பார்த்த மாதிரி இருக்கிறது, வடிவேலு சிறந்த குணசித்திர நடிகராக மாறியிருக்கிறார்.

வடிவேலுவை வைத்து பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு தீர்வு வேண்டும் என்ற விழிப்புணர்வு கதையை எடுத்து இருக்கிறார் இயக்குனர். உங்க வீட்டில் பெண் குழந்தைகள் பேசுவதை கவனிங்க. அவங்க சோகமாக இருந்தால், மனம் விட்டு பேசுங்க என்ற கருத்து இன்றைக்கு தேவையான ஒன்று. பாதிக்கப்பட்ட பெண் குழந்தைகள், அந்த குடும்பத்தினர் வலியை, வடிவேலு மாதிரியான நடிகரை வைத்து சீரியசாக கதை சொல்லியிருப்பதும் இயக்குனர் தைரியத்தை, ஸ்கிரிப்ட் மீதான நம்பிக்கையையும் காண்பிக்கிறது.

வவுனியா மாநகர சபையின் ஆதனங்களை உடன் கையகப்படுத்துங்கள் – முதல்வர்

0

வவுனியாவில் மாநகர சபைக்கு சொந்தமான ஆதனங்கள் சிலவற்றை சில அமைப்புக்களும் குழுக்கள் மற்றும் தனியார்களின் ஆளுகைக்கு உட்பட்டுள்ளமையால் அவ்வாறான இடங்களை உடனடியாக மாநகர சபைக்கு கையகப்படுத்தி அதன் உரிமத்துவத்தை பேணுமாறு வவுனியா மாநகர சபை முதல்வர் சு. காண்டீபன் தெரிவித்தார்.

இன்றைய தினம் சபை அமர்வின் போது தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் லக்சனா நாகராஜன் வைரவ புளியங்குளத்தில் அமைந்துள்ள சிறுவர் பூங்கா மற்றும் குருமன்காடு பகுதியில் உள்ள கலைமகள் சனசமூக நிலையம் என்பன உட்பட ஒரு சில இடங்கள் சில அமைப்புகளாலும் குழுக்களாலும் கையகப்படுத்தி செயற்படுத்தப்பட்டு வருவதன் காரணமாக மாநகர சபைக்கான வருமான இழப்பு ஏற்படுவதாக தெரிவித்திருந்தார்.

இதனை மாநகர சபை கொண்டு வந்து அதன் வருமானம் மற்றும் செயற்பாட்டை மாநகர சபையே மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கையையும் முன் வைத்திருந்தார். இதனை ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் அப்துல் லரிப்பும் ஆமோதித்து கருத்து தெரிவித்தார்.

இதன் பிரகாரம் உடனடியாக குறித்த இரண்டு இடங்களுடன் மேலும் மாநகர சபைக்கு உட்பட்ட ஆதனங்களின் பெயரில் மாற்றத்தை உட்படுத்தி அது மாநகர சபையின் பெயரில் அனைத்து ஆவணங்களையும் மாற்றம் செய்து மாநகர சபைக்கு கீழ் கொண்டு வருமாறு முதல்வர் தெரிவித்தார்.

எனினும் இது தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் தற்போதைய மாநகரசபை உறுப்பினரும் கலைமகள் சனசமுக நிலையத்தின் பொருளாளராக கடந்த 29 ஆம் தேதி வரை செயல்பட்டு வந்த வி. விஜயகுமார் குறித்த கலைமகள் சன சமூக நிலையம் அமைந்துள்ள பகுதியானது கடந்த 60 ஆண்டு காலமாக குறித்த சன சமூக நிலையத்தினால் பாதுகாக்கப்பட்டு வருவதாகவும் அங்குள்ள கட்டிடங்கள் மக்களினால் அமைக்கப்பட்டதாகவும் அதனை பராமரிப்பதற்காக நிதி தேவைப்படுவதன் காரணமாகவே அதனை நிகழ்வுகளுக்கு வாடகைக்கு விடப்படுவதாகவும் தெரிவித்தார்.

எனினும் மாநகர முதல்வர் வாடகைக்கு பெறுபவர்கள் மாநகர சபைக்கும் நிதி செலுத்தி மீண்டும் சன சமூக நிலையத்துக்கும் நிதி செலுத்த வேண்டிய தேவை ஏற்படுவதன் காரணமாக அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட முடியாது எனவும் அது முற்றும் முழுதாக மாநகர சபையினுடைய ஆதனமாக காணப்படுவதனால் அங்கு எவ்வாறான கட்டிடங்கள் இருந்தாலும் அது மாநகர சபைக்கு உரியது எனவும் தெரிவித்து அதனை உடனடியாக மாநகர சபைக்குள் கொண்டுவந்து அங்குள்ள மின்சாரப் பட்டியல் மற்றும் நீர் விநியோகப்பட்டியலிலும் மாநகரசபையின் பெயர் மாற்றம் செய்யுமாறு தெரிவித்தார்.

மர்மத்தை தொடும் செம்மணி புதைகுழி; எலும்புக் கூடுகள் 118ஆக உயர்வு..!

0

செம்மணி புதைகுழியில் இன்று புதிதாக மூன்று மண்டையோட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் மொத்தமாக இதுவரை 118 மண்டையோட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டிப்பதாக சட்டத்தரணி நிரஞ்சன் தெரிவித்துள்ளார்

செம்மணி சிந்துப்பாத்தி இந்து மயானத்தில் இடம்பெறும் இரண்டாவது கட்ட அகழ்வுப் பணியின் 26வது நாளான இன்று மேலும் 3 புதிய மனித எலும்பு தொகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி தெரிவித்துள்ளார்

இதனுடன் தற்போது வரை அடையாளம் காணப்பட்ட எலும்பு தொகுதிகளின் எண்ணிக்கை 118 ஆக அதிகரித்துள்ளது.

மொத்தமாக இதுவரை 118 மண்டையோட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றன அத்தோடு மூன்று மண்டையோட்டுத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டு நீதிமன்றத்தின் கட்டுக் காவலுக்குள் வழங்கபட்டுள்ளன.

இந்நிலையில் இதுவரை 105 மண்டையோட்டுத் தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டு பாதுகாப்பாக சட்ட வைத்தியரிடம் கையளிக்கப்பட்டுள்ளது

தொடர்ந்து 27ம் நாள் அகழ்வுப்பணி நாளை நடைபெறவிருக்கின்றது என அவர் மேலும் தெரிவித்தார்

error: Content is protected !!