Saturday, July 5, 2025
Huis Blog Bladsy 3

இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறினால் கைதுகள் தொடரும்..!

0

இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரக்குக்குள் அத்துமீறினால் கைதுகள் தொடரும் – அமைச்சர் சந்திரசேகர் எச்சரிக்கை
இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரக்குக்குள் அத்துமீறினால் கைதுகள் தொடரும். படகுகள் பறிமுதல் செய்யப்படும். இந்த விடயத்தில் விட்டுக்கொடுப்புக்கு இடமில்லை என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார் கடற்றொழில்,நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

‘இந்திய மீனவர்களின் அத்துமீறலானது எமது மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கே பாதகமாக அமைந்துள்ளது. இது தொடர்பில் இந்திய தரப்புக்கும் தெரிவித்திருந்தோம். கடந்த மூன்று மாதங்களாக இந்திய மீனவர்களின் பிரச்சினை இருக்கவில்லை. தற்போது மீண்டும் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைய ஆரம்பித்துள்ளனர். அவர்களை நாம் கைது செய்தோம்.

இந்திய மீனவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் மயிலிட்டி துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளன. அவை அரசுடமையாக்கப்பட்டுள்ளன.

தமிழக மீனவர்கள் எமது கடற்பரப்புக்குள் அத்துமீறுவதை நிறுத்த வேண்டும். அவ்வாறு இல்லையேல் கைதுகள் தொடரும். படகுகள் பறிமுதல் செய்யப்படும். உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

மீனவர் பிரச்சினை தொடர்பில் இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கையிலும் இறங்கியுள்ளோம். கடற்படைக்கு கூடுதல் வளங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன்மூலம் இந்திய மீனவர்களின் அத்துமீறல் தடுத்து நிறுத்தப்படும். இலங்கை கடற்படையினர் மிகவும் கட்டுக்கோப்பாகவே நடந்துவருகின்றனர்.

இந்திய மீனவர்களின் ரோலர் படகுகளால்தான் இலங்கை கடல்வளம் நாசமாக்கப்பட்டுள்ளது. இந்நிலைமை தொடர்ந்தால் இலங்கை கடற்பரப்பு கடல் பாலைவனமாக மாறும் அபாயம் உள்ளது.” – என்றார்.

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் நவம்பரில் சமர்ப்பிக்கப்படும்..!

0

2026 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தின் ஒதுக்கீட்டு சட்டமூலத்தை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நாடாளுமன்றத்தில் சமர்பிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

“உற்பத்திப் பொருளாதாரம் மற்றும் அனைவரையும் பொருளாதார அபிவிருத்தியில் பங்கெடுக்கச் செய்தல்” எனும் தொனிப்பொருளை அடிப்படையாகக் கொண்டு 2026-2030 அரச நிதிச் சட்டகம் மற்றும் அரச நிதி மூலோபாயக் கூற்று மற்றும் தேசிய கொள்கைச் சட்டகமான “செழிப்பான நாடு – அழகான வாழ்வு” எனும் கொள்கைச் சட்டகத்திற்கமைய 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தயாரிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை தயாரிக்கும் போது தேசிய கொள்கைச் சட்டகத்தில் உட்சேர்க்கப்பட்டுள்ள முன்னுரிமைகள் மற்றும் கிராமிய அபிவிருத்தித் தொடக்க முயற்சிகளுக்கு முன்னுரிமையளிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

2024 ஆம் ஆண்டின் 44 ஆம் இலக்க நிதி முகாமைத்துவ சட்டத்தின் ஏற்பாடுகள் மற்றும் அரச கொள்கைப் பிரகடனத்திற்கமைய அமைச்சுக்களின் விடயதானங்களின் கீழ் அந்தந்த அமைச்சுக்கள் அடையாளங்கண்டுள்ள கருத்திட்டங்கள் மற்றும் வேலைத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்வதற்கு அனைத்து அமைச்சுக்களிடமிருந்தும் முன்மொழிவுகள் பெற்றுக் கொள்ளப்படவுள்ளது.

இதற்கமைய, 2026 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை 2025 ஒக்டோபர் மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து, அதன் இரண்டாம் வாசிப்பு 2025 நவம்பர் மாதத்தில் நடாத்துவதற்கும், மூன்றாம் வாசிப்பின் வரவு செலவுத்திட்ட விவாதத்தை 2025 நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடாத்துவதற்கு ஏற்றவாறு 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தைத் தயாரிப்பதற்கு நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

லாஃப்ஸ் எரிவாயு விலைத் திருத்தம் தொடர்பில் வெளியான அறிவிப்பு..!

0

லாஃப் சமையல் எரிவாயுவின் ஜூலை மாதத்துக்கான விலையில் திருத்தம் செய்யப்பட மாட்டாது என லாஃப் எரிவாயு நிறுவனத்தின் பணிப்பாளர் நிரோஷன் ஜே.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் லாஃப் எரிவாயுவின் விலை திருத்தத்தின்படி,

12.5 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை 420 ரூபாவாலும் 5 கிலோ சிலிண்டரின் விலை 168 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டது.

அந்த விலையுயர்வின் அடிப்படையில், 12.5 கிலோ எரிவாயு சிலிண்டர் 4,100 ரூபா எனவும் 5 கிலோ சிலிண்டர் 1,645 ரூபா எனவும் விலை நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

அதனையடுத்து, மே, ஜூன் மாதங்களில் லாஃப் எரிவாயு விலைகள் மாற்றப்படவில்லை. இந்நிலையில், இந்த மாதமும் விலையில் திருத்தம் செய்யப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

காணி கபளீகரத்துக்கு எதிரான சுமந்திரனின் வழக்கு மீளப் பெறப்பட்டது..!

0

வடக்கு மாகாணத்தில் பொதுமக்களின் காணிகளைக் கபளீகரம் செய்யும் இலக்கோடு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை அரசு கடைசி நேரத்தில் திரும்ப பெற்றுக் கொண்டது.

அதனை ஆட்சேபித்து உயர்நீதிமன்றத்தில் தான் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் இன்று உயர்நீதிமன்றத்தில் விலக்கிக் கொண்டார்.

இந்த விவகாரம் தொடர்பாக மனுதாரரான சுமந்திரனுக்கு உள்ள உரித்துகளைக் கைவிடாமல் வழக்கை திரும்ப பெறுவதற்கு உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது. நீதியரசர்கள் ஜனக் டி சில்வா, அர்ஜுனா ஒபயோசேகர, மேனக விஜயசுந்தர ஆகியோரைக் கொண்ட ஆயம் இந்த அனுமதியை அளித்தது.

இந்த வழக்கை மனுதாரர் தரப்பில் முன்னின்று வாதிட்ட ஜனாதிபதி சட்டத்தரணி ஈ.கனகேஸ்வரன் இன்றைய வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்துக்குச் சமுகம் அளித்திருக்கவில்லை.

சுகவீனம் காரணமாக அவர் நீதிமன்றத்துக்கு வரவில்லை என அவர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி லக்‌ஷ்மணன் ஜெயக்குமார் மன்றில் தெரிவித்தமையோடு, இந்த வழக்கின் முக்கியத்துவம் கருதி அதற்கான முன்னுரிமை அளிக்கப்பட்டது.

அதன்படி, உரிய சமயத்தில் இடைக்காலத் தடை உத்தரவையும் விதித்த நீதிமன்றத்துக்கு ஜனாதிபதி சட்டத்தரணிகனகேஸ்வரன் நேரில் பிரசன்னமாகி இன்று நன்றி தெரிவிக்க விரும்பினாராயினும், அவர் சுகவீனம் காரணமாக இன்று மன்றுக்கு வரவில்லை என்றும், தமது நன்றியை நீதிமன்றில் பதிவு செய்யுமாறு அவர் குறிப்பிட்டுள்ளார் என்றும் சட்டத்தரணி லக்‌ஷ்மணன் ஜெயக்குமார் தெரிவித்தார்.

அதேவேளை, அரசு தரப்பில் பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் சுரேகா அஹமத் முன்னிலையாகி இருந்தார்.

வவுனியா இளைஞனைக் கடத்திச் சென்று தாக்கி பணம் பறித்த காவாலிகள் கைது..!

0

யாழில் இருந்து வருகை தந்து வவுனியா இளைஞன் ஒருவரை தாக்கி அவரிடம் இருந்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தையும் பறித்து சென்ற குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸார் நேற்று (01.07) தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம், மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த மூவர் கார் ஒன்றில் கடந்த வெள்ளிக்கிழமை வவுனியாவிற்கு வருகை தந்து வவுனியா, புதிய பேருந்து நிலையம் முன்பாக நின்ற வவுனியா இளைஞன் (வயது 18) ஒருவரை காரில் கடத்திச் சென்று குடியிருப்பு குளக்கட்டு பகுதியில் வைத்து குறித்த இளைஞன் மீது தாக்குதல் நடத்தி விட்டு அவரது வங்கி அட்டையை பறித்து 50 ஆயிரம் ரூபாய் பணமும் பெற்று விட்டு தாக்குதலுக்குள்ளான இளைஞனை புதிய பேருந்து நிலையம் முன்பாக இறக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட இளைஞன் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜெயக்கொடி அவர்களின் வழி நடத்தலில் வவுனியா குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஹேமந்த டீ சில்வா தலைமையில் பொலிஸ் சார்ஜன்டுகளான திசாநாயக்க (37358), ஜெயதுங்க (20211), திலீப் (61461), பொலிஸ் கொன்ஸ்தாபிள்களான உபாலி (60945), ரணில் (81010), தயாளன் ( 91792) ஆகிய பொலிஸ் குழுவினர் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

இவ் விசாரணைகளையடுத்து யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த 19, 21 மற்றும் 19 வயது இளைஞர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகளின் பின் அவர்களை நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

யாழில் கசிப்பு குடித்துவிட்டு கிணற்று படியில் நித்திரையான நபர் கிணற்றில் வீழ்ந்து பலி..!

0

நேற்று முன்தினம் (29) கசிப்பு குடித்துவிட்டு கிணற்றுக்கு அருகே படுத்துறங்கிய நபர் ஒருவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்தார். மானிப்பாய் தெற்கு, மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த கணேசராசா சுபாகரன் என்ற 2 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,

இவர் கடந்த 29ஆம் திகதி வீடு ஒன்றிற்கு சென்று கசிப்பு குடித்துள்ளார். பின்னர் வீட்டுக்கு சென்றுவிட்டு மீண்டும் அந்த வீட்டுக்கு கசிப்பு குடிக்கச் சென்றுள்ளார். அந்த வீடு பூட்டியிருந்தது.

இந்நிலையில் குறித்த நபர் அந்த வீட்டுக்கு முன்னால் உள்ள பழைய கிணற்றுக்கு அருகாமையில் உறங்கியுள்ளார். இவ்வாறு உறங்கியவர் திடீரென கிணற்றினுள் விழுந்துள்ளார்.பின்னர் உறவினர்கள் அவரை தேடியவேளை நேற்றைய தினம் (30) கிணற்றில் சடலமாகக் காணப்பட்ட நிலையில் மீட்கப்பட்டார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

மோட்டார் திணைக்கள முன்னாள் ஆணையாளர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது..!

0

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் முன்னாள் ஆணையாளர் நாயகம் உட்பட 3 பேரை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இலங்கை சுங்கத்தால் அனுமதிக்கப்படாமல், மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தில் சட்டவிரோதமாகப் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் குறித்த விசாரணையின் ஒரு பகுதியாக இந்தக் கைது மேற்கொள்ளப்பட்டது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர்.

323 கொள்கலன்கள் விடுவிப்பு; முக்கிய புள்ளிகள் மீது பாயப் போகும் சட்டம்???

0

சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய அதிகாரிகள் மீது ஒழுக்காற்று மற்றும் சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்து அமைச்சர்,

“சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்கள் விவகாரத்தை ஆராய ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழு, சுங்க அதிகாரிகளின் தரப்பில் ஆய்வு தொடர்பான சில தவறுகள் நடந்திருப்பதைக் கண்டறிந்துள்ளதுடன், அக்குழுவின் அறிக்கையின் அடிப்படையில் ஜனாதிபதி தேவையான தீர்மானங்களை எடுப்பார்.

இந்தக் குழுவின் மூலம் சில முக்கிய காரணிகள் கண்டறியப்பட்டுள்ளது. அவற்றில் இலங்கை சுங்கத் தரப்பில் குறைபாடும் தவறும் ஒன்றாகும்.

இது தொடர்பில் சுங்கத்திணைக்கள அமைச்சரும் அமைச்சகச் செயலாளரும் தேவையான நடவடிக்கைகளை எடுப்பார்கள்.”

மேலும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் மற்றும் போலி செய்திகள் அடிப்படையில் இந்தப் பிரச்சினையை அரசியலாக்க முயற்சிக்கும் எதிர்க்கட்சிகளை அமைச்சர் ரத்நாயக்க சாடியுள்ளார்.

இதேவேளை, சுங்க சோதனை இல்லாமல் விடுவிக்கப்பட்ட சந்தேகத்திற்குரிய 323 கொள்கலன்களின் உள்ளடக்கங்களை தன்னால் வெளியிட முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார்.

கொள்கலன்கள் எங்கிருந்து வந்தன, எந்த நாட்டிலிருந்து வந்தன என்பதை முழுமையாக கூறமுடியம் என்றும் அர்ச்சுனா சுட்டிக் காட்டியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (30.06.2025) இடம்பெற்ற விவாதத்தின் போதே அவர் இதனை தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

தமிழரசுக் கட்சியிலிருந்து பதவி விலகிய முக்கிய உறுப்பினர்..!

0

இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் மாவட்ட கிளையின் பொருளாளர் தி.பரஞ்சோதி கட்சியின் பொருளாளர் பதவியில் இருந்து விலகுவதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச் செயலாளருக்கு அறிவித்துள்ளார்.

இன்று (01.07.2025) இது தொடர்பான எழுத்து மூலம் கடிதம் ஒன்றையும் தமிழரசுக்கட்சியின் பொதுச் செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ளார்.

குறித்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது,

“தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர், முன்னாள் மாவட்டத் தலைவர், நானாட்டான் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் என்ற வகையில் தமிழரசுக் கட்சியின் மன்னார் மாவட்ட கிளையின் பொருளாளர் பதவியிலிருந்து நான் பதவிவிலகல் செய்கிறேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாவட்டத் தலைமை கடந்த தேர்தலில் தன்னிச்சையாகச் செயற்பட்டதுடன், உள்ளூராட்சி சபைகளை அமைப்பதில் அலட்சியமாகச் செயற்பட்டமை, கட்சிக்கும் மன்னார் மாவட்டத்திற்கு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, தற்போதைய மாவட்ட தலைமையுடன் தொடர்ந்து பணியாற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, மக்கள் மத்தியில் பல்வேறு வகையான விமர்சனங்கள் மற்றும் எதிர்ப்புகள் எழுந்துள்ளதால், தோல்வி மற்றும் பின்னடைவுக்கு தார்மீக பொறுப்பேற்று, பொருளாளர் பதவியில் இருந்து விலகுகிறேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். என குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த கடிதத்தின் பிரதி இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் மாவட்ட கிளை தலைவர், செயலாளருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் மாவட்ட கிளையின் தலைவராக செயல்படும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் கட்சிளின் தலைமை பதவியில் இருந்து விலகுவதாக பொதுச் செயலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இவ்விடயம் குறித்து முன்னாள் நாடாளும்னற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதனை தொடர்பு கொண்டு வினவிய போது தான் மாவட்ட கிளை தலைமை பதவியில் இருந்து பதவி விலகல் செய்ய உத்தேசித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு – இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்

0

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

வெள்ளை டீசல் லீற்றர் 15 ரூபாவினால் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி, வெள்ளை டீசல் ஒரு லீற்றரின் விலை 274 ரூபாவிலிருந்து 289 ரூபாவாக உயர்வடைந்துள்ளது.

மண்ணெண்ணை லீற்றர் 7 ரூபாவினால் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி, மண்ணெண்ணை ஒரு லீற்றரின் விலை 178 ரூபாவிலிருந்து 185 ரூபாவாக உயர்வடைந்துள்ளது.

92 ஒக்டேன் ரக பெற்றோல் லீற்றர் 12 ரூபாவினால் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி, 92 ஒக்டேன் ரக பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 293 ரூபாவிலிருந்து 305 ரூபாவாக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை, 4 ஸ்டார் யூரோ 4 ரக லங்கா சுப்பர் டீசல் மற்றும் 95 ஒக்டேன் யூரோ 4 ரக பெற்றோல் என்பனவற்றின் விலைகளில் மாற்றமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!