Friday, October 10, 2025
Huis Blog

மேற்கத்திய சட்டங்கள் இலங்கைக்கு சிறிதும் பொருந்தாது – பேராயர் சுட்டிக்காட்டு

0

சிறுவர்கள் தண்டனை தொடர்பாக முன்மொழியப்பட்ட சட்டத்தை அமுல்படுத்தும் போது, சில மேற்கத்திய சட்டங்கள் இலங்கைக்கு சிறிதும் பொருந்தாது என்று பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

நாகொட புனித ஜோன் பெப்டிஸ்ட் கல்லூரியின் 150வது ஆண்டு நிறைவை முன்னிட்டு அதன் பழைய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட கொண்டாட்ட திருப்பலியில் பங்கேற்றபோது பேராயர் இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.

சிறுவர்கள் தண்டிக்கப்பட்டு சரியான பாதையில் வழி நடத்தப்பட வேண்டும் என்றும், இலங்கை கல்வியில் அனைத்து மேற்கத்திய சட்டங்களையும் பின்பற்றப்படக் கூடாது என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.

குழந்தைக்கும் பெற்றோருக்கும் இடையில் இது சிக்கலை உருவாக்கும், அப்படியென்றால் ஆசிரியர்களும் எப்படி சமாளிப்பார்கள்? ஆசிரியர்களால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது.

பாடசாலையில் மாணவர்கள் தவறாக நடந்து கொண்டால், ஆசிரியர் தலைமுடியை அவ்வளவு நீளமாக வளர்க்க வேண்டாம் என்றும் அதை வெட்ட வேண்டும் என்றும் மாணவர்களுக்கு அறிவுரை கூறலாம்.

அப்படிச் சொன்னால், அந்த மாணவர்களுக்கு பொலிஸ் நிலையம் சென்று என் ஆசிரியர் எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதாகக் கூறலாம். இதைச் சொன்னதற்காக ஆசிரியரைக் கைது செய்யலாம். அது மிகப் பெரிய தவறு.

இதை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. மேற்கத்திய நாடுகளுக்கு நல்லது என்ற அனைத்தும் இலங்கைக்கு ஏற்றதல்ல.

நமது இலங்கையில், நாம் மதிக்க வேண்டிய ஒரு கலாச்சாரம், ஒரு அமைப்பு மற்றும் நெறிமுறைகள் உள்ளன.

எனவே, கல்வி அதிகாரிகள் தயவுசெய்து இதைச் செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம் என்றார்.

மாகாவலி ஆற்றில் காணாமல் போன மாணவர்களின் சடலங்கள் மீட்பு..!

0

கண்டி – தென்னகும்பும்புர பகுதியில் காணாமல் போனதாகக் கூறப்படும் இரண்டு பாடசாலை மாணவர்களின் உடல்கள் தென்ன கும்பும்புர பாலத்திலிருந்து சுமார் 2 1/2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள குருதெனிய பகுதியில் மகாவலி ஆற்றில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, 14 மற்றும் 13 வயதுடைய கே. ஜெகதீஸ் மற்றும் முகமது மில்ஹான் என்ற இரண்டு மாணவர்களே உயிரிழந்துள்ளனர்.

குறித்த இரண்டு மாணவர்களும் நேற்று (09) மாலை திகன பகுதிக்கு வளர்ப்பு மீன் வாங்கச் செல்வதாகக் கூறி வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

இதற்கிடையில், இரண்டு மாணவர்களும் நேற்று (08) மகாவலி ஆற்றிலுள்ள பாறைகள் மீது இருந்ததாக அப்பகுதியைச் சேர்ந்த ஒரு மீனவர் காவல்துறையினருக்கு தெரிவித்துள்ளார்.

அப்போது, மீனவர் இரண்டு மாணவர்களையும் ஆற்றில் இறங்க வேண்டாம் என்று எச்சரித்திருந்தாலும், அவர்கள் தங்களுக்கு நீந்த முடியும் என்று மீனவருக்கு பதில் அளித்துள்ளனர்.

மேலும் பலர் இரண்டு மாணவர்களும் மகாவலி ஆற்றில் இறங்குவதைக் கண்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து, தென்னகும்பும்புர பாலத்திற்கு அருகிலும், விக்டோரியா நீர்த்தேக்கத்தின் கீழ் பகுதியிலும் காவல்துறை மற்றும் கடற்படை டைவர்ஸ் விரிவான தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்ட நிலையில், மாணவர்கள் இருவரும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

புதிய அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் நியமனம்..!

0

2026 ஆம் ஆண்டுக்கான பாதீட்டு திட்டத்திற்கு ஏற்ப அரசாங்கத்தின் வளர்ச்சி இலக்குகளை விரைவுபடுத்தவும் திறம்படச் செய்யவும் அமைச்சரவை மறுசீரமைப்பு பின்வருமாறு:

அமைச்சரவை அமைச்சர்கள்

பிமல் நிரோஷன் ரத்நாயக்க
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர்

அனுர கருணாதிலக
துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர்

எச்.எம். சுசில் ரணசிங்க
வீட்டுவசதி, கட்டுமானம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர்

பிரதி அமைச்சர்கள்

அனில் ஜெயந்த பெர்னாண்டோ
நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர்

டி.பி. சரத்
வீட்டுவசதி, கட்டுமானம் மற்றும் நீர் வழங்கல் பிரதி அமைச்சர்

எம்.எம். முகமது முனீர்
மத மற்றும் கலாச்சார விவகார பிரதி அமைச்சர்

எரங்க குணசேகர
நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர்

முதித ஹன்சக விஜயமுனி
சுகாதார பிரதி அமைச்சர்

அரவிந்த செனரத் விதாரண
காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர்

எச்.எம். தினிது சமன் குமார
இளைஞர் விவகார பிரதி அமைச்சர்

யு.டி. நிஷாந்த ஜெயவீர
பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர்

கௌசல்யா அரியரத்ன
வெகுஜன ஊடக பிரதி அமைச்சர்

ஈ.எம். ஐ. எம். அர்காம்
எரிசக்தி பிரதி அமைச்சர்

பேசாலையில் காற்றாலை அமைக்க மணல் ஆய்வுக்கு வந்த குழு; மக்களால் விரட்டியடிப்பு..!

0

மன்னார் – பேசாலை தெற்கு கடற்கரை பகுதியில் இன்றைய தினம் திங்கட்கிழமை (6) மாலை காற்றாலை திட்டத்தை செயற்படுத்துவதற்கான மணல் ஆய்வு முன்னெடுக்க குழு ஒன்று வருகை தந்த நிலையில் மக்களின் பாரிய எதிர்ப்புக்கு மத்தியில் குறித்த குழு அங்கிருந்து வெளியேறியது.

பேசாலை கிராமத்திற்கு உட்பட்ட தெற்கு கடற்கரை பகுதியில் காற்றாலை திட்டத்தை செயல்படுத்துவதற்கான மணல் ஆய்வு முன்னெடுக்க இயந்திரங்களுடன் குழு ஒன்று வருகை தந்ததை அறிந்து கொண்ட பிரதேச மக்கள் குறித்த பகுதிக்குச் சென்று வருகை தந்த குழுவினருடன் கருத்து முரண்பாட்டில் ஈடுபட்டனர்.

இதன் போது பேசாலை பொலிஸாரும் அவ்விடத்திற்கு சென்ற நிலையில் அங்கு பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

மேலும் காற்றாலை திட்டத்தை செயற்படுத்துவதற்கான மணல் ஆய்வு முன்னெடுக்க இயந்திரங்கள் ஏற்றி வந்த டிராக்டர் இயந்திரத்தை மறித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மக்களின் தொடர் எதிர்ப்பை தொடர்ந்து வந்த குழுவினர் அவ்விடத்தில் இருந்து பின்வாங்கிச் சென்றுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

வவுனியாவில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்து; 18 வயது இளைஞன் மரணம்..!

0

வவுனியா- இராசேந்திரம்குளம் பகுதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து மோட்டர் சைக்கிள் ஒன்று விபத்துக்குள்ளானதில் இளைஞன் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளதாக நெளுக்குளம் பொலிசார் தெரிவித்தனர்.

இன்று (06.10) பிற்பகல் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

வவுனியா, இராசேந்திரகுளம் பகுதியில இருந்து நெளுக்குளம் நோக்கி மோட்டார் சைக்கிள் ஒன்றில் மூன்று இளைஞர்கள் பயணித்துள்ளனர்.

குறித்த மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் இராசேந்திரன் குளம் பாடசாலைக்கு அருகில் உள்ள பேருந்து தரிப்பு நிலையத்துடன் மோதியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன், இருவர் காயமடைந்து வவுனியா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்தில் சாம்பல்தோட்டம் பகுதியைச் சேர்ந்த கோபால்ராஜ் நிலக்சன் (வயது 18) என்பவரே மரணமடைந்தவராவார்.

சம்பவம் தொடர்பில் நெளுக்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

ஐ.நாவில் இலங்கை தொடர்பான பிரேரணை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்..!

0

ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பாக இறுதியாக இன்று(6) சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல் எனும் தலைப்பில் பிரிட்டன் தலைமையிலான இணை அனுசரணை நாடுகளால் இந்தப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது.

அதேவேளை ஏற்கனவே ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் கடந்த மாத ஆரம்பத்தில் இந்தப் பிரேரணையின் முதலாவது வரைபு சமர்ப்பிக்கப்பட்டது. பின்னர் அதில் பல திருத்தங்கள் செய்யப்பட்டன.

அந்தவகையில், ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் திருத்தப்பட்ட இறுதி வரைபு இன்று சமர்ப்பிக்கப்பட்டு, இன்றைய தினமே வாக்கடுப்பின்றி நிறைவேற்றப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

இலங்கை இளைஞர், யுவதிகளிடையே தீவிரமடையும் எச்.ஜ.வி..!

0

இலங்கையில் 15 – 29 வயதுக்குட்பட்டவர்களிடையே எச்.ஐ.வி தொற்று அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

உலகில் பெரும் பேரழிவை ஏற்படுத்தும் பாலியல் வைரஸ்களில் எச்.ஐ.வியும் ஒன்றாகும். இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை நேரடியாகத் தாக்கி உடலை பலவீனப்படுத்துகிறது.

மேலும் மிகவும் ஆபத்தான சூழ்நிலை என்னவென்றால், இருமல் அல்லது சளி போன்ற ஒரு சிறிய நோய் ஏற்பட்டால் கூட அது மரணத்திற்கு வழிவகுக்கும்.

எச்.ஐ.வி தொற்றுகள் ஏற்படக்கூடிய மூன்று முக்கிய வழிகளை சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

1. எச்.ஐ.வி தொற்றுக்குள்ளான ஒருவருடன் உடலுறவு கொள்வது

எச்.ஐ.வி நோயாளியை முத்தமிடுவதால் நோய் பரவாது. எனினும் பாலியல் ரீதியான உடலுறவினால் பரவுகின்றது. குறிப்பாக ஆசனவழி உடலுறவுதான் எச்.ஐ.வி வருவதற்கான முக்கிய காரணமாக கருதப்படுகின்றது. இதுபோன்ற பாதுகாப்பற்ற உடலுறவு மூலம் பரவக்கூடிய எச்.ஐ.வி வைரஸ், உடல் முழுவதும் சுமார் 72 மணிநேரத்திற்குள் பரவி விடும்.

2. ஊசிகளின் கட்டுபாடற்ற பயன்பாடு

ஊசி மூலம் போதைப்பொருள் பாவணை மூலமும் வெகுவாக பரவுவதுடன் ஒரே ஊசியை பலர் பயன்படுத்துவதற்கு இதற்கு காரணமாக அமைந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

3. எயிட்ஸ் நோயாளியாக இருக்கும் கர்ப்பிணித்தாய்மாரிடத்தில் இருந்து அவரது பிறக்கவுள்ள குழந்தைக்கு

2021 ஆம் ஆண்டில் 411 நோயாளர்களும், 2022 இல் 607 நோயாளர்களும், 2023 இல் 697 நோயாளர்களும், 2024 இல் 824 நோயாளர்களும் கண்டறியப்பட்டுள்ளனர். அதிகளவில் ஆண்களே எயிட்ஸ் நோயாளர்களாக கண்டறியப்பட்டுள்ளனர். இது 7:1 விகிதமாகும்.

அதன்படி, 2025 ஆம் ஆண்டின் ஜனவரி முதல் மார்ச் வரை அடையாளம் காணப்பட்ட புதிய எயிட்ஸ் ​நோயாளர்கள் உட்பட, நாட்டில் இதுவரை 6,740 நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தரவுகள் தெரிவிக்கின்றன.

2024 ஆம் ஆண்டில், 824 புதிய எச்.ஐ.வி தொற்றுகள் அடையாளம் காணப்பட்டன, அவற்றில் அதிகபட்ச எண்ணிக்கை கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலிருந்து பதிவாகியுள்ளது. எயிட்ஸ் நோயினால் 47 பேர் உயிரிழந்துள்ளனர்.

இலங்கை குறைந்த எச்.ஐ.வி பாதிப்பு உள்ள நாடாகக் கருதப்பட்டாலும், கடந்த ஆண்டு பதிவான புதிய தொற்றுகளின் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு கவலையளிப்பதாக சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

சுகாதார அமைச்சின் கீழ் செயல்படும் தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம், இலவச மற்றும் ரகசிய சோதனை மற்றும் சிகிச்சைகளை வழங்குகிறது.

இலங்கை முழுவதும் உள்ள 41 பாலியல் நோய் சிகிச்சை மையங்களில் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர்களுக்கு இலவச சிகிச்சையை வழங்குகிறது.

எயிட்ஸ் தொடர்பான சிகிச்சைகளை பெற்றுக் கொள்ள தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் தொலைபேசி (+94 703 733 933) இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் பிறப்பு வீதம் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்..!

0

இலங்கையில் பிறப்பு வீதம் கடந்த சில ஆண்டுகளில் கடுமையாகக் குறைந்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்கள அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

2018 ஆம் ஆண்டு 3,28,400 உயிருடன் பிறந்த குழந்தைகள் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், 2024 இல் அது 2,20,761 ஆகக் குறைந்து 33% வீழ்ச்சியாக பதிவாகியுள்ளது.

இது பல தசாப்தங்களிலேயே மிகக் குறைந்த பிறப்பு வீதமாக குறிப்பிடப்படுவதுடன், அதிகாரிகள் இதை ஒரு கவலைக்குரிய நிலையாக கூறியுள்ளனர்.

இந்நிலையில், சிறிய குடும்ப விருப்பம், தாமதமான திருமணங்கள், மற்றும் குழந்தை பிறப்பை தள்ளிப்போடும் பழக்கம் ஆகியவை நீண்டகாலமாகவே குறைவுக்குக் காரணமாக உள்ளதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

அத்தோடு, கொவிட்-19 தொற்றுநோய் மற்றும் 2022 ஆம் ஆண்டின் பொருளாதார நெருக்கடி இணைந்து, திருமணங்களையும் கர்ப்பங்களையும் தாமதப்படுத்தியதால் பிறப்பு வீதம் மேலும் சரிந்துள்ளதாக கூறப்படுகிறது.

கிளிநொச்சியில் சாரதிகளிடம் இலஞ்சம் வாங்கிய இரு பொலிசார் பதவி நீக்கம்..!

0

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

நேற்று முன்தினம்(4)பூநகரி பகுதியில் கடமையில் இருந்த பொழுது கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு குறித்த பொலிஸ் அதிகாரிகள் இலஞ்சம் பெறுவதாக முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இரண்டுபொலிஸ் உத்தியோகத்தர்களையும் பரிசோதனைக்கு உட்படுத்திய பொழுது அவர்கள் அன்று கடமைக்குச் செல்லும் பொழுது 2000 ரூபாய் பணம் மாத்திரமே பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இருப்பினும் பரிசோதனையின் போது மொத்தமாக 7040 பணம் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில், 5040பணம் மேலதிகமா இருந்தமை விசாரணையின் போது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களும் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அம்பாறையில் அதிபர், ஆசிரியர்கள் தாக்குதலுக்கு உள்ளாகும் சம்பவங்கள் அதிகரிப்பு..!

0

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பிரதேசத்திற்குட்பட்ட திருக்கோயில் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் கடமையாற்றும் அதிபர் ஆசிரியர்கள் அண்மைக்காலமாக வெளிநபர்களினால் தாக்குதலுக்கு உள்ளாகும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் தீபன் திலீசன் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இவ்வாறான சம்பவங்களைக் கட்டுப்படுத்துவதற்கு சிறிலங்கா காவல்துறையினரோ, அரசாங்கமோ ஆக்கபூர்வமான தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் இருப்பதன் பின்னணி பாரிய சந்தேகங்களை ஏற்படுத்துகின்றன.

2025.05.23 ம் திகதியன்று திருக்கோவில் கல்வி வலயத்துக்குட்பட்ட ஆலயடிவேம்பு திருநாவுக்கரசு வித்தியாலயத்தின் அதிபர் மற்றும் ஆசிரியரும் வாள் வெட்டுக்கு உள்ளாகியுள்ளனர்.

திருக்கோவில் கல்வி வலயத்தினால் நடத்தப்பட்ட மேலதிக செயலமர்விற்கு தொடர்ச்சியாக சமுகளித்திராத மாணவியொருவரின் வரவை உறுதிப்படுத்துவதற்காக, பாடசாலை அதிபரின் அறிவுறுத்தலுக்கு அமைய, மாணவர் இடைவிலகலை கட்டுப்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட கட்டாய வரவு குழுவிற்கு பொறுப்பான ஆசிரியர், மாணவியின் வீட்டிற்கு தேடிச்சென்ற போது, குறித்த மாணவியின் மைத்துனரால் குறித்த ஆசிரியர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த சம்பவத்தை அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற அதிபர் மீதும் குறித்த நபரினால் வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டு, அதிபரின் மோட்டார் சைக்கிளும் பாரிய சேதத்திற்கு உள்ளாக்கப்பட்டிருந்தது.

மேலும் – 2025.10.01 ம் திகதியன்று கல்முனை திருக்கோவில் கல்வி வலயத்துக்குட்பட்ட அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ணா கல்லூரியின் பிரதி அதிபர், முகமூடி அணிந்த இனம் தெரியாத நபர்களினால் தாக்கப்பட்டுள்ளார்.

நவராத்திரி விழாவின் ஒரு அங்கமாக கும்ப ஊர்வலம் சென்ற மாணவிகளை அசௌகரியப்படுத்தும் வகையில் பெண் பிள்ளைகளை நெருங்கி புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க சில இளைஞர்கள் முற்பட்டுள்ளனர்.

குறித்த இளைஞர்கள் தங்களைப் புகைப்படம் எடுப்பதைத் தடுக்குமாறு மாணவிகள் விடுத்த வேண்டுகோளுக்கமைய, புகைப்படம் வீடியோ எடுக்க முயன்ற இளைஞர்களைத் தடுத்திருந்த பிரதி அதிபரின் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

பிரதி அதிபரின் வீடுதேடிச் சென்ற முகமூடி அணிந்த இனந்தெரியாத நபர்கள் அவரை இரும்பு கம்பிகளால் தாக்கியுள்ளனர்.

நாட்டில் குற்றச் செயல்களைத் தடுத்து நிறுத்துவதற்காக டுபாயிலும், இந்தோனேசியாவிலும் வைத்து பாதாள உலகக் குழுக்களை கைது செய்துள்ளதாக பிரசாரம் செய்துவரும் அரசாங்கம், சிறிலங்காவில் உள்ள பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாமல் இருப்பது கவலைக்குரியதாகும்.

அரசாங்கம், தண்டனைச் சட்டக்கோவையைத் திருத்துவதற்கான சட்டமூலத்தை வெளியிட்டுள்ளது. இக்கொள்கை இலங்கையில் காணப்படும் சமூகவியல் பின்னணிகளை கவனத்தில்கொண்டு தயாரிக்கப்பட்டதா? என்ற கேள்வி பலராலும் எழுப்பப்படுகிறது.

மாணவர்களிற்கு அதிபர், ஆசிரியர்களினால் வழங்கப்படும் உளரீதியான தண்டனைகளுக்கு கூட சிறைத் தண்டனைகளையும் அபராதங்களையும் விதிக்கும் சட்டமூலத் திருத்தங்களை மேற்கொண்டுள்ள அரசாங்கம், பாடசாலை மாணவர்களையும் அதிபர், ஆசிரியர்களையும் பாதுக்காக்கத் தவறும் சிறிலங்கா காவல் துறையினருக்கு எதிராக எடுக்கப்பட வேண்டிய புதிய சட்ட மூலங்களை உருவாக்கத் தவறியுள்ளது.

மாணவர்களுக்கு கட்டுப்படுத்த முடியாத சுதந்திரத்தை வழங்கும் சட்டமூலங்களை அரசாங்கம் உருவாக்குவதற்கு முன்னர், கட்டுக்கடங்காத சுதந்திரத்தை மாணவர்களுக்கு வழங்கும் குறித்த சட்டமூலங்களை தமக்கு சாதகமாக பயன்படுத்தி சமூக சீரழிவுகளில் ஈடுபடும் நபர்களினால் அதிபர், ஆசிரியர், மாணவர்கள் மற்றும் சமூகம் பாதிக்கப்படும் விடயங்களுக்கும் தீர்வு வழங்க முன்வர வேண்டும்.

திருக்கோவில் கல்வி வலயத்துக்குட்பட்ட பிரதேசங்களில் அதிபர், ஆசிரியர்களுக்கு எதிராக நடைபெற்ற காட்டு மிராண்டி தனமான சம்பவங்களை இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.

குறித்த விடயங்கள் தொடர்பில், அரசாங்கம் குற்றவாளிகளை கைது செய்வதுடன் மட்டும் நின்றுவிடாமல் சமூக சுதந்திரத்துக்கு அச்சுறுத்தலற்ற சூழல் உருவாக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றோம்” என தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!