Tuesday, February 4, 2025
Huis Blog

மக்களின் முறைப்பாடுகளை ஏற்க மறுக்கும் அதிகாரிகள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை..!

0

முறைப்பாடு அளிக்க பொலிஸ் நிலையங்களுக்கு வரும் தரப்பினரிடமிருந்து முறைப்பாடுகளை ஏற்க மறுக்கும் அதிகாரிகள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்

இது தொடர்பில் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்ட பதில் பொலிஸ்மா அதிபர்,

ஒழுக்காற்று நடவடிக்கைக்கு மேலதிகமாக, பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் விதிகளின்படி அத்தகைய அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான வாய்ப்பும் உள்ளதாக சுட்டிக் காட்டியுள்ளார்.

பொலிஸ் நிலையங்களுக்கு முறைப்பாடு அளிக்க வருபவர்களின் முறைப்பாடுகளை ஏற்காமல், பல்வேறு காரணங்களைக் கூறி நிராகரிக்கப்படுவதாக எழுத்துப்பூர்வமாகவும், வாய்மொழியாகவும் முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக பிரியந்த வீரசூரிய குறிப்பிட்டுள்ளார்.

பொலிஸ் நிலையப் பொறுப்பாளர்களும் பிற அதிகாரிகளும் இத்தகைய மறுப்புக்கு பல்வேறு காரணங்களை முன்வைப்பதாக தகவல்கள் வந்துள்ளதாக பதில் பொலிஸ்மா அதிபர் தனது சுற்றறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.

அதேவேளை பொலிஸ் நிலையங்களுக்குப் பதிவாகும் முறைப்பாடுகளை பதிவு செய்து விசாரணை செய்வது பொலிஸ் அதிகாரிகளின் கடமையும் பொறுப்பும் ஆகும் என்றும் பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய வலியுறுத்தியுள்ளார்.

எனவே பொலிஸ் நிலையங்களுக்கு கிடைக்கும் எந்தவொரு முறைப்பாட்டையும் ஏற்றுக் கொள்ளாமல் நிராகரிக்க முடியாது என்று பதில் பொலிஸ்மா அதிபர் வெளியிட்ட சுற்றறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலை கிடைக்காததால் மன அழுத்தம்; யாழில் இளைஞன் செய்த விபரீத காரியம்..!

0

யாழில் வேலை கிடைக்கவில்லை என்ற விரக்தியில் இளைஞர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். குறித்த சம்பவம் இன்று (04.02.2025) இடம் பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம், கைலாச பிள்ளையார் கோவிலடியைச் சேர்ந்த 28 வயதுடைய தங்கவேல் விபுசன் என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,

உயிரிழந்த இளைஞன் பல்கலைக் கழகத்தில் பட்டப்படிப்பை நிறைவு செய்தவராவார். இருப்பினும் இரண்டு வருடங்களாக வேலை கிடைக்காத காரணத்தால் இன்றைய தினம்(04) தனது வீட்டில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

இந்நிலையில், அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டதுடன் உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலதிக தகவல் – கஜிந்தன்

யாழில் அரசின் இரகசிய முகவர்களாக செயற்பட்டு தமிழ் தேசியத்தை அழிக்கும் எம்பி..!

0

யாழில் அண்மையில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தமிழ் மக்களுக்கு எதிரான முரணான நிறைய விடயங்கள் கலந்துரையாடப் பட்டுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரட்ணம் சுகாஸ் கடுமையாக சாடியுள்ளார்.

யாழ் மாவட்ட மக்களின் வாக்குகளை பெற்று நாடாளுமன்றத்திற்கு தெரிவான சில உறுப்பினர்கள், தமிழ் மக்களுக்கு எதிராக மிகவும் மோசமான செயலை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் சுட்டிக் காட்டியிள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நட்ட ஈடு வழங்கப்பட வேண்டும் எனவும் மற்றும் தையிட்டி விகாரை அமைக்கப்பட்டுள்ள காணிகளுக்கு பதிலாக மக்களுக்கு மாற்று காணிகளை வழங்க வேண்டும் எனவும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் கூட்டத்தில் தெரிவித்ததாகவும் சுகாஸ் கூறியுள்ளார்.

இந்த நிலையில், இவர்களின் இவ்வாறான செயற்பாடுகள் குறித்து மக்கள் மிகவும் அவதானத்துடன் இருக்க வேண்டும் அத்தோடு, இவர்கள் அரசின் இரகசிய முகவர்களாக செயற்பட்டு எஞ்சியுள்ள தமிழ் தேசியத்தையும், தமிழனத்தின் நலன்களையும் அழிக்க முற்படுகின்றதாகவும் அவர் விசனம் வெளியிட்டுள்ளார்.

தமிழ் மக்களின் வரலாறு தெரியவில்லை என்றால் அமைதியாக இருங்கள், தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமே தவிர்த்து நட்ட ஈடு அல்ல என்பதை நாங்கள் தெரிவித்து கொள்ள விரும்புகின்றோம் எனவும் சுகாஸ் தெரிவித்துள்ளார்.

சிறப்பாக நடைபெற்ற வவுனியா மாவட்ட முன்பள்ளி ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வுக் கருத்தரங்கு..!

0

கல்வி அபிவிருத்தி குழுமத்தின் ஏற்பாட்டில் வவுனியா மாவட்ட முன்பள்ளி ஆசிரியர்களுக்கான முன்பள்ளி தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு நிகழ்வொன்று கடந்த 01.02.2025 அன்று வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

வவுனியா மாவட்ட மேலதில அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெற்ற மேற்படி கருத்தரங்கு நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.

அத்துடன் கல்வி அபிவிருத்தி குழுமத்தின் பிரதிநிதிகள், வவுனியா தெற்கு உதவிக் கல்விப் பணிப்பாளர், வவுனியா வடக்கு உதவிக் கல்விப் பணிப்பாளர், பாடசாலை அதிபர்கள், முன்பள்ளி இணைப்பாளர்கள் உட்பட வவுனியா மாவட்ட முன்பள்ளி ஆசிரியர்கள் பலரும் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

வவுனியாவில் போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் கைது..!

0

வவுனியா – பெரியார்குளம் பகுதியில் போதை மாத்திரையுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிசார் இன்று தெரிவித்தனர்.

வவுனியா மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து அதன் பொறுப்பதிகாரி அழகியவண்ண தலைமையிலான பொலிஸ் குழுவினர் வவுனியா, பெரியார்குளம் பகுதியில் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது 50 போதை மாத்திரைகள் இளைஞர் ஒருவரிடம் இருந்து மீட்கப்பட்டது.

இதனையடுத்து குறித்த மாத்திரைகளை உடமையில் வைத்திருந்த இளைஞரும் கைது செய்யப்பட்டார். கைது செய்யபட்டவர் வவுனியா பெரியார்குளம் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய நபராவார். மேலதிக விசாரணைகளின் பின் குறித்த இளைஞரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

வவுனியா தவசிகுளம் பகுதியில் இளைஞர் ஒருவர் மீது தாக்குதல்..!

0

வவுனியா, தவசிகுளம் பகுதியிலுள்ள விளையாட்டு மைதானத்தில் வைத்து இளைஞர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் அவர் காயமடைந்து வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தவசிகுளம் பகுதியில் இரண்டு அணிக்களுக்கிடையில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த போது குறித்த மைத்தானத்திற்குள் நுழைந்த சிலர் விளையாட்டில் ஈடுபட்டிருந்த இளைஞர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தியதுடன், விளையாட்டு நிகழ்வுக்கு வழங்கப்படவிருந்த வெற்றிக் கிண்ணங்கள் மற்றும் கதிரைகளையும் உடைத்துள்ளனர்.

காயமடைந்த இளைஞர் வவுனியா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அங்கு பெறப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதை ஏற்க முடியாது – செல்வம் எம்.பி

0

அரசு வடக்கு கிழக்கில் உள்ள விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு இது வரை உரிய தீர்வை பெற்றுக் கொடுக்கவில்லை என்றும், பல்வேறு பாதிப்புகளுக்கு மத்தியில் விவசாய செய்கையை முன்னெடுத்துள்ள விவசாயிகளின் நெல்லுக்கு உரிய நிர்ணய விலையை தீர்மானிக்க அரசாங்கம் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரசாங்கம் தொடர்ந்தும் விவசாயிகள் மீது கருணை காட்டவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது. விவசாயிகள் தொடர்ச்சியாக ஏற்படுகின்ற இயற்கை அனர்த்தத்தினால் பாரிய அழிவுகளை சந்திக்கின்றனர்.

எனினும் தமது பாதிப்பிற்கு நியாயமான தீர்வை தர வேண்டும் என்று கோரிக்கை விடுக்கும் அதே நேரம் அரசாங்கம் விவசாயிகளின் நெல்லின் விலையை நிர்ணயம் செய்யும் நிலையில் அவரது சிந்தனை இருக்கவில்லை என்பதை குறிப்பிட விரும்புகிறேன்.

பொறுப்பான அமைச்சர் நெல்லின் நிர்ணய விலையை அறிவிப்பதாக கூறுகின்ற அதே நேரம் அனுராதபுரம் மற்றும் ஏனைய பகுதிகளில் நெல் அறுவடை முடிந்த பின்னரே நெல்லுக்கு நிர்ணய விலையை தாம் தெரிவிப்பதாக கூறியுள்ளார்.

அனுராதபுரத்தில் உள்ள விவசாயிகள் மாத்திரமே விவசாயிகள் என்றும் வடக்கு கிழக்கில் உள்ள விவசாயிகளை விவசாயிகள் போல் தெரியவில்லையா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

நெல்லுக்கான நிர்ணய விலையை அரசாங்கம் குறைவாக நிர்ணயிக்க உள்ளதாக அறிகிறோம். இதனால் விவசாயிகள் விவசாயத்திற்காக செலவு செய்த முதலீடுகளை மீள பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்படும்.

எனவே அரசாங்கம் விவசாயிகள் நஷ்டத்தை எதிர் நோக்காத வகையில் கூடிய விலை நிர்ணயத்தை தீர்மானிக்க வேண்டும்.

அவ்வாறு செய்யவில்லை என்றால் ஏனைய தனியார் நெல் கொள்வனவு செய்கின்றவர்கள் அரசாங்கத்தை விட மிகவும் குறைவாகவே நெல்லை பெற்றுக்கொள்ள விலையை அவர்கள் தீர்மானிப்பார்கள்.

எனவே கூடிய அளவிலான விலையை நெல்லுக்கு அரசாங்கம் தீர்மானிக்கின்ற போது தனியார் நெல் கொள்வனவு செய்கிறவர்களும் கூடுதலான விலைக்கு நெல்லை கொள்வனவு செய்வார்கள்.

விவசாயத்திற்காக விவசாயிகள் வங்கிகளில் கடனை பெற்றும் நகைகளை வங்கியில் அடமானம் வைத்தும் பணத்தை பெற்று விவசாயத்தை முன்னெடுத்துள்ளனர்.

வறுமைக்கோட்டின் கீழ் உள்ள விவசாயிகளை நாங்கள் தூக்கி விடுவதாக இருந்தால் அவர்களின் நெல்லுக்கான உரிய விலை நிர்ணயிக்கப்பட வேண்டும்.

எனவே புதிய அரசாங்கம் சாட்டுப்போக்கு கூறாமல் நெல்லின் விலையை நிர்ணயம் செய்து அழிவில் இருந்து கொண்டுள்ள விவசாயிகளை தூக்கி விட வேண்டும் என்பதே எமது கோரிக்கையாக உள்ளது என தெரிவித்தார்.

இதே வேளை மூன்று கட்சிகளின் ஒற்றுமையான செயல்பாடு, தமிழரசுக் கட்சியின் நிலைப்பாடு, இந்திய மீனவர்களால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்தும் அவர் மேலும் கருத்துக்களை தெரிவித்தார்.

இலங்கை கடற்பரப்புக்குள் நுழையும் இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டு அவர்களின் உடைமைகள் பறிமுதல் செய்யப்பட வேண்டும். ஆனால் அவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்வதை ஏற்றுக் கொள்ள முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

அரச இயந்திரங்களால் தொடரும் காணி அபகரிப்பு; மக்கள் தெருவிலா இருப்பது – ரவிகரன் எம்.பி கேள்வி

0

முல்லைத்தீவு மாவட்டத்தில் படையினர், வனஇலாகா, வனஜீவராசிகள் திணைக்களம் உள்ளிட்ட அரச கட்டமைப்புக்கள் மக்களுக்குரிய காணிகளை தொடர்ந்தும் அத்துமீறி அபகரிப்புச் செய்வதால், மக்கள் குடியிருப்பதற்கே காணிகள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக் காட்டியுள்ளார்.

இவ்வாறு அரச இயந்திரங்கள் தொடர்ந்தும் மக்களின் காணிகளை ஆக்கிரமிப்புச் செய்தால் மக்கள் வீதிகளிலா குடியிருப்பது எனவும் அவர் இதன்போது கேள்வி எழுப்பியுள்ளார்.

முல்லைத்தீவு – துணுக்காய் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் 03.02.2025 இன்று இடம்பெற்றது.

இக் கூட்டத்தில் துணுக்காய் பிரதேசசெயலர் பிரிவில் 255 குடும்பங்களுக்கு குடியிருப்பதற்கு காணியில்லை என முறையிடப்பட்டது. இந் நிலையில் கருத்துத் தெரிவிக்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

துணுக்காய் பிரதேசசெயலர் பிரிவில் ஐயங்கன்குளத்தில் 21குடும்பங்களுக்கு, பழையமுறிகண்டியில் 04குடும்பங்ளுக்கும், புதுத்துவெட்டுவான் பகுதியில் 12குடும்பங்களுக்கும், கல்விளான் பகுதியில் 15குடும்பங்களுக்கும், தென்னியன்குளம் பகுதியில் 05குடும்பங்களுக்கும், கோட்டைகட்டியகுளம் பகுதியில் 05குடும்பங்களுக்கும், அம்பலப்பெருமாள் குளம் பகுதியில் 05குடும்பங்களுக்கும், அமதிபுரம் பகுதியில் 07குடும்பங்களுக்கும், துணுக்காய் பகுதியில் 08குடும்பங்களுக்குமாக மொத்தம் 255குடும்பங்கள் துணுக்காய் பிரதேச செயலர் பிரிவிலே காணியற்றவர்களாகக் காணப்படுகின்றனர்.

இந் நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் படையினராலும், வனஇலாகா, வனஜீவராசிகள் திணைக்களம் உள்ளிட்ட அரச இயந்திரங்களால் மக்களினுடைய காணிகள் அதிகளவில் அபகரிக்கப்பட்டிருப்பதற்கான புள்ளி விபரங்கள் எம்மிடமுள்ளன. இவ்வாறு அபகரிக்கப்பட்டுள்ள இந்த காணிகள் மீட்கப்பட்டு இவ்வாறு வலிந்து காணிகள் இல்லாமல் செய்யப்பட்ட மக்களுக்கு காணிகள் பகிர்ந்தளிக்கப்படவேண்டும்.

குறிப்பாக வன இலாகா மக்களிடமோ, கிராமஅலுவலர், பிரதேச செயலாளர், மாவட்டசெயலர் எவருடனும் தொடர்பு கொள்ளாமல், அறிவித்தல் வழங்கப்படாமலேயே இவ்வாறு மகாகளின் காணிகளில் எல்லைக்கற்கள் இடுகின்ற செயற்பாட்டில் ஈடுபடுகின்றனர். இனி இவ்வாறான செயற்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும்.

எமது வன்னிப் பகுதிகளில் நீண்டகாலமாக இடம்பெற்ற யுத்தம் காரணமாக தமது பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள், நீண்ட காத்திற்குப் பின்னரே தமது இடங்களில் மீளக்குடியேறியுள்ளனர்.

இந் நிலையில் அந்த மக்கள் இடப்பெயர்விற்கு முன்னர் வாழ்ந்த குடியிருப்புக் காணிகள், நெற்செய்கைக்காணிகள், மேட்டுப் பயிர்ச்செய்கைக் காணிகள் உள்ளிட்ட அனைத்துக் காணிகளும் பற்றைக் காடுகளாகக் காணப்படுகின்றன.

இவ்வாறு பற்றைக்காடுகளாகக் காணப்படும் மக்களின் காணிகளையே வன இலாகா, வனஜீவராசிகள் திணைக்களம் உள்ளிட்ட அரசதிணைக்களங்கள் எந்த அறிவிப்புக்களையும் செய்யாது தமது எல்லைக்கற்களை இட்டு ஆக்கிரமிப்புச் செய்கின்ற செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வாறு மக்களின் காணிகளை ஆக்கிரமிப்புச் செய்கின்ற திணைக்களங்களைச் சார்ந்தவர்கள் இவ்வாறான பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களுக்கு வருவதில்லை. இந்த அபகரிப்பாளர்கள் இந்த கூட்டங்களில் கலந்துகொள்ள வேண்டும். இவ்வாறானவர்களின் செயற்பாடுளை மிக வன்மையாகக் கண்டிக்கின்றேன்.

இவ்வாறான அபகரிப்புச் செயற்பாடுகள் முல்லைத்தீவு மாவட்டத்தின் சகல பிரதேசங்களிலும் பாரிய பிரச்சினையாகக் காணப்படுகின்றன. எனவே இந்த இந்தவிடயத்திற்கு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் முறையான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

ஏன் எனில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 2009இற்கு முன்னர் வனவளத் திணைக்களத்திடம் 2,22006ஏக்கர், 2009ஆம் ஆண்டிற்குப் பின்னர் அடாவடித்தனமாக எமது மக்களின் காணிகளுக்கும் எல்லைக்கல்லிட்டு 4,35000 ஏக்கர் காணிகள் வனவளத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டிலுள்ளது.

அந்த வகையில் 2009ஆம் ஆண்டுக்கு முன்னர் எமது மக்களின் காணிகளை விடுதலைப் புலிகள் பாதுகாத்தனர். அவ்வாறு எமது மக்களின் காணிகளை விடுதலைப்புலிகள் பாதுகாத்ததால்தான் எமது மக்கள் நிறைவாகவும், சிறப்பாகவும் வாழ்ந்தார்கள்.

நிலம்தான் எமது உரிமை, நிலம் இல்லையேல் எதுவுமில்லை. அவ்வாறிருக்க எமது மக்களின் காணிகள் அனைத்தையும் அபகரிப்புச் செய்தால், எமது மக்கள் காணியின்றி தெருவிலா இருப்பது எனவும் கேள்வி எழுப்பினார்.

(விஜயரத்தினம் சரவணன்)

ஏப்ரல் உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடைபெறுமா; வெளியாகிய அறிவிப்பு..!

0

இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் உள்ளாட்சித் தேர்தல்களை நடத்துவது குறித்து எந்த குறிப்பிட்ட முடிவும் எடுக்கப்படவில்லை என்றும், தொடர்புடைய சட்டச் சிக்கல்கள் தீர்க்கப்பட்ட பிறகு அதற்கான கோலம் தீர்மானிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணைக் குழு தெரிவித்துள்ளது.

கடந்த அரசாங்கத்தின் போது ஒத்திவைக்கப்பட்ட உள்ளாட்சித் தேர்தல்கள், 2025 ஏப்ரலில் நடைபெறும் என்று அண்மையில் தெரிவிக்கப்பட்டது.

இதுதொடர்பாக ​​தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவிக்கையில்,

ஏப்ரல் மாதத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை என்று கூறினார். “அவை வெறும் வதந்திகள். உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டத்தை நாடாளுமன்ற சபாநாயகர் ஒப்புதல் அளித்து, சட்ட நிலைமை சீராகும் வரை நாங்கள் எதுவும் செய்ய முடியாது.

உச்ச நீதிமன்றம் சபாநாயகருக்கு அனுப்பவுள்ள தீர்ப்பின் நகல்
இதற்கிடையில், அரசாங்கத்தால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட உள்ளூர் அதிகார சபைத் தேர்தல்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டத்தின் சில பிரிவுகளின் அரசியலமைப்புச் சட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் விசாரணையை உச்ச நீதிமன்றம் கடந்த வாரம் முடித்தது. அதன்படி, இதுவரை பகிரங்கமாக வெளியிடப்படாத ரகசிய தீர்ப்பு, நாடாளுமன்ற சபாநாயகருக்கு நேரடியாக அனுப்பப்படும் என்று நீதிமன்றம் அறிவித்திருந்தது.

முன்மொழியப்பட்ட மசோதாவின் சில விதிகள் மக்களின் வாக்களிக்கும் உரிமைகளை மீறுவதாகவும், அதன் மூலம் அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாகவும் வாதிட்ட நான்கு தரப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான இரண்டு நாள் விசாரணைக்குப் பிறகு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

எனவே, திருத்தத்தின் கேள்விக்குரிய விதிகளை நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் மட்டுமே நிறைவேற்ற முடியும் என்றும், வாக்கெடுப்பு மூலம் அங்கீகரிக்க முடியும் என்றும் அறிவிக்கும் தீர்ப்பை மனுதாரர் கோரியிருந்தார்.

இதேவேளை உள்ளாட்சித் தேர்தல்கள் ஆரம்பத்தில் மார்ச் 9, 2023 அன்று நடத்த திட்டமிடப்பட்டிருந்தன, ஆனால் நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சு மற்றும் திறைசேரி ஆகியவை தேவையான நிதியை தேர்தல் ஆணையத்திற்கு வெளியிடவில்லை, பின்னர் தேர்தல்களை ஏப்ரல் 25, 2023 அன்று நடத்த திட்டமிட்டன.

அந்த நேரத்தில் கூட நிதி விடுவிக்கப்படாததால், தேர்தல் ஆணையம் மீண்டும் தேர்தலை காலவரையின்றி ஒத்திவைத்தது. சமீபத்தில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த மற்றொரு தீர்ப்பு, உள்ளாட்சித் தேர்தலை விரைவில் நடத்த தேர்தல் ஆணையத்தை அறிவுறுத்துகிறது.

புரியாத புதிராக எனது நீதித்துறை வாழ்க்கை முடிவுறுகிறது..!

0

புரியாத புதிராக எனது நீதித்துறை வாழ்க்கை முடிவுறுகிறது என வவுனியா மேல் நீதிமன்ற முன்னாள் நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.

வவுனியா சட்டத்தரணிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் சிரேஸ்ட சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகம் தலைமையில், வவுனியா ஈரப்பெரியகுளம் பகுதியில் உள்ள விருந்தினர் விடுதியில் நேற்று (01) ஒய்வு பெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது. இந் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

வவுனியாவில் நீதவானாக 9 ஆண்டுகள், வவுனியாவில் மேல் நீதிமன்ற நீதிபதியாக 3 ஆண்டுகள் கடமை புரிந்துள்ளேன். திருகோணமலையில் 2000- 2010 இல் மேல் நீதமன்ற ஆணையாளராகவும், மீண்டும் 2012 – 2014இல் திருகோணமலை மேல் நீதிமன்ற ஆணையாளராகவும், 2018-2022 மேல் நீதிமன்ற நீதிபதியாகவும் 8 ஆண்டுகள் திருகோணமலையில் கடமை புரிந்துள்ளேன்.

கல்முனையில் ஒன்றரை ஆண்டுகள் மாவட்ட நீதிபதியாகவும், ஒன்றரை ஆண்டுகள் மேல் நீதிமன்ற நீதிபதியாகவும் என 3 ஆண்டுகள் கல்முனையில் கடமையாற்றியுள்ளேன்.

நான் பிறந்த மண் யாழ்ப்பாணத்தில் 2015-2018 வரை மூன்றரை ஆண்டுகள் மேல் நீதிமன்ற நீதிபதியாக கடமையாற்றியுள்ளேன். மட்டக்களப்பில் சிவில் மேன் முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக ஒராண்டு கடமை புரிந்துள்ளேன்.

எனது முதல் நியமனம் வவுனியா நீதவான் நீதிமன்றம். வவுனியாவில் மேல் நீதிமன்றம் அமைப்பதற்கான செயற்பாட்டில் ஈடுபட நீதிச்சேவை ஆணைக்குழுவால் 40 நாட்கள் நியமிக்கபட்டு, அதன் பின் மன்னார் மாவட்ட நிரந்த நீதவானாக சென்று 1997-2000 ஆண்டு வரை 3 ஆண்டுகள் கடமையாற்றி மீண்டும் வவுனியாவிற்கு நீதவானாக வந்தேன்.

தீர்ப்புக்கள் பற்றி நான் பேச விரும்பவில்லை. அது என்னுடைய கடமை. இருப்பினும் வருகின்ற 05.02.2025 இல் எனது 28 ஆண்டுகள் நீதிச்சேவை சேவைகள் முடிவுறுத்தப்படவுள்ளது. முதல் நிலை நீதிமன்ற நீதிபதியாக எனது நீதிச் சேவை முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

ஆனால், மேல் நீதிமன்ற நீதிபதிகள் 90 பேர் இருக்கிறார்கள். அதில் முதலாவது இலக்கத்தில் நான் இருக்கின்றேன். 12.12.2024 இல் உயர் நீதிமன்ற தீர்ப்பு பிறப்பிக்கப்பட்டது.

அனைத்து தடைகளும் விலக்கப்பட்டன. 12.01.2025 இல் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இருந்து 4 நீதிபதிகள் உயர் நீதிமன்றத்திற்காக பதிவி உயர்தப்பட்டார்கள். மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் 4 வெற்றிடங்கள் உள்ளன.

12.01.2025 இல் இருந்து அதற்கு தகமையானவன் நான். நான் தகமையாலும், இலக்கம் 1 இன்றில் இருப்பதாலும் நான் தகுதியானவன். எனது பிறந்த தினம் 20.01 ஆகும். மேல் நீதிமன்றம் 61 வயதை அடையும் போது முதல்நிலை நீதின்றம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.

காலத்தின் சோதனை, முடிவு இறுதிப்படுத்தப்படவில்லை எனவும் கூறுகிறார்கள். இறுதிப்படுத்தப்பட்டுள்ளது எனவும் கூறுகிறார்கள். 28 ஆண்டுகள் கடமை புரிந்தேன். புரியாத புதிராக எனது நீதித்துறை வாழ்க்கை முடிவுகிறது.

வேதனையா, சோதனையா, சாதனையா எதுவும் புரியவில்லை. அனைத்தும் நல்லதிற்கே என மனதை திருப்திப்படுத்தக் கூட முடியவில்லை.

ஆனால் இன்று பெருவிழாவை வவுனியா சட்டத்தரணிகள் சங்கம் ஒழுங்கமைத்து வடக்கு – கிழக்கு நீதிபதிகள், சட்டத்தரணிகள் இங்கு வருகை தந்ததையிட்டு உங்கள் நன்றி உணர்வை மதிக்கிறேன். நீங்கள் அருகில் நிற்கும் போது எனக்கு புத்துணர்வு வருகிறது. இன்னும் சாதிக்க வேண்டும். சாதனைகள் புரிய வேண்டு என்ற உணர்வு உள்ளுணர்வாக கிளம்புகின்றது.

இருப்பினும், சந்தோசமாக போவதற்கு நான் தயார். ஆனால் 2024 மே மாதம் 13 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிபதியாக நான் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும்.

வழக்குகள், தடையுத்தரவுகள் காரணமாக பின்னுக்கு சென்று வீடு செல்வதற்கு 8 நாட்கள் இருக்கின்ற நிலையில், நமது தலைவர் சீனா புறப்பட்டார். ஞாயிறுக்கிழமை உயர் நீதிமன்ற சத்திய பிரமாணம் இடம்பெறுகிறது.

12.01.2025 ஞாயிற்றுக் கிழமை. 13 ஆம் திகதி திங்கள் போயா. 14 ஆம் திகதி செவ்வாய் பொங்கல். திங்கள் இரவு ஜனாதிபதி சீனா பயணம். வெள்ளிக் கிழமை இரவு சீனாவில் இருந்து திரும்பி வந்தார். 18,19 விடுமுறை நாள். 19.01.2025 அன்று எனது இறுதி நாள்.

காலதாமதத்திற்கு நான் காரணமல்ல. காலதாமதம் என்னை ஓய்வு எடுக்க அனுப்பியது. காலதாமதமான நீதி மறுக்கப்பட்ட நீதி என்று நான் பல இடங்களில் பேசினேன். அந்த நீதி என் மீதும் தொடுக்கப்பட்டுள்ளது. எதையும் ஏற்றும் கொள்ளும் மனபாவம் வர வேண்டும்.

எனக்கு என்னை பற்றி பெரிதாக கவலையில்லை. எனது இரு குழந்தைகள், குடும்பத்தினர், உறவினர்கள், அவர்கள் வேதனைப்படுவது தான் கவலை. வீடு வேதனைப்படுகிறது. கண்முன்னே அனைத்தும் நடைபெறுவதை அனைவரும் பார்க்கிறார்கள். நீதி கேட்டு எங்கும் செல்ல முடியாத நிலைமை.

நீதிவான், மாவட்ட நீதிபதி, மேல் நீதிமன்ற நீதிபதி தலைவணங்காத ஒரு தொழில். அதற்கு மேல் செல்ல வேண்டுமானால் தலைகளும் ஒரு கணம் வணங்கும். அவைகளால் தான் இலக்குகள் தீர்மானிக்கப்படுகின்றன.

இதுவரை என்னுடன் ஒரு பாராளுன்ற உறுர்பினர்களோ, அமைச்சரோ கதைத்ததில்லை. இப்பொழுதும் அனைவரும் எனக்கு தொலைபேசி அழைப்பு எடுக்கிறார்கள் இது தான் நிலமை.

எனவே, இந்த நிகழ்வுக்கு வருகை தந்த நீதிபதிகள், யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொண்ட அனைத்து சட்டத்தரணிகளும் எனது நன்றிகனை தெரிவித்துக் கொள்கின்றேன் எனத் தெரிவித்தார்.

error: Content is protected !!